பொருளடக்கம் 146 / 300
பெயலாற்றா நீருலந்த
அச்சுப் பக்கம் 317–318 · ஸ்கேன் 334–335 · அதிகாரம் 118 (கண்விதுப்பழிதல்) — குறள் 1174
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“என் குற்றமல்ல மானே! என் குற்றமல்ல! என் கண்கள் செய்த குற்றம்!
அந்தக் குற்றத்திற்குத் தண்டனையை நான் அனுபவிக்கிறேன். புல்கட்டு சுமந்துகொண்டு ஒற்றையடிப் பாதையிலே, வயல்வெளியிலே நான் வந்து கொண்டிருந்தேன். மண்வெட்டியும் கையுமாக மடைகோலிக் கொண்டிருந்த என் அத்தை மகன் ஒளியன், எதிரே வருவார் என்று நான் எதிர்பார்த்தேனா என்ன? எனக்கு வழிவிட வேண்டுமென்று அவர் ஒற்றையடிப் பாதையோரம் ஒதுங்கியிருக்கிறார். வரப்பு வழுக்கி விட்டுவிட்டது; கழனிச் சேற்றில் மல்லாந்தவாறு விழுந்துவிட்டார். பருவப்பெண் நான்! பாய்ந்தோடி அவரைத் தூக்கிவிட முடியுமா? பண்பு தடுத்தது! நாணம் என்னைச் சிலையாக நிற்கவைத்து விட்டது! என் கண்கள் மட்டும் கழனியில் விழுந்து எழுகின்ற அவரை, உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் அள்ளிப்பருகிடத் தவறவில்லை!
மானே! அவை பொல்லாக் கண்கள்! மன்னிக்க முடியாத குற்றவாளிகள்! அடடா! ஒளியனின் உடலழகு பற்றி வர்ணிக்க ஓரிரு நாக்குகள் போதாதே!”
மல்லாந்து கிடந்தபோது, அவனின் அகன்ற மார்பினைக் கண்டேன். அதில் முகம் பதித்துக் கிடந்தால், உலகமே வெடித்துச் சிதறினாலும் எனக்குத் தெரியாமற் போய்விடும். இரு குன்றுகளே அவனின் தோள்கள். அவற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு, சற்றே தடித்த அவர் உதடுகளை என் மெல்லிய இதழ்கள் கொண்டு மெதுவாக உரசினால், அந்த இன்பத்திற்கு இணையாய் இந்தப் புவியில் வேறென்ன இருக்கமுடியும்! ஒளியன் எனும் பெயருக்கேற்ப இரண்டு திரண்ட விழிகள்! அந்த விழிகளின் முடிகளை என் காந்தள் விரல்கள் கொண்டு தடவிக் கொண்டே அவர் அருகே படுத்திருக்கலாம்போலிருக்கிறது! அவருக்கும் எனக்கும் திருமணம் முடிப்பதாக இரு வீட்டாரும் நிச்சயித்துவிட்டனர். அந்தப் பாழும் பஞ்சாங்கம் மட்டும், ஓராண்டு காலம் வரையில் ஒத்திப்போட வேண்டுமென்று ஊறிக் கொட்டிவிட்டதாம்! அது வரையில் நான் காத்திருக்க வேண்டுமென்பது முடிகிற காரியமா? சரி; என் தலையெழுத்து; காத்துக் கிடக்கிறேன். அதற்குள் ஏன் என் கண்கள் இப்படியொரு சந்திப்பை அவருடன் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்! விழுந்து எழுந்த அவர் என்ன செய்தார் தெரியுமா?
ஒரு தட்டுத் தட்டிவிட்டு, ஒரு கிள்ளும் கிள்ளிவிட்டுப் புன்னகையைச் சிந்திவிட்டுப் போய்விட்டார்! கிள்ளியது என் கன்னத்தில்! தட்டியது எங்கே என்று கேட்காதே! சொல்வதற்கு வெட்கமாக இருக்கிறது! ஆனால், அந்தக் கை பட்டதால் ஏற்பட்ட உணர்ச்சி என்னை என்னவோ செய்கிறது! தீராத காமநோய் தீப்போலப் பிடித்துக்கொண்டது என்னை!
நானிழைத்த குற்றமா இது? இல்லை! இல்லை! என் கண்கள் இழைத்த குற்றம்! அதற்குத் தண்டனையாகத்தான் என் கண்கள் அழுது இறுதியாக நீர் வறண்டு கிடக்கின்றன.
தீராத காமநோயை எனக்கு உருவாக்கிய கண்கள், நீர் வறண்டு போகும் வரையில் அழுது நியாயம்தானே!”
-காதலனைக் கண்டு விட்ட ஒரு பெண்மணி, தனக்கேற்பட்ட கடுமையான காதல் நோயைக் குறித்து கவலைப்படுகிறாள். அதை விளக்குவதே இந்தக் குறள்:-
“பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து”
அதிகாரம் - 118 - கண்விதுப்பழிதல்; பாடல் - 1174
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்