பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 150 / 300

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான்

அச்சுப் பக்கம் 325326 · ஸ்கேன் 342343 · அதிகாரம் 80 (நட்பாராய்தல்) — குறள் 792

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

கி.பி. 1947 ஆம் ஆண்டு, இந்தியநாடு ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. “இந்தியாவுடன் இணைந்திருக்க முடியாது” என்று கூறி முஸ்லீம்கள் தங்களுக்கெனத் தனியொரு நாட்டை அமைத்துக் கொண்டனர். இந்தியாவின் நிலப்பரப்பு அதனால் குறைந்தது.

அந்தத் தனி நாட்டுக்குப் பெயர்தான் பாகிஸ்தான். அந்த நாட்டை உருவாக்கிய தலைவர் முகமது அலி ஜின்னா, நோயுற்று இயற்கை எய்தினார். பல்வேறு குழப்பங்களுக்கிடையே பாகிஸ்தான் ஆட்சி நடைபெற்றது, யாகியாகான் என்ற சர்வாதிகாரியின் ஆட்சியில் அந்த நாடு தன் நிலப்பரப்பில் ஒரு பகுதியை இழந்தது.

அந்தப் பகுதி புதிய வங்கதேசமாக உருவெடுத்தது. சர்வாதிகாரத்தை எதிர்த்து மக்கள் சக்தியைத் திரட்டி, பூட்டோ எனும் தலைவன், யாகியாகானை விலக்கிவிட்டு எஞ்சிய பாகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றான்.

போர்ப்படைத் தளபதியாக - அதுவும் தலைமைத் தளபதியாக - யாரை நியமிப்பது என்ற பிரச்சினை எழுந்தது. தகுதி அடிப்படையிலும் வரிசை அடிப்படையிலும் தலைமைத் தளபதிப் பதவிக்கு ஏற்றவர்களாக ஏழெட்டுப்பேர் இருந்தனர்.

தலைமை அமைச்சர் பூட்டோவோ அவர்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பன் என்று கருதி ஜியாவைத் தலைமைத்

தளபதியாக அறிவித்தான். நாட்டின்மீது உயிரையே வைத்துத் தன் மக்களுக்காக உழைப்பதில் தீயாக உள்ளத்தைப் பெற்றிருந்த பூட்டோவுக்கு, தன் நம்பிக்கைக்குரிய தளபதியைத் தேர்ந்தெடுப்பதில் சரியான கணிப்பு இல்லாமற் போய்விட்டது.

அதன் விளைவு என்ன ஆயிற்று? அந்த நாட்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தைக் காரணம் காட்டித் தளபதி ஜியா, பூட்டோவைப் பிடித்துச் சிறையிலே பூட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். அத்துடன் முடிந்ததா? ஒரு கொலை வழக்கில் பூட்டோவைத் தொடர்புபடுத்தி முறையான விசாரணைகளுக்கு இடமளிக்காமல், பூட்டோவுக்குத் தூக்குத் தண்டனையென்னும் தீர்ப்பு வெளியிடப்பட்டுவிட்டது.

உலகத்தில் உள்ள பெரும்பாலான நாட்டு அரசுகளின் சார்பில், பூட்டோவைத் தூக்கிவிடக் கூடாதென்று ஜியாவுக்கு முறையீடுகள் வந்து குவிந்தன. ஜியாவின் மனம் இரங்கவில்லை. பூட்டோ, தன் உயிரைக் காத்துக் கொள்ள ஜியாவிடம் கருணை கேட்கவில்லை. வீரனாகவே சாகிறேன் என்று அறிவித்து விட்டான்.

சிறையில் பூட்டோவுக்கு இழைக்கப்பட்ட கொடுமை - அவனை நீதி மன்றத்துக்கு அழைத்து வந்த போதெல்லாம் நடத்திய இழிசெயல் - கல்நெஞ்சு முடையவர்களாலும் தாங்கிக்கொள்ள முடியாதவைகளாகும். ஆனால் ஜியா, தன்னைப் பெரும் பொறுப்பில் தூக்கி வைத்த நண்பன் பூட்டோவுக்கு அந்தக் கொடுமைகளையெல்லாம் பரிசாக வழங்கினான்.

ஒரு நாள் காலை உலகத்து மக்கள் அனைவரும் கண்ணீர் வடிக்கத்தக்க அந்தச் செய்தியும் வந்தது. அதுதான், சிறைச்சாலையில் பூட்டோ மரண தண்டனைக்கு ஆட்படுத்தப்பட்டான் என்பது! தன்னை நம்பியவனுக்குத் தரவேண்டுமென்று தயாராக வைத்திருந்த அந்த அன்பளிப்பையும், ஜியா, பூட்டோவுக்குத் தந்து விட்டான்.

“ஒரு முறைக்குப் பலமுறை ஆராய்ந்து பார்த்து நண்பனைத் தேர்ந்தெடுக்காதவன், அந்த நண்பன் என்ற நயவஞ்சகனாலேயே சாகப் போகிறேன்” என்று பூட்டோவின் மனம் நிச்சயமாக அழுதிருக்கும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமலே அந்த வீரன் மரணத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டான்.

‘பலமுறை ஆராய்ந்து நட்புக் கொள்ளாதவனுடைய நட்பு, இறுதியில் தான் சாவதற்கே காரணமான துன்பத்தை உருவாக்கிவிடும்.’

என்று இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு வள்ளுவர் எழுதியவைத்த குறள் எத்துணை உண்மையாய்விட்டது என்பதற்கு பூட்டோ, ஜியாவிடம் ஆராயாமல் கொண்ட நட்பே எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது அல்லவா?

“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்.”

அதிகாரம் - 80 - நட்பாராய்தல்; பாடல் - 792

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்