பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 162 / 300

எல்லைக்கண் நின்றார்

அச்சுப் பக்கம் 349350 · ஸ்கேன் 366367 · அதிகாரம் 81 (பழைமை) — குறள் 806

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இந்தியத் திருநாட்டின் விடுதலைப் போராட்டத்தை, அமைதி வழியில் காந்தியடிகள் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வழி, வெற்றியினை விரைவில் தாராது எனக் கருதிய இளைஞர்கள், சுதந்திரப் போராட்டத்தை வன்முறைப் பாதையில் முடுக்கிவிட்டனர். அவர்தம் இதயத்தில் மூண்டெழுந்த இலட்சியக் கனல் அவர்களை ஒரு பாசறையின் பாசமிக்க நண்பர்களாக ஆக்கியது. பகத்சிங், இராஜகுரு, சுகதேவ், ஜெயகோபால் ஆகிய இளைஞர்கள், வெள்ளைக்கார ஆட்சியைத் தங்கள் தலைமையில் நடத்துகின்ற புரட்சியின் வாயிலாக வெளியேற்றி விடலாமென நம்பினர்.

ஒரு வெள்ளைக்கார அதிகாரியின் வெறித்தன்மைக்குப் பாடம் புகட்ட, அந்த அதிகாரியைக் கொன்றனர் அவர்கள்! கொல்லுவதற்குமுன்பு அதற்கான சதித்திட்டம் வகுக்கப்பட்டதாகவும் திட்டமிட்டே கொலையைச் செய்து முடித்ததாகவும் அவர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர்களுக்குக் கொடுந்தண்டனை அளித்திட வேண்டுமென்பது வெள்ளை அரசாங்கத்தின் எண்ணம்!

அந்தக் கூட்டத்தில் இருந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி நடுங்கினான், அவர்களோடு நண்பனாகப் பழகிக் கொண்டிருந்த ஜெயகோபால்!

வெள்ளையரின் கழுகுக் கண்களிலேயிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டுமென்று துடித்தான். அவனது துடிப்பை உணர்ந்த வெள்ளை அரசின் அதிகாரிகள் அவனை நெருங்கினர்! அச்சுறுத்தினர்! ஆசை காட்டினர். தனது நண்பர்களாம் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரையும் காட்டிக் கொடுக்க உடன்பட்டான்! நீதிமன்றத்தில் அவர்களைக் காட்டிக் கொடுத்து, “சதிகாரர்கள்!!” என்றும் “கொலைகாரர்கள்” என்றும் சாட்சியம் சொன்னான். தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்! கால் தூசுக்கும் கீழாக வரலாறு அவனை இழித்துரைக்கிறது!

பகத்சிங்கிற்கு மரணதண்டனை! அவன் பதைக்கவில்லை! வரவேற்று மகிழ்ந்தான்! தங்களின் நண்பன் - இலட்சிய மாவீரன் பகத்சிங்குடன் சேர்ந்து அழிவதே அவனுடன் இணைந்து ஆற்றிய இலட்சியப் பணிக்கும் கொண்டிருந்த நட்புக்கும் பெருமை தரக்கூடியது என்று இராஜகுருவும் சுகதேவும் - தங்கள் உயிர்க்காக யாரிடமும் மன்றாடாமல் நாட்டுமீட்கும் போரில் தங்கள் நண்பனுடன் தூக்குக் கயிறுகளை முத்தமிட்டார்கள்!

அந்தச் சரித்திர வரிகளை இன்றைக்கும் நாட்டுமக்கள் முத்தமிட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள்.

நட்பின் பெருமையை உணராதவர்கள்தான், இன்னல் வந்துற்றபோது நண்பனை விட்டு விலகி ஓடிவிடுவார்கள்! எடுத்துக்காட்டு, இழிமகன் ஜெயகோபால்!

நட்பின் சிறப்பை உணர்ந்து பழகுகிறவர்கள், அதனால் அழிவே வந்த போதிலும் நட்புக்கொண்டவரின் தொடர்பை அறுத்துக் கொள்ளமாட்டார்கள்!

இந்த உணர்வை விதைப்பதுதான்; இதோ - இந்தக் குறள் :

“எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.”

அதிகாரம் - 81 - பழைமை; பாடல் - 806

தொல்லைக்கண் நின்றார் = நீண்ட நாள் நட்புக் கொண்டோர் தொலைவிடத்தும் = அழிவு வந்தபோதும்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்