பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 153 / 300

நாளென ஒன்று போல்

அச்சுப் பக்கம் 331332 · ஸ்கேன் 348349 · அதிகாரம் 34 (நிலையாமை) — குறள் 334

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“நாள் என்பது ஒரு வாள்” என்றவாறு நுழைந்தான் அறவாழி!

அவனை வியப்புடன் நோக்கிய வீரன்: “வாப்பா! வா! என்ன வரும்போதே ‘வாள்! வாள்!’ என்று கத்திக்கொண்டு வருகிறாய்!” எனக் கேலி செய்தான்.

அறவாழி, வீரனைத் தட்டிக் கொடுத்தவாறு, “என்ன செய்து கொண்டிருக்கிறாய்” என்று கேட்டான். வீரன் எப்போதும் குறும்பாகப் பேசக்கூடியவன்.

“அறவாழி! நீ இப்போது கேட்கிறாயே; இதற்குப் பெயர்தான் குருட்டுக் கேள்வி என்பது!” என்றான் சிரித்துக்கொண்டே!

வீரன் அப்போது தன் உடைவாளைக் கூர்மைப்படுத்திப் பளபளப்பு ஏற்றிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்துக்கொண்டே வந்த அறவாழிதான், “என்ன செய்து கொண்டிருக்கிறாய் வீரா?” என்ற கேள்வியைக் கேட்டு வைத்தான்.

“வாள் எப்படி ஒளிவிடுகிறது. பார்!”

வீரன் வாளைத் தூக்கிக் கம்பீரமாக உயர்த்தினான்.

“இந்த வாள், எத்தனை பகைவர்களின் தலைகளையும், கை, கால்களையும் வெட்டி வீழ்த்தியிருக்கும் தெரியுமா?”

வீரன் பெருமையுடன் பேசினான்.

அறவாழி சிரித்துக்கொண்டான். “வீரா! உன் கையில் உள்ள வாள், பகைவர்களின் உயிரைப்பறிக்கும் வலிமை வாய்ந்தது! உண்மைதான்! ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், ஒன்று புரியுமா உனக்கு? நம் உயிரைச் சிறிது சிறிதாக உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் கண்ணுக்குத் தெரியாத வாள் ஒன்று உள்ளதே, அதைக் கண்டிருக்கிறாயா நீ?”

அறவாழியின் இந்தக் கேள்விக்கு வீரன் விடையளிக்காமல் திகைத்தான். “கண்ணுக்குத் தெரியாத வாளா? இது என்னப்பா புதுமை?”

“ஆமாம் வீரா! வாழ்க்கையை ஆராய்ந்து உணர்பவர்களின் அறிவுக்கு மட்டுமே அந்த வாள் தெரியும்!”

“சற்று விளக்கமாகத்தான் சொல்லேன்.” வீரன் ஆவலை விழிகளில் தேக்கிக் கொண்டு அறவாழியையே நோக்கினான்.

“வீரா! இன்றைக்கு நாள் என்ன?”

“இதுகூடத் தெரியாதா அறவாழி? இன்றைக்கு நாள் தைத்திங்கள் ஏழாம் நாள்!”

“வீரா! நாள் என்பதை ஒரு கால அளவுகோல் என்று மட்டுந்தானே எண்ணிக்கொண்டிருக்கிறோம்!”

“ஆமாம், அறவாழி! அதிலென்ன சந்தேகம்? நாள் என்பது காலத்தின் அளவுகோல்தான்! இந்தத் தைத்திங்கள் ஏழாம் நாளுடன் எனக்கு இருபத்தெட்டு வயது நிறைவு பெறுகிறது. எனவே நாள்கள் கால அளவைக் காட்டும் கருவிகள் தானே!”

“அதுதான் சொல்ல வந்தேன்! நாள் என்பது கால அளவுகோல் மட்டுமல்ல! உன் கையில் பிடித்திருக்கிறாயே, அந்த வாளைப் போன்றது நாள்! அதாவது ஒவ்வொரு நாளும் நகரும்போது, அந்த நாள் நம் உடம்பிலிருந்து உயிரைப் பிரிக்கும் வாள் போல இருந்து, நம்மைச் சிறிது அறுத்திருக்கிறது என்று பொருள். உன் கை வாள், ஒரேயடியாக எதிரியின் உயிரை அவன் உடம்பிலிருந்து பிரித்து விடக்கூடும். ஆனால் உன் உயிரையும் என் உயிரையும் நம்மைப் போன்ற பல உயிர்களையும் அவரவர் உடல்களிலிருந்து பிரிக்கும் வேலையை மெல்ல மெல்லவும் சில நேரங்களில் வேகமாகவும் செய்யக்கூடிய வாளாக இருக்கிறது நாள்!”

“அறவாழி! அழகாகச் சொன்னாய்! ஆமாம்! உண்மைதான்! நாள் என்பது கால அளவுகோல் மட்டுமல்ல! கால அளவுகோல் போல இருந்து உடம்பிலிருந்து உயிரை அறுத்துப் பிரிக்கும் வாளாகத்தான் உள்ளது! சரியாகச் சொன்னாய்!”

“வீரா! இதை நான் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லியிருக்கிறார்! இதோ அந்தக் குறள்” என்று சுவடியைக் கொடுத்தான் அறவாழி.

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”

அதிகாரம் - 34 - நிலையாமை; பாடல் - 334

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்