பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 164 / 300

அ. தொகச்சொல்லித் தூவாத / ஆ. இறுதி பயப்பினும்

அச்சுப் பக்கம் 353354 · ஸ்கேன் 370371 · அதிகாரம் 69 (தூது) — குறள் 685, 690

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அன்னம் விடு தூது, கிளி விடு தூது, நாரை விடு தூது என்பன போன்ற எத்தனையோ கவிதைகள் தமிழ் மொழியில் பிறந்துள்ளன. வரலாறுகளிலும் புராண இதிகாசங்களிலும் தூதுவர்கள் பற்றிய குறிப்புக்களும் அவர்களாற்றிய அரும்பெரும் செயல்களும் இடம் பெற்றுள்ளன. தூது செல்பவர் எத்தகைய ஆற்றல் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதையும் தன் தலைவன் பால் எத்துணை உளப்பூர்வமான பற்றுக் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதையும் பொருட்பாலில் அரசியல் பற்றிப் பேசுகின்ற வள்ளுவர், “தூது” எனும் அதிகாரத்தில் மிக அழகுற விளக்குகிறார்.

சொல்லப்பட்ட இடத்திற்குச் சென்று சொன்ன வேலையைச் செய்துவிட்டு வெறும் எடுபிடிகளாக இருப்பவர்கள் சிலர், தங்களைத் தூதர்கள் என்று விளம்பரப்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயம் தேடும் காலம் இது!

இவர்கள் தூதர்களுமல்ல; தூதர்களின் இலக்கணம் இதுவுமல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது திருக்குறள்.

இரு நாடுகளுக்கிடையே நட்புறவு நிலைக்க வேண்டுமென்பதற்காகத் தூதன் பணியாற்றுவதுண்டு.

தனது நாட்டின்மீது வீண் பகைகொண்டு, வெறுப்பு மிகுதியால் போரிடத் தயாராகும் பகைநாட்டு மன்னனிடம் விளக்கங்கள் அளித்து, அவை பயனற்றுப் போனபிறகு, “போருக்கான அறைகூவலை ஏற்றிட எமது மன்னனும் தயார்தான்” எனச் சுடர்முகந்தூக்கி சூளுரைத்துவிட்டு வரும் தூதனும் உண்டு!

இரு சாராருக்கிடையே எழுந்திடும் காழ்ப்பு உணர்ச்சியைக் குறைத்து மோதுதலைத் தவிர்த்திட வேண்டுமென முயற்சி மேற்கொள்கிற ஒரு தூதுவன், தான் யாருடைய சார்பில் செல்கிறானோ - அவர்களுக்காகப் பல்வேறு கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்துச் சொல்லும் ஆற்றல் உடையவனாகவும் அதே சமயத்தில் சொல்லத் தேவையற்ற பயனற்றவைகளைச் சொல்லாமல் விலக்கிடும் பண்பு கொண்டவனாகவும் இருந்திட வேண்டுமென வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கிற சொல்லவன்மை ஆகியவை, தூது உரைப்பவருக்குத் தேவையானவை என்றும் கூறுகிறார். கற்பன கற்று, பிறருடைய பகை நிறைந்த பார்வைக்கு அஞ்சாமல், கேட்போர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லுகிற திறனும் தூதுவனுக்கு வேண்டுமென வலியுறுத்துகிறார். தூய ஒழுக்கம் உடையவனாகவும் - துணை உடையவனாகவும் - துணிவு உடையவனாகவும் தகுதி பெற்றிருப்பவனே தூதனாகப் பணியாற்ற முடியும் என்றும் இலக்கணம் வகுக்கிறார். தனக்கு அழிவே வருவதாக இருந்தாலும் அதற்காக அஞ்சிடாமல், தன் தலைவனுக்கு நன்மை ஏற்படுமாறு கடமையாற்றுகிறவனே நல்ல தூதன் என்றும் அடையாளம் காட்டுகிறார்.

பயனற்றவைகளை நீக்கி, பலவற்றைத் தொகுத்துச் சொல்லித் தன் தலைவனுக்கு நன்மை உண்டாக்குகிறவனே தூதன்! அஃதன்றி, தலைவனையே பகைவர்களிடம் காட்டிக் கொடுத்துத் தன்னையும் தன் சுற்றத்தாரையும் காத்துக் கொள்கிறவன் தூதனல்ல; அவன் ‘சுதன்!’

தலைவனுக்கு நன்மை தேடுகிற தூதனைப் பற்றி, இதோ இந்தக் குறள் குறிப்பிடுகிறது.

“தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது”

தனக்கேற்படும் அழிவைப் பற்றிக்கூட அஞ்சாது, தன் தலைவனாம் அரசனுக்கு உண்மையான பற்றுள்ளவனாக இருந்து நன்மையை விளைவிப்பவனே தூதன் என்று விளக்குகிற குறள் இதோ :

“இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது”

அதிகாரம் - 69 - தூது; பாடல்கள் - 685, 690

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்