பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 148 / 300

இன்னா செய்தாரை

அச்சுப் பக்கம் 321322 · ஸ்கேன் 338339 · அதிகாரம் 32 (இன்னா செய்யாமை) — குறள் 314

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஏழாண்டுக் காலம் தண்டனை பெற்றுச் சிறையில் வாடிக்கொண்டிருந்தான் அந்த வாலிபன். செய்யாத குற்றத்திற்கு அவனுக்குச் சிறை வாழ்வு கிடைத்தது. குற்றம் புரியாத அவனுக்கு நீதிமன்றம் தந்த பரிசை எண்ணி எண்ணிக் குமுறிக் கொண்டிருந்தான் என்றாலும் சிறை வாழ்வுக்கு ஏற்றாற்போலத் தன்னை மாற்றிக்கொண்டு, அந்த ஏழாண்டுக் காலத்தைக் கழிப்பதற்கு நெஞ்சில் உறுதியேற்றுக்கொண்டான்.

சிறைக் கைதிக்குரிய பணிகளைச் செம்மையாகச் செய்வதிலும் சிறையில் உள்ள நூல் நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்வதிலும் அவன் மிகுந்த அக்கறை காட்டினான். அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவருக்கு ஏனோ தெரியவில்லை; அந்த வாலிபன்மீது தேவையில்லாத ஒரு வெறுப்பு! இத்தனைக்கும் சிறை விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு அனைத்து அதிகாரிகளிடமும் அவன் பணிந்தே நடந்து வந்தான்.

சிறையில் உள்ள மற்ற கைதிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதிலும் அவர்களுக்கு நோய்நொடியெனில் ஓடிச் சென்று உதவி செய்வதிலும் அந்த வாலிபனுக்குத் தனி ஆசை! அந்த நற்செயல், ஏனோ குறிப்பிட்ட அந்த அதிகாரிக்குப் பிடிக்கவில்லை. அதன் விளைவை அந்த வாலிபன் சிறைக்குள் அடிக்கடி அனுபவித்தான்.

வேண்டுமென்றே அவனைக் கடுமையான குரலில் கூப்பிட்டு, இழிவாகப் பேசுவான் அந்த அதிகாரி. சில நாட்களில் கைத்தடியால் அந்த வாலிபனை

அடித்துவிட்டும் செல்வான். ‘ஏனய்யா என்னை வீணாக அடிக்கிறீர்கள்’ என்று அந்த வாலிபன் கேட்டபோதெல்லாம் அதற்குத் தண்டனையாக, சிறைக்கூண்டுக் கதவைத் திறக்காமல் சிறைக்குள்ளேயே சிறை வைத்து அவனை வதைக்கவும் தயங்கவில்லை. சோறு தண்ணீர் கொடுக்காமல்கூட அவனைப் பட்டினியால் துவளவிட்டதும் உண்டு.

ஏழாண்டுத் தண்டனையில் இப்படி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதற்கிடையே அவன் செய்திருந்த மேல் முறையீட்டின்பேரில் விசாரணை முடிவுற்று; குற்றமற்றவன் எனத் தீர்ப்பு வழங்கப்பெற்று விடுதலை பெற்றுவிட்டான். இரண்டு ஆண்டுகள் சிறைப் பறவையாக இருந்த அந்த வாலிபன் தன் பெற்றோரைக் காண, பிறந்த சிற்றூர் நோக்கிப் புறப்பட்டான்.

அவன் சென்ற வழியில், அந்த சிறை அதிகாரி பாதையில் விழுந்து கிடந்ததைப் பார்த்துத் திடுக்கிட்டான். அருகே சென்று கவனித்தான். அதிகாரியின் உடலின் பல பகுதிகளில் குருதி வழிந்து கொண்டிருந்தது. அவனைத் தூக்கி மடியில் வைத்துக்கொண்டு “அய்யா! அய்யா!” என்று அழைத்தான்.

அதிகாரி, கண்ணைத் திறந்தான். ‘தண்ணீர்! தண்ணீர்!’ என்று முனகினான். வாலிபன், பக்கத்திலிருந்த குளத்திற்குச் சென்று கை நிறையத் தண்ணீரை அள்ளிவந்து அதிகாரியின் வாயில் ஊற்றினான்.

“வெறிபிடித்து ஓடி வந்த மாடு ஒன்று இப்படி முட்டித் தள்ளி உருட்டி விட்டது” என்று அதிகாரி அழுதுகொண்டே சொன்னான். அவனைத் தூக்கி அந்த வாலிபன் தோளில் போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான். அவன் குணமடையும் வரையில் அருகிலேயே ஐந்தாறு நாட்கள் இருந்து கவனித்து வந்தான்.

ஒரு நாள், அந்த வாலிபன் அதிகாரியிடம் விடைபெற்றுக் கொண்டபோது, அவன் கைகளை அன்போடு பிடித்துக்கொண்டு அதிகாரி கேட்டான்: “நான் உனக்கு எவ்வளவோ தீமை செய்திருக்கிறேன். ஆனால், நீ அதற்கு மாறாக இவ்வளவு உதவி செய்திருக்கிறாயே! அது எப்படி முடிந்தது உன்னால்?”

வாலிபன் பதில் கூறினான், புன்னகையுடன்!

“அய்யா! நீங்கள் எனக்குச் செய்த தீமைகளையும் இப்போது நான் உங்களுக்குச் செய்த நன்மையையும் நான் மறந்துவிட்டேன். தீமை செய்தவர்களைத் தண்டிக்க, அவர்கள் வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மையைச் செய்துவிட்டு, அந்தத் தீமையையும் அதற்கு மாறாகச் செய்த நன்மையையும் மறந்துவிடல் வேண்டுமென வள்ளுவர் கூறியிருக்கிறார். இது, துறவறம் மேற்கொண்டோர்க்கு மட்டுமல்ல, அனைவர்க்கும் பொருந்தும்.”

அதிகாரி அந்த வாலிபனை நன்றிப் பெருக்குடன் தழுவிக்கொண்டு, தன்னை மன்னித்துவிடுமாறு கேட்டுக்கொண்டான்.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்.”

அதிகாரம் - 32 - இன்னா செய்யாமை; பாடல் - 314

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்