பொருளடக்கம் 160 / 300
நிறைநெஞ்சம் இல்லவர்
அச்சுப் பக்கம் 345–346 · ஸ்கேன் 362–363 · அதிகாரம் 92 (வரைவின் மகளிர்) — குறள் 917
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
வீரர் கோட்டம் - வீரர் பாசறை - இப்படித் திக்கெட்டும் புகழ்ந்தது உரோமாபுரி குறித்து! அந்த நாட்டினை ஆளுதற்கு மகுடம் புனைந்தோர்: படைபல குவித்துக் கடைபல கடந்து பிறநாட்டார் கோட்டைகளில் தமது கொடிகளை ஏற்றி, வெற்றி முரசு கொட்டி மகிழ்ந்தனர்! அவர் தம் குதிரைகளின் குளம்படிச் சப்தம் கேட்டு எதிரிகளின் கூடாரம் அதிர்ந்தது! அலறியது! போர்க்களத்தை விளையாட்டுத் திடலாக எண்ணிக் கொண்டு, உடலில் படும் விழுப்புண்களையே வெற்றிக்குரிய எண்களாகக் கருதிக் கணக்கிட்டுக் கொண்டு வாள் தூக்கிப் பாய்ந்தனர், பகையின் தாள் வணங்கி அறியாத அந்த மாவீரர்கள்! கொப்பளிக்கும் குருதி கொண்டு தங்கள் சாம்ராஜ்யத்தின் எல்லைக் கோடுகளை வரைந்து களித்தனர், அந்த வளையாத வைரநெஞ்சினர்! தொட்டிலிலேயே வீரம் பயின்று, தொகை தொகையாய் எதிரிகளை வெட்டிச் சாய்க்கும் மறவர்களின் மண்ணாக விளங்கிய உரோமாபுரி, பிறிதொரு காலத்தில் கட்டிலில் கண்ட சுகத்தையே சொர்க்கமென்றும் - சொர்க்கமும் அந்தச் சுகத்திற்கு ஈடில்லையென்றும் கூறி, அதனைச் செயலில் காட்டவும் தொடங்கியது!
போர்க் கருவிகளைத் தூக்கிப்பிடித்த புலிநிகர்த்த வீரமன்னர்கள், போர்க்கருவிகளாம் கேளிக்கை அரசிகளைத் தாங்கிப்பிடித்துத் தழுவத் துடித்து, மெல்லிய இதழைக் கடித்து, இளந்தளிர் மேனியைச் சுவைத்து இன்பத்தில் மூழ்கினர்! இரவு
விளக்குகளில் மிதந்தனர்! அந்த அழகிகளோ, அவர்கள் பெற்றிருக்கும் போதையேறிய கண்கள், புருஷர்களை வீழ்த்துவதற்கென்றே அமைந்துள்ள மோகனாஸ்திரங்கள் என எண்ணி, அரசர்களை மடியில் போட்டுக்கொண்டு அரசாங்கத்தைத் தமது பிடியில் வைத்துக் கொண்டனர்.
அரசர்க்கு ஆலோசனை வழங்க அமைச்சர்கள் தேவைப்படவில்லை! அழகியின் அதரங்களில் நனைந்த திராட்சைரசக் கிண்ணங்களின் அருள் தொடர்ந்தால் போதும்; அதுவே ஆண்டவனே நேரில் வந்து வழங்கும் அற்புத ஆலோசனைக்குச் சமம் என்றனர், அழகியின் இடையினைத் தடவியவாறு! “குறைகள் தீர்த்திடுக மன்னவா!” என்று குடிபடைகள் கூட்டமாய் வருவார்! “உனக்கென்ன குறை? அதை உரைத்திடு கோமளாங்கி!” என்று மஞ்சத்தில் உருண்டு, அவள் மலர்ப் பாதங்களைக் கன்னங்களில் ஒற்றிக் கொள்வான் மன்னன்! ஆட்சிக்குரியவன் அம்சதூளிகா மஞ்சத்தில் ஆடை அணிகள் போனஇடம் தெரியாமல், அவளே உலகம் என்று மந்திரம் ஒப்பிப்பான்! அவளோ அவனைக் கட்டியணைத்து காமத் தீயில் வேகவைத்துக் களைப்புறச் செய்து கண்ணயர விடுவாள்! பின்னர் ஆட்சிக்கோல் அவள் கையில்! அரசின் கருவூலம் அவள் கட்டளைப்படி திறக்கும்! மயக்கம் தெளிந்து எழுவான் மன்னன்! மதுவைத் தன் வாயிலே நிரப்பி, பின்னர் அதனை அவன் வாயிலே நிரப்புவாள்! இரட்டைப் போதையில் மீண்டும் சுருள்வான்! அழகி, இட்டதே சட்டம்! உரைத்ததே கட்டளை! அவளுக்குக் காதல், அன்பு, பாசம், கணவனின் நலம் இப்படி எதையுமே பற்றிக் கவலையில்லை! தனது உடலின் வனப்பு - தனது அழகின் சிறப்பு - இந்த மூலதனத்தைக் கொண்டு அவனையும் அவன் அரசையும் ஆட்டிப் படைத்திட வேண்டும்! ஐஸ்வர்யம் குவித்திட வேண்டும்! அணைத்து மகிழ்வோர் யாராயினும் கவலையில்லை! அரண்மனையின் சுகபோகங்களைத் தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும்! அந்தச் சொகுசுக்காரிகளின் விழிவீச்சிலே உரோமாபுரி வேந்தர்கள் பலர் உருத்தெரியாமல் போயினர்! அதன் விளைவு; உரோமாபுரியே சீரழிந்தது! சிதறுண்டது! பொதுமக்களைவிட இழிவான இன்பவல்லிகளின் சரச சல்லாபங்களால் ஒரு மாபெரும் சாம்ராஜ்யமே மண்மேடாயிற்று! இதனை வரலாறு உணர்த்துகின்றது!
இதோ வள்ளுவரும் உணர்த்துகிறார்;
“நெஞ்சத்தை உறுதியுடன் அசையாமல் வைத்திருக்கும் ஆற்றல் இல்லாதவர்கள்; வேறு காரியங்களை மனதில் எண்ணிக்கொண்டு மயக்குமொழி பேசுகிற பொதுமகளிரின் தோளைத் தழுவிக் கெடுவார்கள்.”
“நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வர் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள்”
அதிகாரம் - 92 - வரைவின் மகளிர்; பாடல் - 917
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்