பொருளடக்கம் 141 / 300
சிறைகாக்குங் காப்புவன்
அச்சுப் பக்கம் 307–308 · ஸ்கேன் 324–325 · அதிகாரம் 6 (வாழ்க்கைத்துணைநலம்) — குறள் 57
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
பெண் வண்ணப் பாவையொருத்தியை மணந்துகொண்டு இல்வாழ்வைத் தொடங்கினான், இராமன் என்பான். அவள் பெயர் அன்னம்.
இராமனுக்குப் பெரியதோர் அலுவலகத்தில் உயர்பதவி!
பணி முடித்து வரும்போது வீட்டு வாயிற்புறத்தில், அன்னம் நின்று கொண்டிருப்பதை அவன் கண்டு வெகுண்டான். அவன் வருகைக்காகத்தான் அவள் காத்திருந்தாள்.
ஆனால், அவனோ அன்னத்தின் கன்னத்தில் அறைந்து, “வீதியில் போகும் எவனைப் பார்த்து மயங்கிக் கொண்டிருக்கிறாய்?” என்று நெருப்பு மொழியையும் கொட்டினான்.
அன்னம் கண்ணீர் விட்டாள். அப்போது இராமன் அமைதி கொண்டானா யினும் அவளைப் பிற ஆடவர் பார்த்திடவும் கூடாது என்று கருதினான்.
“உனக்குத் தெரியாது அன்னம்! இந்த உலகத்தின் வாய் மிகப் பொல்லாதது. இப்படித்தான் என் அலுவலகத்தில் அமுதம் என்று ஒரு பெண் பணிபுரிகிறாள். மாலை நேரத்தில் கடற்கரையில் திரிவாள்; கடைத்தெருவில் அலைவாள்; ஆண்களுடன் கலகலவெனச் சிரித்தவாறு பழகுவாள். அவளைப் பற்றி ஊரே இழித்துப் பேசுகிறது. பெண்கள் என்றால் அடக்கம் இருக்க வேண்டும்.”
இப்படி அன்னத்துக்கு அறிவுரை கூறத் தொடங்கியவன், ஒவ்வொரு நாளும் அலுவலகம் செல்லும்போது அவளை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டு போவதையும் பணி முடித்து திரும்பிவந்து பூட்டிய கதவைத் திறப்பதையும் வாடிக்கையாக ஆக்கிவிட்டான்.
இப்படி நாட்கள், கிழமைகள், மாதங்கள் ஓடின.
ஒரு நாள் இராமன், அலுவலகத்தைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பும் வழியில் காற்று வாங்கக் கடற்கரைப் பக்கம் தலை நீட்டினான்.
அந்த வெண் மணற் பரப்பில், அமுதம் நடை பழகிக் கொண்டிருந்தாள்.
இராமனைக் கண்டு, அவள் புன்னகை புரிந்தவாறு “எது இந்தப் பக்கம்?” எனக் கேட்டாள். அன்னத்தைவிட அமுதம், அழகு வாய்ந்தவளல்ல எனினும் அவளது உடற்கட்டும் அங்க அசைவும் தனிக் கவர்ச்சி கொண்டவை என்பதை, இராமன் அவளருகே நின்றவாறு கண்டுபிடித்தான்.
ஏதோ ஓர் உணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்தது.
தொட்டால் துவளக் கூடிய பூங்கொடிதானே என்ற துணிவுடன், அமுதத்தின் தோள் மீது கையை வைத்தான்.
அவள் எந்த மறுப்பும் சொல்லாமல் நடந்து கொண்டிருந்தாள். அவனும் அவளைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.
ஒரு படகின் ஓரம் இருள் மெல்ல மெல்லத் தன் ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருந்தது.
“உட்காரலாமே!” என்றான் இராமன்.
சிரித்துக் கொண்டே அமுதமும் அங்கே உட்கார்ந்துகொண்டாள். அலுவலகப் பணிகள் குறித்து அமுதம் பேசினாள். இராமனோ அவளுடன் பேசிக்கொண்டே அவளை இறுகத் தழுவிக்கொண்டான். இமைப்பொழுதுதான்! அதற்குள் அமுதம் இராமனின் பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு, “சீ! என்ன நினைத்துக் கொண்டாய் என்னை! கள்ளங் கபடமில்லாமல் எல்லோரிடமும் கலகலப்பாகப் பழகுவதாலேயே என் கற்பைக் கடைச்சரக்காக எனக் கருதிவிட்டாயா?” எனச் சீறிச் சினந்து, புயல் வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிட்டாள்.
இராமனின் முகத்தில் அசடு வழிந்தது. வீட்டுக்குத் திரும்பினான், வெட்கத்தால் தலை குனிந்தவாறு!
வீட்டு வாயிலில் அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. விழிகளை அகலத் திறந்து பார்த்தான். கதவின் முகப்பில் ஒரு தாளின் சுருள்! அந்தத் தாளை எடுத்துப் பிரித்தான். அதிலிருந்த எழுத்துக்களைப் படித்தான்.
“அன்பு மிகுந்த இராமனுக்கு, அடுத்த வீட்டுக் கண்ணன் அறிவிப்பது! அன்னத்தைச் சிறைப்படுத்தி அவள் கற்பைக் காக்க நீ வகுத்த திட்டத்தில் தோல்வி அடைந்துவிட்டாய்! சிறையிட்டு ஒரு பெண்ணைக் காப்பதைவிட, அந்தப் பெண், கற்பு எனும் நிறையைக் காத்துக் கொள்ளும் பண்புடையவளாக இருப்பதே, தன்னை தானே காத்துக்கொள்ளும் அரணாக அமையும் என்பதை நீ அறியவில்லை. எங்களை மன்னித்துவிடு! அன்னமும் நானும் உன்னைவிட்டு நெடுந்தொலைவு சென்று விட்டோம்.”
அந்த எழுத்துக்கள் இராமனைப் பார்த்துக் கெக்கலி கொட்டிச் சிரித்தன. இராமன் அப்படியே மயங்கிய நிலையில் தலையைப் பிடித்துக்கொண்டு வாயிற் படியில் உட்கார்ந்தான்.
“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.”
அதிகாரம் - 6 - வாழ்க்கைத்துணைநலம்; பாடல் - 57
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்