பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 147 / 300

கொடுத்துங் கொள்ளவேண்டும்

அச்சுப் பக்கம் 319320 · ஸ்கேன் 336337 · அதிகாரம் 87 (பகைமாட்சி) — குறள் 867

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“எவ்வளவு பொருள் செலவானாலும் பரவாயில்லை. அந்த நரித்தலையனின் பகையை நான் பெற்றாக வேண்டும். அப்படிப் பெறுவதுதான் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியூட்டக் கூடியதாகும்.”

அருகில் அமர்ந்திருந்த புலவரிடம், அவரால் புகழ்ந்து பாடப்பெற்ற அரிமாநெஞ்சன் சொன்னான். கயல்நாடு எனும் சிற்றரசுக்குத் தலைவன்தான் அரிமாநெஞ்சன்! அவனுக்கு நெருங்கிய நண்பனாக விளங்கிடும் வாய்ப்பு பெற்றவன்தான் நரித்தலைவன். பெயருக்கேற்றாற்போல சூதுமதி கொண்டு, சூழ்ச்சிவலை பின்னி அரிமாநெஞ்சனுடைய அன்புக்குரிய சுற்றத்தாரையும் நண்பர்களையும் விரட்டி விட்டவன். இந்த உண்மையை புலவர் எடுத்துரைத்த போதெல்லாம் அதை நம்ப மறுத்தான் அரிமாநெஞ்சன்! இப்போதும் அதே புலவரிடம் அவன், நரித்தலையனின் பகையைப் பொருள் கொடுத்தாவது பெற்றிட வேண்டும் என்று கூறியதும் அவர் வியப்பில் ஆழ்ந்தார்!

“கயல் நாட்டுக் காவலனா இவ்வாறு பேசுவது? நரித்தலையன்மீது திடீரென இப்படிக் கோபம் பொங்குவானேன்? அவன் தீயவன் - தீயினும் கொடியவன் - என்று நான் எடுத்துக் கூறியபோதெல்லாம் என் பேச்சை ஏற்றுக்கொள்ள மறுத்தாய்! இப்போது அவன் எந்தப் பகையும் உன்னோடு கொள்ளவில்லையே! நண்பனாகத்தானே இருக்கிறான். திடுமென அவனைப் பகைவனாக்கிக் கொள்வதால் பயன் என்ன?”

என்று புலவர், கேலிப் புன்னகை புரிந்தவாறு அரிமாநெஞ்சனைக் கேட்டார்.

“புலவரே! என்னை மன்னித்துவிடுக. தொடக்கத்தில் அந்தத் துரோகியைப் பற்றி நீவிர் எச்சரித்தபோது, என் செவிகள் அடைபட்டுக் கிடந்தன. என்னுடன் மிக நெருக்கமாக இருக்கிறானேயென்று எண்ணி ஏமாந்தேன். அடுத்துக் கெடுக்கும் கூட்டத்தைச் சேர்ந்தவன் நரித்தலைவன் என்பதை, அவனது அண்மைக் காலச் செயல்கள் வாயிலாகத் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.”

அரிமாநெஞ்சனின் கண்கள் கலங்கின. புலவர், அவனுக்கு ஆறுதல் வழங்கியவாறு அறிவுரை கூறினார்:

“என் செய்வது! எளிதில் யாரையும் நம்பிவிடும் இயல்பு உனக்கு! யாரிடமும் அவன் பெறமுடியாத மதிப்பை நீ அவனுக்கு அளித்தாய். கொள்ளிக் கட்டையால் தலையைச் சொரிந்து கொள்வது என்பார்களே, அதைப்போல நரித்தலைவனுக்கு நண்பர்கள் வரிசையில் முதலிடம் வழங்கினாய். இன்று அவனைப் பகைவனாக ஆக்கிக் கொள்ள என்ன விலை கொடுக்கவும் தயார் என்கிறாய். இதைத்தான் வள்ளுவர் அழகாக எழுதியிருக்கிறார். அதாவது; தன்னை அடுத்திருந்தவாறே தனக்கு மாறான காரியங்களைச் செய்பவனுடைய பகையை பொருள் கொடுத்தாவது வாங்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார். இப்போதாவது அந்தக் குறள் மொழி, உன் கண்ணைத் திறந்து கண்டு களிபேருவகை கொள்கிறேன்.”

சிற்றரசன், செந்தமிழ்ப்புலவரைக் கட்டித் தழுவிக்கொண்டு “எங்கே? என்னைத் திருத்திய அந்தக் குறளை உங்கள் வாயால் ஒருமுறை சொல்லுங்கள் புலவரே!” என்றான். புலவர் அந்தக் குறளை இசையுடன் பாடிக் காட்டினார்.

இதோ அந்தக் குறள்:

“கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை.”

அதிகாரம் - 87 - பகைமாட்சி; பாடல் - 867

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்