பொருளடக்கம் 155 / 300
உள்ளற்க உள்ளம்
அச்சுப் பக்கம் 335–336 · ஸ்கேன் 352–353 · அதிகாரம் 80 (நட்பாராய்தல்) — குறள் 798
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
‘மனோன்மணியம்’ நூலில் சில கதாபாத்திரங்களைக் காணுகிறோம். பாண்டியநாட்டு மன்னன் ஜீவகன் - எல்லோரையும் எளிதில் நம்பிவிடும் இயல்பினன். அவனுக்கு ஓர் அமைச்சன். பெயர் குடிலன்! குடிகெடுக்கும் குணம் படைத்தவன். அவனிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டு, அவன் சொற்படியெல்லாம் பாண்டிய மன்னன் கேட்கிறான்.
அதன் விளைவாகப் பாண்டிய நாட்டுக்கும் சேர நாட்டுக்கும் போர் மூளுகிறது. சேர மன்னன், தன் படையுடன் கிளம்பி பாண்டிய நாட்டை வென்றிட வரும் வழியில் பாசறை அமைத்துத் தங்குகிறான்.
குடிலன், பாண்டிய நாட்டைச் சேர நாட்டுக்குக் காட்டிக் கொடுத்து, பாண்டியப் பேரரசின் மன்னனாகத் தான் ஆகிவிடத் திட்டம் தீட்டுகிறான்.
பாண்டிய மன்னன் தங்கியிருக்கும் கோட்டையில் ஒரு பாதுகாப்புக் குகையிருக்கிறது. குடிலன் அவ்வழியாக வெளியே சென்று சேர மன்னன் புருடோத்தமனை இரகசியமாகச் சந்தித்து, குகை வழியாகச் சென்றால் பாண்டியனைப் பிடித்துச் சிறையில் தள்ளிவிடலாம் என்று கூறுகிறான்.
புருடோத்தமன், குடிலன் சொன்னது அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, இறுதியாகத் தன் காவலரை நோக்கிக் குடிலனைக் கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கிறான்.
குடிலன் நடுங்கிப் போகிறான்.
“அரசே! தங்களுக்குத் துணைபுரிய வந்த எனக்கு இப்படி ஒரு தண்டனையா?” எனக் கேட்டுக் கதறுகிறான்.
அவனைப் பார்த்துப் புருடோத்தமன் சொல்லுகிறான்;
“குடிலா! நேரான வழியில் போர் புரிந்து பாண்டியனைக் களத்தில் சந்திக்கும் ஊக்கமும் வீரமும் எனக்கும் என் படைத் தளபதிக்கும் உண்டு. உன் மன்னருக்குத் துன்பம் வருகிற நேரத்தில் அவரைக் கைவிட்டுக் காட்டிக்கொடுக்கத் துணிந்து விட்ட நீ; பிறிதொரு நாள் அதே காரியத்தை எனக்குத் தீங்கு வரும்போது செய்ய மாட்டாய் என்று எப்படி நான் நம்ப முடியும்? அதனால்தான் உனக்கு இந்தத் தண்டனை!”
குடிலன் விலங்கிடப்பட்டுப் பாண்டியன் முன் நிறுத்தப்படுகிறான். பாண்டியன், குடிலனின் துரோகச் செயலை உணருகிறான். சேர பாண்டியர் களிடையே நட்பு உருவாகிறது - இவ்வாறு மனோன்மணியம் மகிழ்ச்சிகரமாக முடிகிறது. இந்தக் கதாபாத்திரங்களின் வாயிலாக “மனோன்மணியம்” ஆசிரியர், திருக்குறளின் அரிய கருத்தொன்றை வெளிப்படுத்துகிறார்.
“ஊக்கம் குறைவதற்கான காரியங்களை எண்ணவே கூடாது. அதே போலத் துன்பம் வருகிற நேரத்தில் கைவிடுகிறவர்களின் நட்பைக் கொள்ளவும் கூடாது.”
குடிலனைப் புருடோத்தமன் புரிந்து கொண்ட காரணத்தால், குறள் மொழிப்படி நடந்து காட்டினான்.
“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.”
அதிகாரம் - 80 - நட்பாராய்தல்; பாடல் - 798
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்