பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 161 / 300

வலியார்முன் தன்னை

அச்சுப் பக்கம் 347348 · ஸ்கேன் 364365 · அதிகாரம் 26 (அருளுடைமை) — குறள் 250

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

சீராளன், ஒரு மலை நாட்டின் சிற்றரசன். வளம் நிறைந்த காடுகளே அவன் நாட்டின் தலைசிறந்த கருவூலம். ஆண்டு வருவாயில் ஒரு பகுதியைப் பேரரசன் பெம்மானுக்குக் கப்பமாகச் செலுத்த வேண்டும். எஞ்சிய நிதியைக் கொண்டு மலைநாட்டு மக்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தர வேண்டும்.

சீராளன், பேரரசுக்கு வழங்க வேண்டிய கப்பத்தை ஒழுங்காகக் கட்டி விட்டு, மிஞ்சுகிற மலைநாட்டுச் செல்வத்தில் பெரும்பகுதியைத் தன் ஆடம்பர வாழ்க்கைக்கும், அரண்மனைப் பராமரிப்புக்கும், அரசியின் அணிமணிகளுக்கும் செலவழித்தான்.

அரசாங்க ஊழியர்க்கும் படை வீரர்களுக்கும் ஊதியமளிக்கக் கடுமையான வரிகளை மக்கள் மீது விதித்தான். மலைநாட்டு விவசாயிகள் தாங்க முடியாத வரிச்சுமையினால் தவித்தார்கள்; திகைத்தார்கள். அவர்தம் வியர்வைத் துளிகள் -

குருதிப் பெருக்கு அனைத்தும் வரியாகச் சுரண்டப்பட்டு அந்த விவசாயக் குடிமக்கள் அழுது அழுது நீர் வற்றிய கண்களோடு நின்றிருந்தனர்.

சீராளன் மேலும் ஒருபடி ஏறிச்சென்று, அரசாங்க ஊழியர்களின் ஊதியத்தையும் ஒழுங்காகக் கொடுக்காமல், அதனைத் தனது இன்பக் கேளிக்கைகளுக்கு எடுத்துக் கொண்டான்.

ஊழியர்கள், சிற்றரசன் சீராளனை எதிர்த்துக் கொடி உயர்த்தினர். அவர்களை அடக்கப் படை வீரர்களைப் பயன்படுத்தினான். ஊழியர்களின் குமுறலும் கொந்தளிப்பும் அடங்கவில்லை. எதிர்ப்புக் கிளர்ச்சி நின்றபோதிலும் அவர்தம் உள்ளத்தில் எழுந்த சினம், நீறுபூத்த நெருப்பாக இருந்தது.

சிற்றரசன் அடுத்து ஒருபடி மேலேசென்று, படைவீரர்களின் ஊதியத்திலும் கைவைத்தான். தேன் கூட்டில் கைவைத்த கதையாக - வீரர்கள் சீராளனை எதிர்த்து முரசு கொட்டினர்.

அவர்களை அடக்கி ஒடுக்கப் படைத் தளபதிகள் முடுக்கிவிடப்பட்டனர்.

வரி கொடுக்க முடியாமல் வாடிய விவசாயிகள், சீராளனால் மிரட்டப்பட்டுச் சீரழிந்தனர்.

அரசாங்க ஊழியர்களோ அடக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

படைவீரர்களும் பழிவாங்கப்பட்டுப் பரிதவித்தனர்.

சீராளன், காவச் சிரிப்பு சிரித்தான். “என்னை எதிர்த்தோர் வாழ்ந்ததில்லை” என எகடியம் பேசினான். எவரானாலும் அடக்கியே தீருவேன் என்று ஆணவக்குரல் கொடுத்தான்.

இதற்கிடையே சீராளன், மலைநாட்டில் நடத்தும் நெறியற்ற ஆட்சிபற்றிப் பேரரசுக்குச் செய்தி கிட்டியது. சீராளனை உடனே வருமாறு பேரரசன் பெம்மான் ஆணை பிறப்பித்தான்.

சென்ற சீராளன் மீது பேரரசன் சீறிப்பாய்ந்தான். மலைநாட்டு மக்கள் மீது அதிகம் வரிசுமத்தி, அநியாய ஆணைகளைப் பிறப்பித்து அவர்களைக் கதறியழச் செய்த சீராளன், பேரரசின் முன்னே மண்டியிட்டு, “பெருமானே! என்னை மன்னித்து விடுக!” எனக் கெஞ்சினான்.

தமிழ் மறையாம் திருக்குறளைப் படித்துத் தெளிந்த பேரரசனாம் பெம்மான், சீராளனுக்கு வள்ளுவர் தந்த அறிவுரையொன்றை நினைவுபடுத்தினான்.

“தன்னைவிட மெலிந்தவர்களைத் துன்புறுத்தும்போது, தன்னைவிட வலியவர்களின் முன்னால் அஞ்சிநிற்கும் நிலைமை தனக்கு ஏற்படுவதை நினைத்துப் பார்க்க வேண்டும். அதை நினைத்தால் மெலியாரை வாட்டுகின்ற எண்ணம் எழாது!”

சீராளன், வலியாரிடம் பணிந்து, மெலியாரிடம் மிரட்டுகின்ற தனது இயல்பை எண்ணி வெட்கித் தலைகுனிந்து மரம் போல நின்றான்.

“வலியார்முன் தன்னை நினைக்கத்தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து”

அதிகாரம் - 26 - அருளுடைமை; பாடல் - 250

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்