பொருளடக்கம் 167 / 300
மேவிருந்தும் மேலல்லார்
அச்சுப் பக்கம் 359–360 · ஸ்கேன் 376–377 · அதிகாரம் 98 (பெருமை) — குறள் 973
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
மடாதிபதியொருவர், பல்லக்கில் போய்க் கொண்டிருந்தார். பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்களுக்கோ கால்வலியும் தோள்வலியும் தாங்கமுடியவில்லை. அவர்களது துன்பத்தை மடாதிபதி எப்படி அறிவார்? அவரது வாய் ஆண்டவனின் திருநாமங்களை உச்சரித்துக் கொண்டிருந்தது. கையிலோ உருத்திராக்க மாலை! அந்த மணிகளை அவரது விரல்கள் உருட்டிக் கொண்டிருந்தன. சிந்தனையோ அவருக்கு வந்த வாழ்வு குறித்து சுழன்று கொண்டிருந்தது.
அந்த மடத்திற்கு ஏராளமான சொத்து சுகம் உண்டு. கண்ணுக்கெட்டிய தூரம் கழனிகள், தென்னந் தோப்புகள், கரும்புத் தோட்டங்கள், ஆற்றுப்படுகைகளில் ஆதீனத்திற்குச் சொந்தமான மூங்கில் காடுகள். அத்தனைக்கும் அதிபதியாகப் போகிறோம் என்று அவர் எதிர்பார்த்து அந்த மடத்திற்கு மாணவனாக வரவில்லை; ஏதோ வந்து சேர்ந்தார்; காவி யுடுத்தினார்; காகுத்தன், கைலைநாதன், கார்மேகவண்ணன் என்றெல்லாம் கடவுளர்களின் கதைகளைக் கற்றுக் கொண்டார். பெரிய மடாதிபதியின் பேரன்பைப் பெற்றார். பெரியவர், காலம் முடிவடையும் கட்டத்தில் அவரை மடத்தின் அதிபதியாக்கிவிட்டுக் கண்ணை மூடினார். அப்படி வந்த மேலான வாழ்வை எண்ணி மகிழாமல் இருக்க முடியுமா?
பல்லக்குப் போய்க் கொண்டேயிருந்தது. நீர்வீழ்ச்சியொன்றின் அருகே பல்லக்குக் கடந்து செல்லும்போது, மடாதிபதியின் திருவிழிகளில் ஒரு காட்சி தென்பட்டது. மங்கையர் இருவர் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு, நீர் வீழ்ச்சியில் தங்கள் தலை முதல் கால்வரையில் குளிர்ந்த நீர் தழுவிடும் இன்பத்தை அனுபவிப்பதிலே ஓர் உவகை! வேகமாக விழும் அந்த நீரினிடையே கண்ணாடிப் பேழைக்குள் தெரியும் கயல் மீன்களைப் போல் அவர்கள் தோற்றமளித்தனர். அவர்களின் மேலாடையைக் கீழே தள்ளிவிட்டு அந்த நீர்வீழ்ச்சி அவர்களின்
பொங்கிப்பூரித்த அங்கங்களைச் சுவைபார்த்துக் கொண்டிருந்தது. எஞ்சியிருந்த உடைகளும் அவர்களின் உடலோடு ஒருசேர ஒட்டிக் கொண்டு, இயற்கையின் படைப்பை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
மடாதிபதியின் கண்கள், நீர்வீழ்ச்சியின் பக்கம் பாய்ந்தன. அவர், தனது இமைகளைத் தாழ்ப்போட்டு மூடி, விழிகளுக்குத் தடை போடவில்லை. விழிகளைச் சுதந்திரமாகப் பறக்கவிட்டார். அவற்றைவிட அவர் இதயம் வலிவான இறக்கைகளைக் கட்டிக் கொண்டு நீர்வீழ்ச்சியின் பால் பறந்தது! கையிலிருந்த உருத்திராக்க மாலை உருளவில்லை. விரல்கள் அசைவற்றுப் போயின! இதழ்கள் இறைவன் நாமத்தை உச்சரிக்கவில்லை.
“ஏய்! பல்லக்கை நிறுத்துங்கள்! நாம் சற்று இளைப்பாற வேண்டும். உறக்கம் கண்ணைத் தழுவுகிறது.” என்று பல்லக்குத் தூக்கிகளுக்கு ஆணையிட்டார். பல்லக்குத் தூக்கியவர்கள் நின்றார்கள். அவர்களும் நீர்வீழ்ச்சியைப் பார்த்தார்கள். மடாதிபதியின் மனநிலை அவர்களுக்குப் புரிந்துவிட்டது. பல்லக்கைக் கீழே இறக்கி வைத்தார்கள். மடாதிபதி, நீர்வீழ்ச்சியையே பார்த்துக் கொண்டிருந்தார். பல்லக்குத் தூக்கிகளில் ஒருவன் பல்லைக் கடித்துக் கொண்டான். இருந்தாலும் ஆத்திரத்தைக் காட்டிக் கொள்ள முடியவில்லை, வெளிப்படையாக!
“அய்யன்மீர்! உங்கள் விருப்பம்போல் களைப்பாறுங்கள்! இதோ, வெயில் உள்ளே படாமல் இருக்க இந்தப் பட்டுத் திரையைப் போட்டு விடுகிறேன்”
என்று கூறிக்கொண்டே பல்லக்கின் இருபுறத்திலுமிருந்த பட்டுத்திரையை இழுத்து விட்டு நன்றாக மூடிவிட்டான். மடாதிபதிக்குப் பெரிய ஏமாற்றம்! “அரிய காட்சிக்குத் தடை விதித்துவிட்டானே முட்டாள்!” என்று முணுமுணுத்துக் கொண்டார்.
ஆட்கள் நடமாட்டத்தைக் கண்ட அந்த மங்கையரும் அங்கிருந்து உடனடியாக அகன்று விட்டனர். மடாதிபதிக்கு உறக்கமும் வரவில்லை; ஓய்வும் கொள்ளவில்லை. பட்டுத் திரையை நீக்கிவிட்டுப் பார்த்தார். அந்தப் பக்கம் பொற்சிலைகளைக் காணவில்லை. பல்லக்குத் தூக்கிகளோ ஒரு மரத்தடியில் அமர்ந்து, நீர்வீழ்ச்சியின் பக்கம் பார்க்காமலே வேறுபுறமாகத் திரும்பி உட்கார்ந்து ஏதோ சுவடி படித்துக் கொண்டிருந்தனர்.
மடாதிபதி; “என்னப்பா, என்னை இங்கே விட்டுவிட்டுப் படிக்கிறீர்கள்? என்ன அது?” என உருமினார்.
“திருக்குறள் படிக்கிறோம் ஆண்டவனே! மேல்நிலையில் இருந்தாலும் உயர்ந்த பண்பு இல்லாதவர்கள் மேலானவர்கள் அல்லவாம்! எங்களைப்போல் கீழ்நிலையில் இருந்தாலும் இழிந்த குணம் இல்லாதவர்கள் கீழ்மக்கள் அல்லவாம்! இது வள்ளுவர் கருத்து.”
இப்படிச் சொன்னார்கள் அந்தப் பல்லக்குத் தூக்கிகள்! மடாதிபதிக்கு முகம் வாடிப் போயிற்று! மீண்டும் பல்லக்குச் சவாரி தொடர்ந்தது.
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்”
அதிகாரம் - 98 - பெருமை; பாடல் - 973
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்