பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 152 / 300

பிரிவுரைக்கும் வன் கண்ணர்

அச்சுப் பக்கம் 329330 · ஸ்கேன் 346347 · அதிகாரம் 116 (பிரிவாற்றாமை) — குறள் 1156

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மேற்றிசையில் மறைந்த கதிரவன், மறுநாளும் மேற்றிசையில் மறையும்போது - பொழுது அதற்குள் விடிந்துவிட்டதேயென்று ஆறாத்துயருடன் கீழ்த்திசையைப் பார்க்க மஞ்சத்துத் திரையை விலக்கிட - தாம் காண்பது உதயமல்ல; இப்போதுதான் இரவே வருகிறது என எண்ணி மீண்டும் இறுகத் தழுவிக்கொண்டு ஈரிரவு, ஓர் பகலை ஒரு நாள் எனக் கணக்கிட்டு ஓயா இன்பத்தில் திளைத்திருந்ததையெல்லாம் மறந்தாயோ அத்தான்?” என்று கொட்டும் விழிமழையால் அவன் குன்றத்தோள் நனைத்தாள்.

“எப்படிக் கண்ணே மறப்பேன்? என் கண்ணே உனக்கு இப்படி ஓர் ஐயம்? நாளைக் காலையில் நாம்தான் இருக்கப் போகிறோமா? அல்லது இந்த உலகம்தான் திடீரென உடைந்து சிதறிவிட்டால் என்ன செய்யப்போகிறோம்? எனவே அதற்குள் அள்ளிப் பருகவேண்டிய காதலின்பக் கலவியமுதையெல்லாம் அள்ளிப் பருகிச் சுவைத்துக் கிடப்போம் என நான் சொல்லி உன் இடையை வளைக்க - நீயோ அல்லித் தண்டுபோல் துவண்டு - இந்த வண்டுக்கு மலராக உன்னையே என்பால் தந்தாயே, அந்த இனிய நிகழ்ச்சிகள் என் இதயத்தில் கல்லில் செதுக்கிய சிற்பக் கண்காட்சியாக விளங்குகிறது என்பதை நான் சொல்லித்தான் நீ தெரிந்துகொள்ள வேண்டுமா?” - அவளின் கண்ணீர் துடைத்து, உச்சியில் இதழ் பதித்தவாறு கேட்டான் அவன்.

“எதையும் மறக்காமல் இருக்கின்ற கண்ணா! என்னை மட்டும் மறந்து விட்டு யவன நாட்டுக்குச் செல்வதாக உரைக்கின்றாயே; நியாயம்தானா? நீயே எண்ணிப்பார்!”

“தமிழகத்தின் வளத்தைப் புகழ்ந்து பாடும்வண்ணம் அயல்நாடுகளிலும் நமது வாணிபம் சிறக்க வேண்டாமா இன்பமே! கடமை செய்யத்தானே இந்தக் கடற்பயணம் மேற்கொள்கிறேன், கனியமுதமே! கலங்காமல் எனக்கு விடையளித்து வழியனுப்பு!”

“நெஞ்சு வெடிக்கும் செய்தியன்றோ, கண்ணா! நீ கொஞ்ச நேரம் என்னைப் பிரிவதுகூட!”

“நான் மட்டும் என்னவாம்? எனக்கு மட்டும் கல்நெஞ்சமா? எவ்வளவு விரைவில் திரும்பி வந்து உன்னைக் கட்டியணைத்துக்கொண்டு, காலம் போவது தெரியாமல் உன் அருகிலேயே கிடக்கிறேன் பார்!”

“ஏன்தான், இந்த ஏமாற்று வார்த்தை? பிரிவைப்பற்றித் தெரிவிக்கும் அளவுக்குக் கல்நெஞ்சம் உடையவராகிவிட்டபிறகு; திரும்பி வந்து அன்பில் திளைத்திடுவோம் என எண்ணுகின்ற ஆசை என்னைப் பொறுத்தவரையில் பயனற்றது! நம்பமுடியாதது!”

இருவரும் விம்மியழுதவாறு தழுவிக்கொண்டு மஞ்சத்தில் வீழ்ந்தனர். யவனத்திற்கு மயில், மிளகு, முத்துக்களை ஏற்றிக்கொண்டு நின்ற நாவாய், அவன் வருகைக்காகக் கடலில் காத்துக்கொண்டு இருந்தது.

“பிரிவுரைக்கும் வன்கண்ண ராயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.”

அதிகாரம் - 116 - பிரிவாற்றாமை; பாடல் - 1156

நசை = ஆசை

நல்குவர் = அன்பு செய்வார்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்