பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 165 / 300

பொறாமை அஞ்சும்

அச்சுப் பக்கம் 355356 · ஸ்கேன் 372373 · அதிகாரம் 130 (நெஞ்சொடு புலத்தல்) — குறள் 1295

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மணல் மெத்தை விரித்திருக்கும் கடற்கரையில், மாங்களியும் பூங்கொடியும் கையைத் தலைக்கு முட்டுக்கொடுத்தவாறு நிலா இரண்டு நிலத்திற்கு இறங்கி வந்ததைப் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தனர். பூங்கொடியின் பூவிதழ்களில் புன்னகை ஒளி! மாங்களியின் முகமோ வாடிய மலர்போல்! அந்தத் தங்கச் சிலைகளிரண்டின் அங்கங்களைக் கண்டு களித்திட, ஆடைகளைத் தொட்டிழுத்துக் கடற்காற்று குறும்பு விளையாட்டில் ஈடுபட்டிருந்தது.

அலைகளுக்கும் ஆசைபோலும்! திடீரென ஓரலை வந்து தனது முத்துநுரை எச்சிலால் மாங்களியின் முழங்கால்வரை நனைத்துவிடும். மற்றோர் அலையோ பூங்கொடியின் தொடையினைத் தொடுவதற்கு எத்தனிக்கும். காற்றின் குறும்பும் கடலலைகளின் சேட்டைகளும் அவர்களிருவரின் உருக்கமிகு உரையாடலைக் கெடுத்துவிடவில்லை.

“மாங்களி! நானும் கவனித்துக் கொண்டேயிருக்கிறேன் உன்னை! எப்போது பார்த்தாலும் உன் வட்ட மதிமுகம் வாட்டமுற்றே இருக்கின்றதே! அதற்கென்னதான் காரணம்? கொஞ்சம் சொல்லேன்!”

“பூங்கொடி! உன்னிடம் மனம்விட்டுப் பேச என்றைக்காவது நான் தயங்கியதுண்டா? நேற்றிரவு நடந்த இன்ப நிகழ்ச்சியை நினைத்துப் பார்த்தேன்...”

“ஓகோ! விண்மீன்கள் வெட்கியோட கடற்கரை மண்மீது கொட்ட மடித்தார்கள்! அலைகளை ஆடும் படுக்கையெனக் கொண்டு அமளி நடத்திக் குதித்தார்கள்! வெண்மணலையள்ளி ஒருவர் மீதொருவர் வீசிக்கொண்டு ஈரத் தரையில் உங்கள் காதல் வீரத்தைக் காட்டிக் கொண்டார்கள்! சரி! இன்னும் என்னென்னவோ செய்தீர்கள்! அதை நினைத்து நினைத்து மகிழ வேண்டுமே தவிர - மலர் கூம்பியதுபோல முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாயே; ஏன்?”

“பூங்கொடி! உனக்கென்ன தெரியும் என் வேதனை?”

“ஏன்; உடம்பெல்லாம் நோகிறதா இன்று?”

“சே! வாயை மூடு! என் கவலை என்ன தெரியுமா? வாரி வாரி இன்பத்தை வழங்கிய அந்த வள்ளல் என்னைவிட்டுப் பிரிந்திருக்கிறாரே; இன்னும் என்னை வந்து காணவில்லையே! அதை நினைத்துத்தான் துடித்துப் போகிறேன்.”

“என்னடி இது வம்பு! நேற்றுத்தான் காதலாற்று வெள்ளத்தில் நீச்சலடித்திருக்கிறாய்! அதற்குள் இன்று அவரை அடைய வேண்டுமே என எண்ணிக் கவலையா?”

“நீ என்னை முழுமையாக உணரவில்லையே பூங்கொடி! அவர் என்னை வந்து சேராதபோது இன்னும் வந்து சேரவில்லையே என்ற துன்பம்! சேர்ந்துவிட்டாலோ அப்போதும் என் மனத்துக்குத் துன்பம்தான்! என்னை அள்ளுவார், துள்ளுவேன்! அணைப்பார், இதழ் நனைப்பார்! அப்போதும் எனக்குத் துன்பம்தான்! ‘அப்போதுகூட என்னடி துன்பம்’ எனக் கேட்பாய்! இவ்வளவு இன்பத்தைத் தருகின்றவர் என்னை விடுத்துப் பிரிந்து செல்வாரே என எண்ணி அழும் என் உள்ளம்! ஆகவே, அவரை நான் அடையாதபோது, அடைய முடியவில்லையே என்று அஞ்சுவேன்! அடைந்து விட்டாலோ; வரப்போகிற பிரிவை நினைத்து அஞ்சுவேன். எல்லா வகையிலும் என் நெஞ்சம் துன்பத்தையே அனுபவிக்கிறது.”

அவளது துன்பமான துன்பத்தையும் - இன்பமான துன்பத்தையும் - அவள் வாயிலாகவே கேட்டுப் பூங்கொடி, “களுக்” கென்று சிரித்தாள்.

“பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு”

அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1295

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்