பொருளடக்கம் 143 / 300
அற்றார்க்கொன்று ஆற்றாதான்
அச்சுப் பக்கம் 311–312 · ஸ்கேன் 328–329 · அதிகாரம் 101 (நன்றியில் செல்வம்) — குறள் 1007
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அழகோவியம் அச்சுப்பதுமை இளங்கிள்ளை எழில்புறா மாதுளைமுத்து மாணிக்கவல்லி
- இப்படி அவளைப்பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம். சொற்களுக்குத் தான் பஞ்சம் ஏற்படும், அந்தச் சொக்கத்தங்க மேனியாளைப் புகழ இயலாமல்! உச்சிமுதல் உள்ளங்கால் வரையில் இளமை கொழிக்கும் உருவம். உலகைத் துறந்த முனிவனையும் கவர்ந்திழுக்கும் கன்னிப் பருவம். வில்வொத்த புருவம். விழியிரண்டும் கணைகள். பல் வரிசை முத்தாரம் எனலாம். ஆனால், முத்தாரம் முத்தமிடும்போது சுவைக்காதே! தேனமுத அருவியினிலே நனைந்திருக்கும் முத்துக்கள் அன்றோ அவள் பற்கள்! ஒடியுமோ அவள் இடையென்ற கவலையின்றி ஓங்கி நிற்கும் இரு கொடுமுடிகள்! “மொத்தத்தில் அழகுப் பூங்கொடியென்று கூறிவிடலாம்” என முத்தாய்ப்பு வைத்தால்தான் தமிழ்க் கவிஞர்கள் தப்பமுடியும் எனும் அளவுக்கு இன்பக் கவிதைகட்டும் கட்டுப்படாத பேரழகுப் பெட்டகமாய் அந்தப் பெண் விளங்கினாள்.
தாயில்லை - தந்தையுமில்லை - உற்றார் உறவினர் யாருமில்லை! தனியாகத் தான் அவள் வீட்டில் இருந்தாள். “கதவோரம் நிற்கமாட்டாளா? கணநேரம் அவள் எழில்
கண்டு இதயத்தில் இன்பம் மொண்டு செல்லலாம்” எனத் துடித்திட்ட இளைஞர்கள் அந்த ஊரில் பலருண்டு.
குளம் சென்று அவள் நீராடும்போது அவளழகை, அவள் வயதுள்ள பெண்களே கண்டு வியப்பதுண்டு. அவள், யாரைத்தான் காதலிக்கிறாள்? யாருக்குத் தன்னை ஒப்படைத்திருக்கிறாள்; அந்தப் பெரும்பேறு பெற்றவன்தான் யார்? என அறிந்துகொள்ளவும் ஊர் தவியாய்த் தவித்தது.
அந்த இன்பக் கனியை யாருமே சுவைக்கவில்லை. அவள் யாருக்கும் அந்த வாய்ப்பைத்தரத் தயாராயில்லை. தன்னேரில்லாத தன் அழகைக் குறைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை. தன் எழிலைக் தானே கண்ணாடியில் பார்த்து மகிழ்வாள்; பெருமைப்படுவாள். ஆடவன் ஒருவன் கைப்பட்டால், தன் உடற்கட்டு உருக்குலையும் - அழகு சரியும் - அதனால் எவனுக்கும் ஒப்புதல் தரவுமில்லை; அந்தப் பேச்சுக்கே இடம் வைக்கவுமில்லை.
நாட்கள் நகர்ந்தன. ஆண்டுகள் உருண்டன. மணவிழா நடக்காமலே மணிவிழாப் பருவம் வந்தது அவளுக்கு! அந்த அழகுச் சிலைக்கு இப்போது வயது அறுபது! காளையொருவன் கரம் பிடித்தால் கட்டழகு பட்டொழியும் எனக்காத்து வந்த அவளழகு, காலத்தின் கரம்பட்டு மெல்லமெல்லக் கரைந்து போயிற்று! கிழமானாள்! நரை, திரை, மூப்புடன் நடமாடும் பழமானாள்!
இப்படியொரு பெண்ணின் கதையை, வள்ளுவர் ஒரே வரியில் உருக்கமுடன் எழுதிக் காட்டுகிறார்.
“மிகுந்த அழகுடைய ஒரு பெண் தனியாகவே வாழ்ந்து முதுமையடைந்துவிட்டாளாம்.” இதுதான் வள்ளுவர் கூறும் ஒரு பெண்ணின் கதை! இந்தக் கதையை ஏன் சொல்கிறார் தெரியுமா? இது கதையல்ல! ஒரு ஈடு இணையற்ற உவமை!
“பொருளற்று எங்கும் வறியவனுக்கு ஒரு பொருள் கொடுத்து உதவி செய்யாதவனுடைய செல்வம், ஒரு அழகான பெண், தனியாகவே வாழ்ந்து முதுமை அடைவதைப் போன்றது.”
இதோ அந்தக் குறள்:-
“அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று.”
அதிகாரம் - 101 - நன்றியில் செல்வம்; பாடல் - 1007
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்