பொருளடக்கம் 145 / 300
கடுமொழியும் கையிகந்த
அச்சுப் பக்கம் 315–316 · ஸ்கேன் 332–333 · அதிகாரம் 57 (வெருவந்த செய்யாமை) — குறள் 567
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“நாட்டாளும் நாயகனே! நமது ஆட்சிக்குட்பட்ட மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கோட்டை வாயிலில் குமுறிக்கொண்டு நிற்கிறார்கள்.”
“காவலனே! காரணம் என்னவாம்? ஏன் அந்தக் கழுதைகளைக் கோட்டை வாயில் வரையில் வருவதற்கு அனுமதித்தீர்கள்?”
“பசியாம்! பட்டினியாம்! பல நாட்களாக!”
“அவர்களை உண்ணக்கூடாதென்று தடுத்து யார்?”
“உணவு இல்லை! அதனால் பட்டினி கிடக்கிறார்கள்.”
“ஓகோ! அப்படியா? உணவு இல்லாமற்போனதற்குக் காரணம் என்னவாம்?”
“வேலையில்லை! எனவே ஊதியத்திற்கு வழியில்லை! உயிரைத் துளைக்கிறது பசி என்று...”
“ஊளையிடுகிறார்கள்! அதை எனக்கு உரைத்திட நீ வந்துவிட்டாய்! நான் நிம்மதியாக இருப்பதே உங்களுக்குப் பிடிக்காது!”
“தங்களைக் கண்டு குறையினைத் தெரிவித்து விட்டுத்தான் திரும்புவோம் என்று அந்தக் கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்.”
“ஆர்ப்பாட்டம் செய்வார்கள்! பிறகு போர்ப் பாட்டும் பாடுவார்கள்! இன்று எனக்கு அரசவை நடனக்காரிக்குப் பரிசு வழங்கும் விழா இருக்கிறது. பார்க்க வாய்ப்பில்லை என்று கூறி விரட்டி அடியுங்கள், அந்த வீணர்களை!”
“சிந்தித்துக் கூறுங்கள்! தங்கள் ஆணையை அப்படியே நமது காவலர்கள் நிறைவேற்றினால், கோட்டை வாயிலில் கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்கும் உருவங்கள், கன்ற பிழம்புகளாக மாறிவிடக்கூடும்.”
“எச்சரிக்கை செய்து என் வீரத்தை இகழ்கிறாயா? எலிகள் கூடி புலியை வென்றதாக் கதைகூட எழுதிக் களிக்க முடியாது! வேலையில்லாமல் அவர்கள் அலைவது விதிப்பயன்! தலைவெழுத்து! ஆண்டவன் கட்டளை!”
“ஊதியம் போதவில்லையென்றார்களாம்! உரிமைக் குரலுக்கு இடமே இல்லையென்று, அவர்களை வைத்து வேலை வாங்கியவர்கள் விரட்டி விட்டார்களாம். தாங்கள் தலையிட்டால் அவர்களின் தலையெழுத்தை மாற்றலாம்; தரித்திரத்தைப் போக்கலாம்.”
“சரியான திமிர் பிடித்தவர்கள்! உயிர் வாழ உணவு கொடுத்தவனை எதிர்த்து, உரிமைக்குரல் கொடுக்கும் நாய்களுக்கு நமது நாட்டிலேயே இடமில்லை. நான் அந்த அடங்காப் பிடாரிகளைக் காண இயலாது! முடியாது! இதுவே என் இறுதி யான - உறுதியான முடிவு! இதனை அறிவித்துவிடு அவர்களுக்கு! போ உடனே!”
கோட்டை வாயிலில் நின்ற கூட்டம் திரும்பிச் செல்ல மறுத்தது. காவலர் சூழ்ந்தனர். கடுமையாகத் தாக்கினர். அந்த ஆயிரவருக்குத் தலைமைபெற்று முன்னணியில் வந்த ஆறு வாலிபர்கள்மீது கொலைக்குற்ற வழக்கு! அதுவும் நாட்டாளும் நாயகனையே கொல்ல வந்தார்கள் என்று வழக்கு!
அறுவருக்கும் மரண தண்டனை அளிக்கப்பட்டது. செய்தி, காட்டுத் தீயாகப் பரவியது.
தண்டிக்கப்பட்டவர்கள், தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். மக்கள் கடல் பொங்கியெழுந்தது. சிறைக்கோட்டத்தின் மதிற்சுவர் நொறுக்கப்பட்டது. அறுவரையும் விடுவித்தனர்.
சிறைக்கிளம்பிய அந்தச் சினவேங்கைக் கூட்டத்தின் அடுத்த இலக்கு அரண்மனை தான். மக்கள் வெள்ளம் அங்கும் நுழைந்தது. மன்னன் அங்கில்லை; அவன் எங்கோ ஓடிவிட்டான். மக்களின் வெற்றிமுரசம் விண்ணைப் பிளந்தது.
கடுமையாகப் பேசுவதையும் முறை கடந்த தண்டனை வழங்குவதையும் கொள்கையாகக் கொண்டவர்களின் ஆட்சி வலிமை, அரத்தால் இரும்புகூடத் தேய்ந்து விடுவதைப்போலத் தேய்ந்து விடுமென்று வள்ளுவர் எச்சரிக்கிறார்.
அதற்கு இதோ குறள்:-
“கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்”
அதிகாரம் - 57 - வெருவந்த செய்யாமை; பாடல் - 567
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்