பொருளடக்கம் 142 / 300
பண்டறியேன் கூற்றென்
அச்சுப் பக்கம் 309–310 · ஸ்கேன் 326–327 · அதிகாரம் 109 (தகையணங்குறுத்தல்) — குறள் 1083
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“என்னப்பா எழினி! திங்கள் சந்தைக்குப் போய் இப்போதுதான் திரும்புகிறாயா? கைகளில் எதுவும் பொருளைக் காணோம்! ஏன்; ஒன்றும் வாங்கவில்லையா? சந்தைக்குப் போகவேண்டுமென்று துடித்துக்கொண்டு கிளம்பினாய்! சோர்ந்துபோய் வருகிறாயே; என்ன காரணம்?”
இனியனின் கேள்விக்கு, எழினி விடையளிக்காமல் எங்கேயோ நினைவை அலையவிட்டுக்கொண்டு நின்றான்.
குன்றென விளங்கும் அவன் தோளைப் பிடித்துக் குலுக்கி, “இலவு வெடித்துப் பஞ்சு காற்றில் பறப்பதுபோல உன் சிந்தனையை எங்கோ பறக்க விட்டுவிட்டுத் திகைத்து நிற்கிறாயே; ஏன்? என்ன நடந்தது?” என்று இனியன், கேள்விகளை அடுக்கினான்.
“ஒன்றுமில்லை இனியா! எமனைச் சந்தித்துவிட்டு வந்தேன்” என்றான் எழினி, அமைதியாக!
“எமனையா? எங்கே சந்தித்தாய்? எப்படியிருக்கிறான் அவன்? உண்மையிலேயே எமனைச் சந்தித்தாயா? அல்லது ஏதாவது விபத்திலிருந்து தப்பியதைத்தான் இப்படிக் கூறுகிறாயா?”
“இல்லை! இல்லை! எமனைத்தான் பார்த்துவிட்டு வருகிறேன்.”
“அப்படியா? அதுதான் மிரண்டு போயிருக்கிறாய்! எப்படியிருந்தான் எமன்? எருமை வாகனத்தில் எதிரே வந்தானா? கையில் உயிர்களைப் பறிக்கும் பாசக்கயிறு வைத்திருந்தானா? அந்தக் கயிறு எப்படி இருந்தது? தூக்குக்கயிறு போல இருந்ததா? ஆள், அமாவாசை இருட்டைப்போல கறுப்பா? நெருப்பைப் போல இருந்தனவா கண்கள்? இரு கோடரியை மாட்டிவிட்டதுபோல மீசைகள் உண்டா அவனுக்கு? அவன் சிரித்தால் கோடை இடி இடிப்பதுபோல் இருக்குமாமே! என்ன எழினி? ஏன் என் ஆவலைத் தூண்டுகிறாய்? எமன் எப்படித்தான் இருந்தான் சொல்லேன்!”
“இனியனே! என் நண்பனே! எமன் என்று கூறப்படுவதைத்தான் நானும் நீயும் கேள்விப்பட்டிருக்கிறோம். எமன் என்பது எருமையில் வருவதுமில்லை! பயங்கர வடிவம் கொண்டதுமில்லை! உயிர்களைக் கவரக் கையில் பாசக்கயிறு வைத்திருக்கவுமில்லை!”
“பின் என்ன எழினி? நீ என்னைத்தான் பார்த்தாயா?”
“எமன் ஓர் ஆணே அல்ல!”
“பிறகு?”
“அழகின் வடிவம்! அற்புதப் படைப்பு! நிலவொளியை உருக்கி வார்த்த மேனி! தாமரையின் மலரே முகம்! அதன் மொட்டுக்களே மார்பகம்! புன்னகை மின்னும் பொன் இதழ்கள்! பூவையொத்தவளாம் அந்தப் பூவையைக் கண்டேன் சந்தைக் கூட்டத்தில்! நான் எதிர்பாராத நிலையில் இரண்டு கூரிய வேல்கள் என் நெஞ்சில் தைத்தன. நான் தோல்வியை ஒப்புக்கொண்டு புறங்காட்டி ஓடிவந்து விட்டேன். இனியா! என் நண்பா! இப்போது புரிகிறதா? எமன் என்று கூறப்படுவதை இதுவரையில் நான் அறியாமல் இருந்தேன். சந்தையில் கண்டேனே அந்தச் சந்தனப் பாவையை; அவளைப் பார்த்த பிறகுதான் எமனுக்கே எனக்குப் பொருள் புரிகிறது. எமன் என்பது பெண் தன்மையுடன் கூடியதும் ஆண்கள் மீது போர் செய்து வெற்றி பெறக்கூடிய பெரிய கண்களாம் போர்க்கருவிகளையும் கொண்டது.”
“ஓகோ! விழிவேல் பாய்ந்து காயத்துடன் ஓடிவந்திருக்கிறாயா? உன் உயிரையே பறிப்பதற்கும் பாசக்கயிறு அந்தக் கண்கள் வழியாக வீசப்பட்டு விட்டது போலும். சந்தேகமில்லை; நீ சந்தித்தது எமனேதான்!”
“இனியா! அந்த எமனை மீண்டும் காணவேண்டும் நான்! திங்கள்தோறும் எதற்காகச் சந்தை கூடவேண்டும். தினந்தோறும் கூடினால் என்ன?”
எழினியை, இனியன் கட்டிப் பிடித்துக்கொண்டு கலகலவெனச் சிரித்து, “கவலைப்படாதே! இப்படியொரு எமனை நான் ஏற்கனவே சந்தித்து - எல்லாமே முடிந்து, இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறேன். அடுத்த திங்கள்சந்தையின்போது, நீ கண்ட எமனை உனக்கே உரியதாக்குகிறேன்” என்று உறுதி கூறினான்.
“பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு.”
அதிகாரம் - 109 - தகையணங்குறுத்தல்; பாடல் - 1083
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்