பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 151 / 300

கூத்தாட்டு அவைக் குழாத்து

அச்சுப் பக்கம் 327328 · ஸ்கேன் 344345 · அதிகாரம் 34 (நிலையாமை) — குறள் 332

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அத்தியெனும் வணிகன், அகமும் முகமும் வாடிய நிலையில் வள்ளுவரைக் காண வந்தான். “சிரிப்புத் தழைத்திருக்கும் உன் முகத்தில் கவலையின் ஆதிக்கம் ஏற்படக் காரணம் யாது?” குறளார் உருக்கமுடன் வினவினார்.

அத்தியின் விழிகள், மழைத்துளி உதிர்க்கும் முகில்களாயின. தழுதழுத்த குரலில் அவன் பேசினான்:

“பெருமகனாரே! நான் பாடுபட்டுத் தொழில் செய்து சிறுகச்சிறுகப் பொருள் சேர்த்து ஊர்மெச்சும் வணிகனானேன். தங்களுக்கும் அது நன்கு தெரியும். அரண்மனைக்கூடக் கட்டிக்கொண்டு வாழ்வான் அத்தியென்று உற்றார் உறவினர் பெருமையுடன் கூறினர். ஆனால், இன்று என் நிலை என்ன தெரியுமா? ஆலமரத்தடி நிழலில் கூடத் தங்குவதற்கு எனக்கு இடம் கிடைக்குமா? இப்படியொரு அவலம் வந்து சூழ்ந்து விட்டது!”

வள்ளுவர் திகைத்தார்.

“உண்மையாகவா? உன் தொழில் கெடவும் வளமைப் பொழில் கருகவும் காரணம் என்ன? எப்படி நடந்தது இந்த மாற்றம்?”

அத்தியினால் உடனடியாக விளக்கமளிக்க முடியவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.

“கொஞ்சம் கொஞ்சமாகக் குவித்த பொருளை, பன்மடங்கு பெருக்கிட வேண்டுமென்று, அயல் நாட்டுடன் வாணிபம் நடத்தக் கப்பல் ஒன்று வாங்கினேன்; அதில் கொற்கை முத்தும், மிளகும், மயில்தோகையும் ஏற்றியனுப்பினேன் யவனத்திற்கு! கைப்பொருள் அத்தனையும் போட்டு அந்தக் கப்பல் நிறைய ஏற்றுமதி செய்த பொருள், யவன நாட்டுக்குச் சென்றிருக்குமேயானால், அதற்கென எனக்குக் கிடைக்கும் வருமானம் அளவிட முடியாததாக இருந்திருக்கும்! ஆனால்...ஆனால்.....!”

அழுதுதான் முடிந்தது அத்தியினால்! அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியவில்லை. வள்ளுவர் புரிந்துகொண்டார். அவனை ஆறுதலாகத் தழுவியவாறு கேட்டார்: “புயல் காற்றில் அந்தக் கப்பல் கடலில் கவிழ்ந்துவிட்டது - அப்படித்தானே?” என்று!

ஆம் என்பதை அத்தி, தன் தலையை அசைத்ததன் வாயிலாகக் காட்டிக் கொண்டான். வள்ளுவர், அத்தியை அமைதிப்படுத்தி உணவளித்து உறங்கச் செய்தார். மறுநாள் பகல் முழுதும் அத்தியின் மனத்தைத் தேற்றுகிற வேலையிலேயே ஈடுபட்டார். “மீண்டும் தொழிலைத் தொடங்கி வாழ்வில் நிமிர்ந்திட வழியுண்டு! நடந்ததை எண்ணி வளைந்து கிடக்காமல் சோகம் துடைத்துப் பீடுநடை போட வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அத்தியும் ஓரளவு ஊக்கம் பெற்று எழுந்தான். வள்ளுவரும் அவனுடன் சிறிது தொலைவு நடந்தார்.

“பெருந்தகையே! ஒவ்வொரு பொன்னையும் என் வீட்டுப் பேழையில் அடுக்க ஒவ்வொரு நாளும் நான் உழைத்தேன். சேரும்போது ஒவ்வொன்றாக வந்த பொன், இப்போது போகும்பொழுது ஒரேயடியாக ஒரே நாளில் போய்விட்டது பார்த்தீர்களா?”

என்று அத்தி, ஆதங்கத்துடன் திருவள்ளுவரிடம் சொன்னான். வள்ளுவர் நின்றார்.

“அதோ பார் அத்தி! அது என்ன தெரிகிறதா? கூத்தரங்கம்! அந்தக் கூத்தரங்கத்தில் கூத்துப் பார்த்துக் களிக்க மக்கள் வரும்போது, அரங்கத்திற்குள்ளே ஒவ்வொருவராகத்தான் வருவார்கள்! இல்லையா?”

“ஆமாம்! ஆமாம்!”

“ஆனால்; கூத்து முடிந்து மக்கள் செல்லும்போது அப்படியே கூட்டமாகக் கலைந்து சென்று விடுவார்கள்! அல்லவா?”

“ஆமாம்! ஆமாம்!”

“அதைப் போலத்தான் செல்வம் வந்து சேர்வதும், போதலும்! கூத்தரங்கில் கூட்டம் சேர்வதைப் போலச் செல்வம் சிறிது சிறிதாகச் சேரும்! அந்தச் செல்வம் நம்மை விட்டு நீங்கிப் போவது, கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றதாகும்”

“அடடா! என்ன உவமை! என்ன உவமை! இப்படியொரு உவமையைக் கேட்ட எனக்கு, என் கப்பல் மூழ்கிய கவலைகூடத் தெரியவில்லை. இத்தகைய அற்புத உவமையொன்றைத் தாங்கள் கூற வேண்டுமென்பதற்காகவே, நான் சேர்த்த பொருளனைத்தும் என்னை விட்டு நீங்கியது போலும்!”

இப்படி வியந்து பாராட்டிக்கொண்டே அத்தி, வள்ளுவரின் கைமலர்களை எடுத்துத் தன் கண்களில் ஒத்திக் கொண்டான்.

“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.”

அதிகாரம் - 34 - நிலையாமை; பாடல் - 332

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்