பொருளடக்கம் 156 / 300
அழுக்காறு உடையார்க்கு
அச்சுப் பக்கம் 337–338 · ஸ்கேன் 354–355 · அதிகாரம் 17 (அழுக்காறாமை) — குறள் 165
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கார்மேகத்திற்குக் கழனியுண்டு. கரும்பு விளையும் நிலம் உண்டு. தென்னந்தோப்பும் ஒன்று உண்டு. அந்த ஊரில் பெரிய வீடும் உண்டு. எல்லையற்ற செல்வமும் இல்லை; தொல்லை தரும் வறுமையும் இல்லை; நடுத்தரமான வாழ்க்கைக்கும் மேம்பட்ட வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையில் கார்மேகம் மகிழ்ச்சியுடன்தானிருந்தான்.
ஆனால், திடீரெனச் சில திங்களாக அவன் முகத்தில் எப்போது பார்த்தாலும் வெறுப்பின் ரேகைகள்! கண்களில் ஏதோ ஒரு சோர்வு! நடையில் தளர்ச்சி. அவனது மாற்றத்தைக் கண்டு ஊர்ப் பொதுமண்டபத்தில் பேச்சு எழுந்தது.
“எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடியவன் ஏன் இப்படி மாறிக்கொண்டு வருகிறான்? ஏதாவது நோய் பற்றிக் கொண்டிருக்கிறதா? அதனால் ஏற்பட்ட கவலையா?”
இப்படி ஐய வினா எழுப்பியவருக்கு, கார்மேகத்துக்கு வழக்கமாக வைத்தியம் செய்யும் மருத்துவர் விடையளித்தார்.
“சே!சே! அப்படியொன்றுமில்லை. கார்மேகத்தின் மருத்துவரே நான்தானே! உடல் வலிக்கு ஒன்றும் குறைவில்லை. ஏதோ உள்ளத்தில்தான் குடைச்சல்! அதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.”
இன்னொருவர், அந்த மண்டபத்தில் பின் வருமாறு ஒரு கற்பனையைப் பொழிந்தார்.
“கார்மேகத்துக்குப் பக்கத்து ஊரில் சில பகைவர்கள் உண்டு. அவர்களால் ஏதாவது தீங்கு நேரிடக் கூடும் என்று கார்மேகம் அஞ்சிக் கொண்டிருப்பதாகக் கேள்வி! அதிலும் வர வர அந்தப் பகைவர்கள் வலிவு பெருகிக் கொண்டிருக்கிறதாம்! வாய்க்கால் வரப்புச் சண்டையில் வளர்ந்த அந்தப் பகைமை ‘உன்னை வாழவிட்டேனா பார்’ என்கிற அளவுக்கு வளர்ந்து விட்டதாம்.”
இதை அவர் சொல்லி முடிப்பதற்குள் அந்த ஊர்ப் பெரியவர் - கலகலவென நகைத்தவாறு பேசலுற்றார். எல்லோரும் அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதையே ஆவலுடன் எதிர்பார்த்தனர். பெரியவர் பேசினார்:
“ஒளியழகன் எனும் ஓர் இளைஞன் நமது ஊர்ப்பிள்ளை என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? அவன், கடலோடி வாணிபம் செய்து பெரும் பொருள் திரட்டிச் சிறந்த செல்வனாகத் திகழ்கிறான். ஒளியழகன், நமது கார்மேகத்துக்கு உறவுகூட! அவனொன்றும் கார்மேகத்திடம், எந்த வம்புக்கும் வருவதில்லை. பக்கத்து ஊரில் பெரியதோர் வீடு கட்டுகிறான், நிறைந்த தொகை செலவிட்டு!
தன் கண் எதிரே எளியோனாய்த் திரிந்த இளைஞன் இன்று பெருவணிகனாய் விளங்குவது கண்டு கார்மேகத்துக்குப் பொறாமை தாங்கமுடியவில்லை. அவனையும் அறியாமல் அவன் எரியும் உள்ளத்தை என்னிடம் திறந்தும் காட்டிவிட்டான். பொறாமைத்தீ, அவன் நெஞ்சைச் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
யாரோ - எவரோ - என்றால்கூட இவ்வளவு பொறாமை இருக்காது! உறவுக் காரன் ஒருவனே, தன்னை மிஞ்சிச் செல்வந்தனாகி விட்டதும் - சீர் பல பெற்று வாழ்வதும் - கார்மேகம் போன்ற கடுகு உள்ளத்தினரால் தாங்கிக் கொள்ள இயலாது.
அதனால் தான் அவன் வதங்கித் தேய்கிறான். பகைவர்கள் யாருமே தீங்கு செய்ய முற்படவில்லை! அவனுள்ளிருக்கும் பொறாமையே அவனுக்குப் பகை! அதைவிட அவனுக்கு வீழ்ச்சி தருவதற்கு வேறு பகை தேவையில்லை.”
பெரியவரின் விளக்கம் கேட்டு ஊரார் உண்மை உணர்ந்தனர். கார்மேகத்தைக் காரி உமிழ்ந்தனர்.
“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது.”
அதிகாரம் - 17 - அழுக்காறாமை; பாடல் - 165
ஒன்னார் = பகைவர்
வழுக்கியும் = தவறினாலும்
ஈன்பது = தருவது
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்