பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 158 / 300

அ. கொலையிற் கொடியாரை / ஆ. கொலைமேற் கொண்டாரின்

அச்சுப் பக்கம் 341342 · ஸ்கேன் 358359 · அதிகாரம் 55 (செங்கோன்மை) — குறள் 550; அதிகாரம் 56 (கொடுங்கோன்மை) — குறள் 551

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஆட்சி நடத்துபவனுடைய கடமைகளில் ஒன்றாகக் கொலைவெறி கொண்ட கொடியவர்களைக் கொலைத் தண்டனையளித்து அழித்தலும் உண்டு எனக் கூறும் வள்ளுவர், அந்தக் கொலைத் தண்டனைகூடப் பயிரைக் காப்பாற்றுவதற்குக் களைகளை அகற்றுவதற்கொப்பான செயலாக இருக்க வேண்டுமென்ற கருத்தை வலியுறுத்துகிறார்.

கழனியில் பயிர்களின் எண்ணிக்கையே அதிகம். களைகளின் எண்ணிக்கை குறைவு. ஆகையினால் கழனிப் பயிர்போல் தழைத்துக் குலுங்கும் குடிமக்களைக் காப்பாற்றுவதன் பொருட்டு எண்ணிக்கையில் குறைவாயினும் கழனிப் பயிர்களை பாழ்படுத்திவிடக் கூடிய களைகள் போன்ற கொலைக்கஞ்சாக் கொடியவர்களை அழித்தொழிக்க வேண்டியுள்ளது என வள்ளுவர் கூறுகிறார்.

“செங்கோன்மை” எனும் அதிகாரத்தில் இடம் பெறும் அரசியல் குறித்த பாடல் இதுதான் :

“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர்”

களையை அழிக்கிறேன் என்று சொல்லிப் பயிரையே அழித்துவிடுகிற அரசின் முடிவு என்ன ஆகும் என்பதையும் வள்ளுவர் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை.

அத்தகைய அரசுகளை வள்ளுவர் ஒப்பிட்டுக் காட்டும் அருமையே அருமை!

முறையில்லாத செயல்களைத் தொடர்ந்து செய்து, குடிமக்களை வருத்துவ தையே தொழிலாகக் கொண்டு நடக்கும் ஓர் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும் என்று கூறுகிறார்.

“கொலைமேற்கொண்டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து”

கொடியவனைக் களையெடுப்பதுபோல் எடுத்து, குடிமக்கள் எனும் பயிரைக் காக்கும் செயலை அரசுக்குரிய செங்கோன்மையென உணர்த்திய வள்ளுவர், குடிமக்கள் எனும் பயிரையே அழிக்கும் அரசு, களைகள் எனும் கொடிய கொலைகாரனைவிடத் தீமையானது எனத் திட்டவட்டமாகச் சொல்லுகிறார்.

எனவே, களையைவிட இடர்மிகுந்த அந்த அரசம் அகற்றப்பட வேண்டும் என வள்ளுவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார் அல்லவா?

பயிர்களையே களைகள் அழிப்பதுபோல் அழித்து மகிழ்ந்த ஓர் அதிகார வெறியன், உகாண்டா எனும் நாட்டில் இருந்தான்.

அவன் பெயர் இடி அமீன்.

சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்த நாடு முழுச் சுதந்திரம் பெற்றது. அந்த நாட்டின் திறமைவாய்ந்த அதிபராக ஓபோடே என்பவர் பொறுப்பேற்றார்.

அவர், இடி அமீனின் இதயத்தில் ஓநாய் குடியிருப்பதை உணராமல் தன்னுடைய நம்பிக்கைக்குரிய தளபதியாக அவனை நியமித்தார். அவர் வெளிநாடு சென்றிருந்த போது, அந்த வெறிகொண்ட இடி அமீன், ஆட்சியைக் கவர்ந்து கொண்டான். அவன் ஆடாத ஆட்டமில்லை; அடிக்காத கூத்து இல்லை. அரசாங்கப் பொறுப்புப் பைத் தலையில் சுமந்துகொண்டு அப்படியொரு கோமாளி உலகிற்கு காட்டிய காட்சியை, உலகமே வேதனையுடன் வேடிக்கை பார்த்தது. அவனுக்குப் பிடிக்காதவர்களின் தலைகளைப் பந்தாடிக் களித்தான். குருதியிலே நாள்தோறும் குளித்தான். மங்கையரைச் சுவைத்தான். அவர்தம் மாமிசத்தையும் உண்டான். விசாரணைகளே நடத்தாமல் அவன் அளித்த மரணதண்டனைகள் கணக்கில் அடங்கா!

“எதிர்த்தோர் நாளையதினம் உயிரோடு இருக்கமாட்டார்!” - இது அவனுடைய நடைமுறையாக ஆகிவிட்டது.

குடிமக்கள், நாள்தோறும் வேட்டையாடப்பட்டனர். அவனை விமர்சித்தாலே போதும்; அவர்களுக்குச் சவக்குழி காத்திருக்கும். முடிவு என்ன ஆயிற்று? களைகளை அகற்றுவதாகக் கூறி பயிர்களையே நாசமாக்கும் இந்தப் பாதகன், கொலைவெறிக் கொடியோரினும் கொடியோன்! ‘இவனுக்கு இனி ஏன் ஆட்சிக் கொடி?’ என்று மிதிக்கப்பட்ட புழுக்கள், புலிகளாக மாறிக் கிளர்ந்து எழுந்தன.

கோமாளி இடி அமீன், ஓடி ஒளிந்த இடம் தெரியவில்லை.

செங்கோன்மை என்ற பெயரால் கொடுங்கோன்மை நடத்தும் அரசுக்கு இதுவே இறுதி முடிவாக அமைகிறது. எடுத்துக்காட்டப் பெற்றுள்ள இரண்டு குறட்பாக்களுக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் வண்ணம் இழிமகன் இடி அமீனின் வரலாறு இருக்கிறதல்லவா?

அதிகாரம் - 55 - செங்கோன்மை; பாடல் - 550

அதிகாரம் - 56 - கொடுங்கோன்மை; பாடல் - 551

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்