பொருளடக்கம் 144 / 300
அழுக்காறு அவா வெகுளி
அச்சுப் பக்கம் 313–314 · ஸ்கேன் 330–331 · அதிகாரம் 4 (அறன் வலியுறுத்தல்) — குறள் 35
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“தாத்தா! அதோ - தள்ளாடி நடந்து போகிறாரே; அவர் யார்? ஆளைப் பார்த்தால் காட்டில் வாழ்ந்தவராகக் காணப்படுகிறாரே! ஆனால், நடையில் ஏன் இந்தத் தளர்ச்சி?” என்று பேரன் கேட்டான்.
“அவரா? ஆள் வலுவானவர் மட்டுமல்ல; அறிவு நூல்களைக் கூடக் கற்றவர்! ஆயினும் அவர் தடுமாற்றத்தோடு நடப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. தூக்க முடியாத சுமையைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அதனால்தான் தள்ளாடிடும் நிலை” என்று பேரனுக்கு அந்த முதியவர் பதில் அளித்தார்.
இளைஞனல்லவா? அத்துடன் அவனுக்கு மன நிறைவு ஏற்படவில்லை. “என்ன தாத்தா! அந்த மனிதர் தலையில் எந்தச் சுமையையும் காணவில்லையே! நீங்கள், அவர் பளுவைத் தூக்க முடியாமல் திண்டாடுவதாகக் கூறுகிறீர்களே!” என்று கிழவரை மடக்கினான்.
“தளிர்ப் பருவம் உனக்கு! அதனால் அந்த மனிதர் தடம் மாறி நடப்பது உனக்குத் தெரியவில்லை. அற வழியிருக்க, அதனை விடுத்துப் பிற வழியில் அவர் செல்வது ஏன் என்று எனக்குத் தெரியும். அவர் சுமந்திருக்கிற மூட்டைகளின் அழுத்தத்தால் அவர் கால்கள் பின்னுகின்றன. எனவே அறவழியை விடுத்து எங்கு செல்கிறோம் என்று தெரியாமல் கால்கள் போகும் வழி போய்க் கொண்டிருக்கிறார்”
“கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் தாத்தா! என்ன மூட்டை? என்ன சுமை? ஏன் அவற்றை அவர் வீணாகச் சுமக்கிறார்? அந்தச் சுமை எதுவும் என் கண்ணுக்குத் தெரியவில்லையே!”
“கண்ணுக்குத் தெரியாது! ஆனால், அறிவுக்குப் புலப்படும் அந்தப் பெரும் சுமை! சொல்லுகிறேன் கேள்! ஒரு பொருளின் மீது மனிதன் விருப்பங்கொள்வது - அல்லது ஆசைப்படுவது இயல்பு! ஆனால், அதை அடைவதற்காக எத்தகைய குறுக்கு வழிக்கும் ஒருவன் தயாராகிக் கொள்கிறான் என்றால், அந்த ஆசை அவனை மனித சமுதாயத்தின் மதிப்பை இழக்கச் செய்து, அவன் தலையில் பெரும் சுமையாக ஏறி உட்கார்ந்து கொள்கிறது. அப்படிப்பட்ட ஆசையை இதோ அந்த மனிதர் சுமந்துகொண்டு நடக்கிறார். தன்னுடைய தனிப்பட்ட ஆசாபாசங்களுக்காகத் தன்மானத்தையும் இழக்கத் தயாராகிவிட்டாரே என்று விபரமறிந்தோர் வியந்தனர். அவர்களைக் கண்டு அவர் கொண்ட சினம் மலைபோல் உருவெடுத்தது! அந்தச் சினமெனும் பெரும் சுமையையும் தூக்கிக்கொண்டு நடக்கிறார். எப்படியிருந்த மனிதர் இப்படி ஆகிவிட்டாரே என்று அவருக்காக இரக்கப்பட்டவர்கள் மீது கடுஞ்சொற்களை வாரியிறைத்தார். அந்தக் கடுஞ்சொற்கள்; யானையானது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டது போல் - அவர் தலைக்கே மற்றுமொரு சுமையாக வந்து சேர்ந்தது! இத்தனை சுமையுடன் அவரால் எப்படி அறவழியில் பயணம் செய்திட முடியும்? அதனால்தான் பாதை தவறிப் பரிதவிக்கிறார்.”
“தாத்தா! தாத்தா! அய்யோ - அந்த மனிதர் ஆற்றில் விழுந்துவிட்டார்! விழுந்தவர் நீந்திக்கூட முடியாமல் தவிக்கிறார். அதோ பாருங்கள் தாத்தா, அவர் ஆற்றில் முழுகிக் கொண்டேயிருக்கிறார். ஆமாம்! ஆளையே காணவில்லை! ஆற்றோடு போய்விட்டார் தாத்தா!”
“அவர் விழுந்துவிட்ட ஆறு என்ன ஆறு தெரியுமா? அதுதானப்பா அழுக்காறு! அதில் விழுந்த யாரும் தப்பமுடியாது! எந்த ஆற்றில் விழுந்தாலும் ஒருவேளை தப்பிவிடலாம் - இந்த அழுக்காறு இருக்கிறதே; இதில் விழுந்து பிழைத்தோர் யாரும் இல்லை.”
“தாத்தா! அழுக்காறு என்றால் என்ன?”
“அதுதானப்பா அடுத்தவன் வாழ்வதைப் பார்த்து - அடுத்தவன் புகழப்படுவதைப் பார்த்து - அடுத்தவனின் அறிவாற்றல், வீரம், உறுதி, இவற்றைப் பார்த்து - பொறாமை கொள்ளுதல்! அதற்குப் பெயர்தான் அழுக்காறு! அதனால்தான் வள்ளுவர் பொறாமை, பேராசை, சினம், கடுஞ்சொல் ஆகிய நான்கு சுமைகளையும் சுமக்காமல் நடந்தால், அறவழியில் எளிதாகச் செல்லலாம் என்று கூறியிருக்கிறார்.”
தாத்தாவின் விளக்கம் கேட்டுப் பேரனின் விழிகள் ஒளி சிந்தின.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.”
அதிகாரம் - 4 - அறன் வலியுறுத்தல்; பாடல் - 35
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்