பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 163 / 300

உவந்துறைவர் உள்ளத்துள்

அச்சுப் பக்கம் 351352 · ஸ்கேன் 368369 · அதிகாரம் 113 (காதற் சிறப்புரைத்தல்) — குறள் 1130

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“பொன் வேண்டேன் - பொருள் வேண்டேன் - மண்ணாளும் மகராசர் தருகின்ற புகழ் வேண்டேன் - எந்நாளும் கண்ணாளர் அருகிருந்தால்; ஊன் வேண்டேன் - உயிர் வேண்டேன் - தேன் வேண்டேன் - தேவர் வாழ் உலகும் வேண்டேன்!”

எனத் தன் மடியிற் கிடத்தியவாறு கோவலனின் முகத்தில் முகம் புதைத்து மாதவி நல்லாள் காதல் மொழி இசைத்திட, அசைந்திடும் அவள் இதழ் அழகை விழிகளால் மொண்டு மொண்டு குடித்துக் களித்து மயங்கிக் கிடந்தான் மாசாத்துவான் மைந்தன்.

“மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே! தேனே! மலையிடைப் பிறவா மணியே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ!”

இவ்வாறு அன்பு பொழிந்து அணைத்து மகிழ்ந்தானே கண்ணகியை; அணைத்ததையும் எப்படித்தான் மறந்தான் எனக் கேட்கத் தோன்றும் சிலப்பதிகாரம் படிப்பவர்க்கு!

வணிகர் குலத்துதித்த அந்த வண்ண இளம்புறாக்கள், வாழ்வெனும் வானில் சிறகடித்துப் பறந்த எழிலையெல்லாம் பூம்புகாரில் உள்ள அவர்தம் உற்றார் உறவினர் கண்டு வியந்த காலமும் இருந்ததல்லவா?

அந்தக் கற்புத்திரு கண்ணகியைப் பிரிந்து கலைக்கோயிலின் ‘கார்ப்பக்கிரகம்’ வரையில் சென்று மணிமேகலையாம் மழலையமுதையும் பெற்றெடுத்துவிட்டானே; என்னே - அந்தக் கோவலனின் கொடிய உள்ளம்! என்னே கடிய சிந்தை அவனுக்கு? புகார் நகரம் இப்படிப் புகார் எழுப்பியது. மாங்கனிதான் மாதவி எனினும் அதற்காகப் பலாச்சுளைப் பத்தினியை மறப்பது நன்றோ! ஊர் கேட்டது, உற்றார் கேட்டனர்!

அன்பில்லாக் கோவலன் - நல்ல பண்பில்லாக் கோவலன் - அன்பும் பண்பும் இருப்பின் கண்ணகியைப் பிரிந்திருப்பானா?

கண்டனக் கணைகள் கிளம்பின, கண்ணகிக்கோ மேலும் ஒரு கவலை! கணவனைப் பிரிந்திருக்கும் துன்பத்தைவிட, அவனை அன்பில்லாதவன் என ஊரார் தூற்றுவது அவளுக்குப் பெருந் துன்பமாகிவிட்டது.

கண்ணகிக்குத் தேவந்தியைவிட நெருங்கிய தோழி ஒருத்தி உண்டு. அவள்தான் கண்ணகியின் மனச்சாட்சி! அவளிடம் கண்ணகி, தன் பெருமையைத் தலைநிமிர்ந்து சொல்லிக் கொண்டாள்.

“காதலன் எப்போதும் என் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனால், அதை இந்த ஊரார் அறியாமல், ‘அவன் என்னைப் பிரிந்து வாழ்கிறான். அன்பில்லாதவன்’என்று வீணாக அவனைப் பழிக்கின்றாரே!”

கண்ணகியின் இந்த உறுதியான அன்புப் பெருக்கினைத்தான் இதோ இந்தக் குறள் விளக்குகிறது.

“உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர்”

அதிகாரம் - 113 - காதற் சிறப்புரைத்தல்; பாடல் - 1130

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்