பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 166 / 300

நிறைமொழி மாந்தர்

அச்சுப் பக்கம் 357358 · ஸ்கேன் 374375 · அதிகாரம் 3 (நீத்தார் பெருமை) — குறள் 28

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அயல் நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இந்தியத் திருநாட்டைக் காண வந்தனர். வரலாற்றுப் பொன்னேடுகளாகத் திகழுகின்ற சிற்பக்குகைகள், ஓவிய மண்டபங்கள், பழங்கால மாளிகைகள், தொன்மை வாய்ந்த கோட்டைக் கொத்தளங்கள் அனைத்தையும் பார்த்து வியந்து போற்றினர்.

அடிமை விலங்கொடிக்க அயராது பாடுபட்டு, அன்பு வழியில் இந்திய நாட்டு விடுதலையைப் பெற்றுத்தந்து, மதவெறியன் ஒருவனால் படுகொலைக்கு ஆளான காந்தியடிகள் எரியூட்டப்பெற்ற இடம், எழில்மிகு இளமை காலத்தைக் கொடுஞ்சிறையில் கழித்துத் தியாக வாழ்வு நடத்தி, இந்திய மண்ணுக்குச் சுதந்திரம் கிட்டியபிறகு ஈடற்ற தலைவராகவும் இணையற்ற தலைமை அமைச்சராகவும் பல்லாண்டு காலம் பொறுப்பேற்று உலகில் சமாதானம் நிலவப் பாடுபட்ட நேரு பெருமானின் உடல் எரியூட்டப்பெற்ற இடம், அரசியலில் அருந்திறன் கொண்ட சிந்தனையாளர் மூதறிஞர் இராஜாஜிக்கு அமைக்கப்பட்ட நினைவாலயம், தியாகச்சுடர் காமராஜருக்கு எழுப்பப்பட்டுள்ள நினைவிடம், எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளாதே! ஏன்! எப்படி? எனக் கேள்! என்று பகுத்தறிவு ஒளிபரப்பிய பெரியாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம், அனைத்தையும் கண்டனர்.

தென்புலத்துச் சிங்கம் தேவர் திருமகனின் திருவுருவச் சிலையைப் பார்த்தனர் மதுரையம்பதியில்! தாழ்த்தப்பட்டோருக்கென உரிமைக்குரல் கொடுத்த அம்பேத்காரின் புகழ்பாடும் கல்வாரிகளைக் கண்டனர். மதப்புயல் எழாமல் அரணாகக்

காத்து நின்ற காயிதே மில்லத் அவர்களின் நினைவு கலையாமல் நின்றுகொண்டிருக்கும் கலைக்கூடங்களைக் கண்டனர்.

இந்தியாவின் வடபகுதியிலிருந்து தென்பகுதி வரையில் காணவேண்டிய சுற்றுலா இடங்கள் அனைத்தையும் பார்த்துப் பரவசமுற்ற அந்த அந்நியப் பயணிகளின் பார்வை, சென்னையின் நீண்ட கடற்கரைமீது விழாமல் இருக்குமா?

அந்தக் கடற்கரையில் தென்னஞ்சோலைகளுக்கிடையே, கருமை நிறப் பளிங்குக் கற்களால் ஆன கல்லறையை நோக்கின அவர் தம் கண்கள்!

அணிந்திருந்த காலணிகளையெல்லாம் தொலைவிலே கழற்றிவைத்துவிட்டு, அமைதி குடிகொண்டிருந்த அந்தச் சோலையில் நடந்தனர்.

கல்லறையில் எரிந்துகொண்டிருந்த என்றும் அணையாத விளக்கு, அவர்களை வரவேற்றது!

நெடிய தூண், அவர்கள் வருகையைக் கல்லறைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தூயவருக்கு உணர்த்துவதுபோல் நின்று கொண்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகள், கல்லறையைத் தங்கள் கண்களால் தொழுதனர்.

“எதையும் தாங்கும் இதயம் இங்கே உறங்குகிறது.”

அந்த வாசகத்திற்குப் பொருள் புரிந்து கொள்ள அயல்நாட்டினர் அவாக் கொண்டனர். மொழிபெயர்ப்பாளர் விளக்கினார்.

“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - என்ற மூன்று சொற்களை மறைமொழிகளைப் போலத் தமிழர்களுக்குத் தந்தவர்! எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று தன்னைப் பின்பற்றியோருக்கு வலியுறுத்தியவர்! அந்த இதயத்துக்குச் சொந்தக்காரர் - அவர் பெயர்தான் அண்ணா! அண்ணாதுரையாகப் பிறந்தார்! இத்தகைய மறைமொழிகளை என்றும் அழியாத அளவுக்குத் தந்த காரணத்தால் அண்ணாவாக மறைந்தார்!”

அந்த விளக்கம்கேட்ட அயல்நாட்டுச் சுற்றுப்பயணிகள், கல்லறையைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டனர்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு - அந்தச் சொற்களின் ஆழத்தை ரசித்தனர்! புகழ்ந்தனர், போற்றினர்!

‘பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் சிறப்பை, உலகில் அழியாமல் விளங்கிடும் அவர்களது மறைமொழிகள் காட்டிவிடும்’

என்ற குறள் கருத்தின் மாண்பும் அந்தப் பயணிகளுக்கு விளக்கப்பட்டது.

“நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்”

அதிகாரம் - 3 - நீத்தார் பெருமை; பாடல் - 28

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்