பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 157 / 300

பாலொடு தேன்கலந்து

அச்சுப் பக்கம் 339340 · ஸ்கேன் 356357 · அதிகாரம் 113 (காதற் சிறப்புரைத்தல்) — குறள் 1121

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அழகை அள்ளிப் பொழியும் இயற்கைக் காடு! அங்கே துள்ளித் திரியும் மான் கூட்டம்! தோகை விரித்து ஆடிடும் மயில்கள்! அதுகண்டு பொல்லாச் சிறகை அவிழ்த்துக் குதித்திடும் வான்கோழிகள்! இலவம் பஞ்சின் உருண்டைகள்போல் முயல்கள் தரையில் பறந்திடும் காட்சி! கிளைவிட்டுக் கிளை தாவிப் பாய்ந்திடும் குரங்குகட்கும் அந்தக் காட்டில் தனியாட்சி! மலைமுகட்டின் முகில்கள் உருகி, இயற்கையின் அற்புதத்தால் நெய்யருவிகள் பாறைகளில் பெருக்கெடுக்கும் எழிலே எழில்! அதனருகே அமர்ந்து பாடிடும் குயிலோ குயில்! அக்குரல் பயிலத் தவமிருக்கும் காகம்! அது இசைப்பதோ அபத்த ராகம்! அதை ரசிப்பதோ ஒரு வராகம்! இந்த வேடிக்கை பார்க்க அங்கு வாடிக்கையாக வட்டமிடும் பச்சைக் கிளி! நீலப்புறா!

அங்குள்ள பாறைகளில் ஒன்றுதான், பாவையை யாரும் பார்த்துவிடாமல் பாதுகாப்பு அளித்தது. ஆம்; பாவைதான் அவள் பெயர்! பாறை மறைவில் யாரைத் தேடி அவள் நிற்கின்றாள்; யாரைத்தான் தேடுவாள்?

இளங்கவிஞன் பூங்குன்றன், குறித்த நேரத்தில் வரவேண்டும் - வராத காரணத்தால்தான் தவிக்கின்றாள். வழக்கமாகச் சந்திக்கும் காதற்களம்தான் அது!

அங்குள்ள மரம் செடி கொடிகள், மலைப்பாறைகள், அருவிப் பொழிவு, அணில், கிளி, புறா, குயில், மயில் அனைத்துக்கும் எழுத்தாற்றல் வாய்க்கப் பெற்றால், கம்பனையும் இளங்கோவையும் மிஞ்சும் காதற்காவியங்களைப் படைத்திருக்கும்.

அத்துணை இன்பரசக் கேளிக்கைகளை அந்தப்பாறை மறைவில் - பாவையும் பூங்குன்றனும் நடத்தியிருக்கின்றனர். உதயணன் மடிமீது வீணை போல் அவள்!... அவன் மீட்டத் தொடங்கியதும் இருபாலார் நரம்புகளும் அதிர்ந்து எழுப்பும் காதல் நாதம்! இதுதானே அந்த வீணைக்கச்சேரியின் சிறப்பு!

நேரம் சிறிது கழிந்து போனாலும் நிகழ்ச்சிக்குத் தவறாமல் அதோ இசைவாணன் வந்துவிட்டான்! காத்திருந்த வீணை, அவன் கையில் ஏறி மடியில் உட்கார்ந்து கொண்டது.

“பாவை! என்ன அப்படிப் பார்க்கிறாய்? காலம் சிறிது கடந்ததற்காகக் கடுங்கோபம் கொண்டாயோ, என் கட்டாணிமுத்தே!”

“கொண்டது கோபந்தான் எனினும் உன்னைக் கண்டவுடன் என் தாபம் அதைத் துரத்திவிட்டது, அத்தான்!”

“கொய்யாப்பழக் கன்னத்தில் குங்குமக்குழி படைத்தவளே! இதழ் இரண்டு ஏனிப்படித் துடிக்கின்றன?”

“தெரியாததுபோல் கேட்கின்றாயே! எத்தனை நாள் பட்டினியென்று எண்ணிப் பார்க்க விரல்கள் இல்லையோ உன் கையில்?”

“விரல்கள்தான் இந்த வீணையை மீட்டிக் கொண்டிருக்கின்றனவே!”

“அதனால்தான் அதிர்கின்றன என் இதழ்கள்!”

அதற்குமேல் பேச்சில்லை! “இச்” ஒலி மட்டுந்தான் அந்த இயற்கைக் கட்டிலில் எதிரொலித்துக் கொண்டிருந்தது! ஓடிய மான்கள் நின்று பார்த்தன! பறந்த புள்ளினம் கிளைகளில் அமர்ந்து கவனித்தன! ஆடிய மயில் அசைவற்று நின்றது!

முத்தமழை பெய்து கொண்டேயிருந்தது! இனி இன்பவெள்ளப் பெருக்குத்தான்! “அத்தான்” என்றாள்! “உம்” என்றான். “நான்கிதழின் நற்கலவை எப்படி?” என்றாள்.

“இன்பமே! இனிய மென்மை மொழி பேசுகின்ற உன்னுடைய சிறப்புக்குச் சிறப்பு சேர்ப்பதுபோல், உன் பற்களிடையே ஊறுகின்ற நீர் தேனாக மாறி - நீ பேசும் மொழியுடன் தேனும் பாலும் கலந்ததுபோன்ற சுவையை எனக்குத் தருகிறது.” என்றான்! தழுவினாள்! தழுவினான்! தென்றலோ அவர்கள் இருவரையும் தழுவித் தன் வெறியைத் தீர்த்துக் கொண்டது.

“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்”

அதிகாரம் - 113காதற் சிறப்புரைத்தல்; பாடல் - 1121

பணிமொழி = மென்மையான மொழி; வால் = வெள்ளிய; எயிறு = பல்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்