பொருளடக்கம் 154 / 300
பிணிக்கு மருந்து
அச்சுப் பக்கம் 333–334 · ஸ்கேன் 350–351 · அதிகாரம் 111 (புணர்ச்சி மகிழ்தல்) — குறள் 1102
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
இளம் தளிர்களின் அறிவுப்பசி போக்கும் அரும்பணியை மேற்கொண்டிருந்த ஆசிரியன்தான் அன்பானந்தன். மாலை நேரம். கல்விச் சாலை முடிந்து இரண்டு கல் தொலைவில் உள்ள தன் ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தான்.
திடீரெனக் கனமழை பிடித்துக்கொண்டது. இடி மின்னல்! இள வயது படைத்தவன் என்பதால் இயற்கையின் சீற்றம் கண்டு அன்பானந்தன் அஞ்சிடவில்லை. மழையில் நனைந்துகொண்டே வீடு போய்ச் சேர்ந்தான்.
அவன் அவ்வளவு அவசரமாக அந்த மழையிலும் வீடு போய்ச் சேரத்துடித்ததற்குக் காரணம் ஒன்றும் இருந்தது. பக்கத்து வீட்டு அழகரசி அன்றைக்கு ஊரிலிருந்து திரும்பியிருப்பாள்; அவளைக் காண வேண்டும்! இருவரும் மணம் முடித்துக் கொள்ளாத காதல் புறாக்கள்.
அழகரசி, தன் அத்தையின் உடல் நலம் விசாரித்துவரச் சென்றவள். அத்தையின் உடல் நலிவு விரைவில் தீராத காரணத்தால் இன்னும் நாலைந்து நாட்கள் கழித்தே திரும்பி வருவாள் என்ற செய்தி அன்பானந்தனுக்குக் கிடைத்தது. ஏமாற்றம். மழையில் நனைந்தோடி வந்ததுதான் மிச்சம்.
மழையை எதிர்த்ததன் விளைவு, அன்றிரவு அவனைக் கடும்காய்ச்சல் தாக்கியது. பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. வீட்டிலே படுத்துவிட்டான். மருத்துவர் சித்த
வைத்தியச் சூரணங்களையும்...மூலிகைகளையும் கொடுத்தார். காய்ச்சல் குணமாயிற்று. எழுந்து நடமாட முடிந்தது என்றாலும் மிகக் களைப்புற்றிருந்தான்.
நான்கு நாட்கள் பறந்தோடின. உடலுக்கு வந்த நோய் போய்விட்ட தென்றாலும் உள்ளத்தில் கனல்விட்ட காதல்நோய் தீர்ந்தபாடில்லை. அழகரசியை எண்ணியவாறு பல் துலக்கிக்கொண்டே குளக்கரைக்குச் சென்றான். அங்கே அவன் எதிர்பாராத நிலையில், அழகரசி குளித்துக் கொண்டிருந்தாள்.
இருவர் கண்களும் ஒன்றையொன்று போட்டி போட்டுக்கொண்டு விழுங்கின.
“எப்போது வந்தாய் இன்பமே!” என்று காதல் பொங்கிடக் கேட்டான் காளை!
பாளைச் சிரிப்பழகியோ, “விடியற்காலைத்தான் வந்தேன்! அதிருக்கட்டும்; உங்களுக்கு உடல் நலமில்லை, காய்ச்சல் என்று கேள்விப்பட்டேனே?” எனக் கொஞ்சினாள்.
“உண்மைதான்! மழையில் நனைந்து காய்ச்சலை வரவழைத்துக் கொண்டேன். மருத்துவர் நல்ல மருந்து கொடுத்தார். நோய் பறந்துவிட்டது!”
என்றவாறு அவளருகே வந்தான் அவன்.
அழகரசி, தங்களை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டாள். நீரில் மிதக்கும் தாமரை மலர்போன்ற அவள் முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.
பின்னர் அவளை வியப்போடு கேட்டான்:
“அழகரசி! என் உடலுக்கு வந்த காய்ச்சல் நோயைத் தீர்க்க வேறு பொருள்களே மருந்தாக இருந்தன! ஆனால், நீ என் உள்ளத்தில் ஏற்படுத்திய காதல் நோய்க்கு நீயே அல்லவா மருந்தாக இருக்கின்றாய்! இந்த வேடிக்கையைக் கவனித்தாயா?”
என்று புன்னகை மின்னிடக் கேட்டான்.
“அத்தான்! இதுபற்றி நீங்கள் படித்த குறளில் ஏதாவது இருக்குமே!”
“நிச்சயமாக இருக்கிறது! நான் காய்ச்சலால் வருந்தியபோது அந்தக் குறளைத்தான் படித்துச் சுவைத்தேன்.”
“என்ன குறளத்தான் அது?”
அவன் சொன்ன குறள் இதுதான்:
“பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து”
அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1102
பிறமன் = வேறு பொருள்கள்
அணியிழை = அணிகலன் பூண்ட அழகி
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்