பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 140 / 300

அ. அளவறிந்து வாழாதான் / ஆ. உடைத்தம் வலியறியார்

அச்சுப் பக்கம் 305306 · ஸ்கேன் 322323 · அதிகாரம் 48 (வலியறிதல்) — குறள் 479, 473

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

குறளில் அரசியல் எனும் தலைப்பில் வரும் ‘வலியறிதல்’ என்னும் அதிகாரத்தில் வருகின்ற பாக்கள் குறித்து ஒருநாள் ஆசிரியர் ஒருவர், தனது மாணாக்கர்கட்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அவரிடம் கற்றிடும் மாணாக்கர்களில், அரைவேக்காட்டு அறிவு கொண்ட ஒருவனும் இருந்தான். குறட்பாக்களைப் பலரும் தமது போற்றுதற்குரிய புலமைக்கேற்ப பல்வேறு கோணங்களில் பொருள் கூறி உணர்த்தியிருக்கின்றனர் என்றும் அந்த உரைகளையெல்லாம் “எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று வள்ளுவரே தெளிவாகச் சுட்டிக் காட்டுவதற்கேற்ப, ஆராய்ந்து ஏற்றுக்கொள்ளும் அறிவினைப் பெற்றிட வேண்டுமென்றும் ஆசிரியர் விரிவுரை நிகழ்த்திவிட்டு, அரைவேக்காட்டு மாணாக்கனை யழைத்து, “தம்பி! அதிகாரத்தின் தலைப்பு ‘வலியறிதல்’ என்று உள்ளதே; அதற்கென்ன பொருள்?” என்று வினவினார்.

அவன், வழக்கம்போல் விழித்துக்கொண்டு நின்றான். “உன் தலையில் எதுவுமே ஏறமாட்டேன் என்கிறதே!” என்று கூறிக் கோபத்துடன் அவன் தலையில் ஓங்கி ஒரு குட்டுக் குட்டினார் ஆசிரியர்!

“இப்போது புரிகிறதய்யா பொருள்!” என்றான் மாணவன்!

“என்ன புரிகிறது சொல்!” என்றார் ஆசிரியர்!

“என் தலையில் குட்டினீர்கள்! வலி தாங்க முடியவில்லை! அந்த வலியை என்னால் அறிய முடிகிறது. இதைத்தான் வள்ளுவர் ‘வலியறிதல்’ என்ற அதிகாரமாக எழுதியுள்ளார்.”

இப்போது ஆசிரியர் தனது தலையில் குட்டிக்கொண்டார்!

“நீங்களும் இப்போது வலியை அறிவீர்களே! இதுதான் வலியறிதல்” என்றான் அந்த மண்டு மாணாக்கன்.

என்ன செய்வது; அந்த ஊரில் பெரும் செல்வாக்கும் அதிகாரபலமும் கொண்ட சீமான் வீட்டுப்பிள்ளை அவன்! அவனைக் குட்டியதற்குக்கூட நாளைக்கு அந்த ஆசிரியர்க்குத் தண்டனை கிடைக்கக்கூடும். அவனை விடுத்து, ஆசிரியர் ‘வலியறிதல்’ அதிகாரம் பற்றி விளக்கத் தொடங்கினார்.

“தனக்குள்ள பலத்தையும் பிறர்க்குள்ள பலத்தையும் அறிந்து தெளிந்து செயல்பட வேண்டுமென்று கூறுகிற அதே நேரத்தில், செய்யத்தக்க காரியங்களை எண்ணினாலும் அதனைச் செய்து முடிக்கக்கூடிய வலிமையிருக்கிறதா என அறிந்து செய்ய வேண்டுமென்று மனத்திடமும், மெய்ப்பெருமையும் உரை கூறியுள்ளார். அரசியலில் இந்த வலிமையை, படைவலிமை என்று மட்டும் எடுத்துக்கொள்ளாமல், அரசு நடத்துவோரின் பொருளாதார வலிமையையும் குறிப்பது என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால்தான்,

“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்.”

என்று குறள் எச்சரிக்கிறது! இருக்கின்ற பொருளின் அளவறிந்து நடந்து கொள்ளாதவனுடைய செயலால், நாட்டில் பலவளமும் இருப்பதுபோல் தோன்றிக் காட்டி, எதுவுமே இல்லாமல் மறைந்து கெட்டுவிடும் என்பதுதான் இதற்குப் பொருள்! தமிழறிஞர் மு. வரதராசனாரின் உரை இப்படித்தான் அமைந்துள்ளது! ‘வலியறிதல்’ அதிகாரத்தில் வரும் குறள்தான் இது!

இருக்கின்ற வளமும், இயற்றக்கூடிய வளமும், இனி ஈட்டக்கூடிய வளமும், கருவூலத்தில் குறையாதிருந்து - தான் எண்ணியதை சாதிக்க முடியும் என்று கணக்கிட்டுத்தான் ஓர் அரசின் செயல்முறை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்! அஃதன்றி கவர்ச்சிகரமான விளம்பரத்துக்காகக் கருவூலத்தின் வலிமையை அறிந்துகொள்ளும் கருத்தற்று பலபேர், தாங்கள் மேற்கொண்ட செயல்களில் ஊக்கத்துடன் முனைப்புக்காட்டி, அதன்பிறகு அதை முடிக்க வகையில்லாமல் தோற்றுவிட்டார்கள் - என்றும் வள்ளுவர் ‘வலியறிதல்’ அதிகாரத்தில் அறிவுரையைத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர்”

என்ற குறட்பா, அவர்களின் வலிமையறியாத் தன்மையால் ஏற்படும் கேட்டினைத்தான் சுட்டிக் காட்டுகிறது!”

விரிவுரையை முடித்த ஆசிரியர், மண்டு மாணாக்கனைப் பார்த்து “என்னப்பா! விளங்குகிறதா?” எனக் கேட்டார். அவன் சினத்துடன் பதில் அளித்தான்.

“இப்படிப் பல கோணங்களில் பலரும் குறளுக்கு உரை எழுதுவதைத் தடுத்திட வேண்டும்! நான் மட்டும் ஆட்சிக்கு வந்தால், குறளுக்கு யாரும் விளக்கமெழுதக் கூடாது என்று தடைச் சட்டம் ஒன்று கொண்டு வருவேன்.”

அவன் பதிலைக் கேட்டு, அந்த வகுப்பறையில் உள்ள மாணாக்கர்கள் அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல்கள் - 479, 473

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்