பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 139 / 300

செறாஅச் சிறுசொல்லும்

அச்சுப் பக்கம் 302304 · ஸ்கேன் 319321 · அதிகாரம் 110 (குறிப்பறிதல்) — குறள் 1097

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

உறக்கமெனும் பெண்ணாள், இமைக் கிளையில் கயிறுகட்டி ஊஞ்சலாட வரவே இல்லை. சுண்டக் காய்ச்சிய பாலும் சுவைமிகு கனிகளும் அந்தச் சுந்தரியின் கவனத்தைக் கவரவே இல்லை. படுக்கையறையினை, அவள் பட்டுப் பாதங்கள் அளந்து கொண்டிருந்தன. ஐந்துமுகக் குத்துவிளக்கின் கொழுந்துச் சுடர்கள் அனைத்தும் அவளையே நோக்கி ஆவலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன. நடந்து

கொண்டேயிருந்தவளின் நாக்கு நிறப் பாதங்கள் செம்பருத்திப் பூப்போலச் சிவப்பேறிவிட்டவே, படுக்கையறையையொட்டிய வெளிமாடத்துக் கைப்பிடிச் சுவர் ஒன்றில் இடையமர்ந்து நின்றுகொண்டு, செங்காந்தள் விரல்கள் சோர்ந்துகொண்டு நிலவு முகத்திற்கு முட்டுக்கொடுத்தவாறு, விண்நோக்கி வெறித்துப் பார்த்து “எரிகின்ற தண் நிலவே, என்னை மட்டும் ஏன் தகிக்கின்றாய்?” என விழிகளால் சினந்து கேட்டாள்.

அப்போது வெளிமாடத்திற்கருகே ஒலியொன்று எழுந்து, பின்னர் ஓய்ந்தது.

என்னவென்று தெரிந்துகொள்ள, அந்தப் பொன்மகளின் இதயம் துடித்தது.

ஒலி வந்த திசையை நோக்கினாள்.

மாடத்தை யொட்டியுள்ள மரக்கிளையில் தாவியேறி, அவள் நிற்குமிடம் நோக்கி அவன் வந்துகொண்டிருந்தான். ஆம், அன்று மாலையில் அவள் அருவியோரத்தில் சந்தித்த அவனேதான்!

அருவியில் நீராட அவள் சென்றிருந்தாள். அவனும் வந்திருந்தான். அருவியின் நீர்ப்பெருக்கில் அவள் கண்மூடிக் குளித்தபோது, அந்தக் குளிர் அருவி எத்தனையோ குறும்புத்தனங்களை அவள் உடைமீதும் உடல்மீதும் செய்து காட்டியது. அருவியினை வாழ்த்தியவாறு தொலைவில் நின்றான் அவன். குளித்து முடித்து ஈரக்கூந்தலைக் கோதியவாறு - சரிந்த உடைகளைச் சரிசெய்து கொள்ளாமல், யாரும் அங்கிலில்லை என்று நினைப்பில் அலட்சியமாக வந்தவள், அவன் மீது மோதிக்கொண்டாள். அப்போதுதான் அவன், அந்தப் பூச்செடியின் மறைவிலிருந்து வெளிப்பட்டான்.

அவனையறியாமல் ஆடைகள் தங்களைத் திருத்திக்கொண்டன. அதுதானே உண்மையான பெண்மை!

எதிரில் படையைப் பார்ப்பதுபோல அவனைப் பார்த்தாள். “இதுதான் ஒரு ஆண் மகனுக்கு அழகோ?” என்று கடுஞ்சொல் வீசினாள். அவன் மறுமொழி கூறாது மயங்கி நின்றான். அவளும் தயங்கி நின்றாள். பிறகு கால்களுக்கு வேகம் சேர்த்து அங்கிருந்து மறைந்துவிட்டாள். அருவிக்கரையில் மட்டுமல்ல; அவனை அவள் பல இடங்களில் பார்த்திருக்கிறாள்; அவனும் பார்த்திருக்கிறான். அவள் யார் வீட்டுப் பைங்கொடியென்று அவனுக்குத் தெரியும். அவனும் யார் என்ற விவரங்கள் அவளுக்குத் தெரியும். ஆனால், அன்று மாலை அருவியோரத்து நிகழ்ச்சி இருவருமே எதிர்பாராதது! எப்படிப்பட்ட நிலையில் இப்படியொரு நெருக்கமான சந்திப்பு!

அவனேதான் மரக்கிளையிலிருந்து வெளிமாடத்திற்குத் தாவியவன். ஏற்பட்ட அதிர்ச்சியை மெல்ல முடித்துக்கொண்டு கோபக்குறி தோன்ற “யார் அது? இந்நேரத்தில் இங்கென்ன வேலை?” என்று அவன் காதில் மட்டும் விழுமாறு கேட்டாள்.

“தெரியவில்லையா என்னை! நானேதான்” என்றவன், அவள் பக்கம் வந்து நின்றான்.

“உங்களுக்கு என்ன துணிச்சல்! மாலையில் அருவியோரத்தில் இப்படித்தான் பண்பாற்று நடந்து கொண்டீர்கள். இப்போதும் அதே தொடர்கதையா?”

“தொடரவேண்டிய கதை தோகையே! தொடரலாமா! தொடரலாமா?”

“என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. நான் பொல்லாதவளாக இருப்பேன்; போய்விடுங்கள் தயவுசெய்து!”

“உன்னைப் பற்றி நான் தெரிந்துகொண்டேன். நீ பொல்லாதவளல்ல! உள்ளத்தில் இருப்பதை வெளியில் சொல்லாதவள்!”

“குளிக்குமிடத்திற்கு வந்தீர்கள்! அதுவே குறும்புத்தனம் - செடி மறைவில் ஒளிந்திருந்து... சே!...... சே!......”

“ஏன்! வெட்கமாக இருக்கிறதா?”

“இல்லை! வெறுப்பாக இருக்கிறது!”

“உண்மையாகவா?”

“அருவிக்கரையில் உங்கள் செயல்கண்டு அனல் தெறிக்கப் பார்த்தேனே; கனல் தெறிக்கப் பேசினேனே - அதற்குப் பிறகும் உங்களுக்கு எப்படி வந்தது இந்தத் துணிவு?”

“கடுஞ்சொல் இருக்கும். ஆனால், அதன் பின்னே கொடும்பகை இருக்காது. சுட்டெரிப்பதுபோல் பார்வை இருக்கும். ஆனால், அதன்பின்னே நெருப்பான நினைப்பு இருக்காது. வெளியில் அயலார்போலத் தோற்றமளித்தாலும் உள்ளத்தில் அன்பு கொண்ட காதலியின் குறிப்பாகும் இது! இப்படி எழுதியிருக்கிறார் வள்ளுவர்! நீ படித்ததில்லையா? அந்தக் குறளை நம்பித்தான் கண்ணே; குளிர் அருவியின் கரையில் நீ கொட்டிய கடுமொழிக்குப் பிறகும் இங்கு குதித்தோடி வந்தேன். வெல்லமாக இனிக்கும் அன்பு இருக்கும் காரணத்தால்தான், நீ என்னைச் செல்லமாகக் கடிந்து கொண்டாய்! இல்லையா?”

அவள் அசைவற்று நின்றாள். அவனையே அவள் விழிகள் விழுங்கி விடுவதைப்போல் மொய்த்துக் கிடந்தன. “தங்கம்!” என்றவாறு தொட்டான். தடையில்லை! தழுவினான். நழுவி ஓடினாள். நாணம் படையெடுத்தது. “சத்தம் போட்டு எல்லோரையும் கூப்பிடுவேன்” என்று அவள் காதுகள் வாய் வைத்துச் சொன்னாள். காதலுக்கு அதுதானே முதல் ஒப்புதல்! ஐந்து முகக் குத்துவிளக்கு தன் முகத்தை மறைத்துக்கொண்டது.

“செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.”

அதிகாரம் - 110 - குறிப்பறிதல்; பாடல் - 1097

செறாது = பகையோடு பொருந்தாத செற்றார் = பகைவர் உறாஅர் = அயலார்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்