பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 159 / 300

நெஞ்சில் துறவார்

அச்சுப் பக்கம் 343344 · ஸ்கேன் 360361 · அதிகாரம் 28 (கூடா ஒழுக்கம்) — குறள் 276

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“மண் எதற்கு?

பொன் எதற்கு?

மயக்கும் விழிப் பெண் எதற்கு?

மகேசன் அருள் பெற்றுவிட்ட எனக்கு - இந்தப் பற்றெல்லாம் பட்டொழிந்து போயிற்று. அய்யன் திருவடிகளே எனை ஆட்கொண்ட பெரும்பற்று! மண்ணும் பொன்னும் மாயப்பெண்ணும் அடியேனுக்குப் பாம்புப் புற்று!

தண்ணீரும், தவமும் காற்றுமே என்னுடைய உணவாக - தருநிழல்களே நான் தங்கி வாழும் மனைகளாக - மான்தோல் மட்டுமே என் மானங்காக்கும் ஆடையாக எனக்குக் கிட்டினால் போதும்!

பெம்மான்! எம்மான்! அவனது பாதங்களில் பேரின்பப் பெருக்கில் திளைப்பதைக் காட்டிலும் அழிந்திடும் சிற்றின்ப சுகத்தை நாடிச் செல்வோர் அறிவிலிகள் என்பேன்!

உடல் கலந்து உருண்டு புரண்டு உலகை மறந்தோம் எனப் புலம்பிக் களிக்கும் உல்லாசம் - சல்லாபம் - எல்லாமே நிலையற்ற உலகத்தில் உருவற்றுப்போய்விடும்!

பிள்ளையென்றும், பேரன் என்றும், கிள்ளைப்பிள்ளை மனைவியென்றும் வாழ்வின் தொல்லைகளில் சிக்கிடாமல், பிறைகுடிய பெருமானின் அடியார்க்கும் அடியார் என்ற பெரும் புகழ் எய்துதலே பிறவி எடுத்திட்ட பயனன்றோ!”

துறவியின் அருவிப் பெருக்கனைய அருளுரைகேட்டு அன்பர்கள் தேன்குடித்து வண்டாயினர். அவர் வழங்கிய திருநீறு பெற்று நெற்றியில் இட்டுக் கொண்டு வணக்கம் செய்து வாழ்த்தும் பெற்றனர். அறிவுரை முடித்த பின்னர் துறவியார், தண்டு கமண்டலங்களுடன் ஆண்டவன் சந்நிதானத்து மண்டபம் விட்டுப் புறப்பட்டார்.

அவரைப் பின்தொடர்ந்தான் அவருக்குத் தெரியாமல் ஓர் இளைஞன். துறவியார், தான் தங்கியுள்ள மடத்திற்குள் நுழைந்தார். அவர் காணாவண்ணம் அவனும் மறைந்து தொடர்ந்தான். மடத்தின் கதவு தாழிடப்பட்டது. அறைக்கதவு ஒன்றினை அடியார் தட்டினார். முழுநிலவு முகம் படைத்த இளமங்கை ஒருத்தி ஓடிவந்து துறவியாரைத் தழுவிக் கொண்டாள்.

“சின்ன இடை - அன்ன நடை - கன்னல் மொழிக் கண்மணியே! காத்திருந்தாயோ?”

எனக் கேட்டார் துறவி! கன்னத்தில் கன்னம் சேர்த்து கனதனங்கள் சுகம் வழங்கக் கட்டி முத்தங்களால் விடையளித்தாள் அந்த விழியழகி.

“பற்றற்று வாழவேண்டுமெனப் பறைசாற்றிவிட்டு வந்தேன். அப்போதும் இந்தப் பத்தரை மாற்றுத் தங்கத்தை நெஞ்சில் பதித்துக் கொண்டேயிருந்தேன்.”

துறவியைப் பேச விடவில்லை, அந்தத் தோகை மயில்! அள்ளிப் பொழியலாம் பள்ளியறைக் காவியமெனத் துள்ளிக் குதித்து அவரைக் கட்டிலில் தள்ளினாள்.

இதற்குமேல் இளைஞனால் அங்கு நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

“உண்மையிலேயே மனதாரப் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல் வாழ்கின்ற வஞ்சகர்களைவிட இரக்கமற்றவர் யாருமில்லை”

என்ற குறளின் வாசகம் அந்த இளைஞனின் நினைவுக்கு வந்தது. மடத்து வாயிலில் அந்தக் குறளை எழுதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.

“நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல்.”

அதிகாரம் - 28 - கூடா ஒழுக்கம்; பாடல் - 276

வன்கணார் = இரக்கமற்றவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்