பொருளடக்கம் 149 / 300
தந்நெஞ்சத்து எம்மை
அச்சுப் பக்கம் 323–324 · ஸ்கேன் 340–341 · அதிகாரம் 121 (நினைந்தவர் புலம்பல்) — குறள் 1205
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“நான் மட்டும் அவரை நினைத்து நினைத்து ஏங்குகிறேன் - ஆனால், அவர்மட்டும் என்னை நினைப்பதாகவே தெரியவில்லை!”
இப்படியொருத்தி கவலைப்படுகிறாள்.
“அவர் என்னை நினைத்துக்கூடப் பார்க்காதபோது, என் நினைவிலிருந்து மட்டும் அவர் அகலாமல் இருக்கிறாரே!”
இப்படியொருத்தி கவலைப்படுகிறாள்.
இருவருமே தங்களின் காதலர் தங்களை நினைத்திடவில்லையென்று குறைப்பட்டுக் கொள்கின்றனர். அவர்தம் காதலர் அவர்களை நினைத்தார்களா இல்லையா என்பது எப்படித் தெரியும்! பிரிந்து சென்றவர் பறந்து வந்து இன்பத்தில் மிதந்து கொண்டிருக்க வேண்டுமென்ற தாபத்தால் உருவாகும் குற்றச்சாட்டு இது!
பிரிவு என்னும் வேதனையில் உழலும் காதலிக்குத் தன் காதலனை இழித்துப் பேசவேண்டுமென்று தோன்றுகிறது. “நான் நினைத்துக்கொண்டேயிருக்கிறேன். அவர் நினைக்கவே இல்லையே” என்ற ஒரு பெண்ணின் குமுறலை, வள்ளுவர் குறள் எத்துணை அழகுபட விளக்குகிறது!
காதலனின் நெஞ்சமெனும் மாளிகையில் குடியேறக் காதலி சென்றாளாம். மாளிகையின் வாயிலில் காவல் போட்டு அவளை உள்ளே விடாமல் காதலன் தடுத்துவிட்டானாம். அதனால் அவள், அவன் நெஞ்சுக்குள் நுழைய முடியாமல் போய்விட்டதாம்!
அதே சமயம் அந்தக் காதலன் மட்டும் ஓயாமல் அவளுடைய நெஞ்சமெனும் மாளிகைக்குள் நுழைந்து விடுகிறானாம்! அப்படி அடிக்கடி ஓயாமல் நுழைவதில் அவனுக்கு நாணமே கிடையாதா என்று அவள் கழிந்துகொள்கிறாள்.
காதலி, காதலனின் நினைவாகவே இருக்கிறாள் என்பதற்கும் - காதலனுக்கோ காதலியின் நினைவு இல்லையென்று காதலி சுமத்தும் குற்றச்சாட்டுக்கும் ஒரு புதிய கோணத்தில் இந்தக் குறள் விளக்கம் அளிக்கிறதல்லவா?
தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் தடுத்துக் காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில், தாம் ஓயாமல் வருவதைக் குறித்து நாணமுற மாட்டாரோ!
“தந்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எந்நெஞ்சத்து ஓவா வரல்.”
அதிகாரம் - 121 - நினைந்தவர் புலம்பல்; பாடல் - 1205
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்