பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 138 / 300

அமைந்தாங் கொழுகான்

அச்சுப் பக்கம் 300301 · ஸ்கேன் 317318 · அதிகாரம் 48 (வலியறிதல்) — குறள் 474

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

தன்னை வெல்வார் யாருமில்லையென்று, ஒருவன் வீர முழக்கமிட்டான். தன்னால் முடியாதது உலகில் எதுவுமில்லையென்றும் அறைகூவல் விட அவன் தவறவில்லை. உள்ளத்தில் உறுதியிருக்கிறதோ இல்லையோ, அவன் உதடுகள் வெடித்த எரிமலைச் சொற்களைக் கேட்டு ஊரார் அவனைத் தீரன் என்றும், திண்டோள் கொண்டோன் என்றும் அஞ்சாநெஞ்சு அரிமா என்றும் மலர் தூவி வாழ்த்தி மகிழ்ந்தனர். உள்ளத்தால் அவனொரு கோழையென்பதை ஊர்மக்கள் உணர முடியாத படி, அவனது உரைகள் அமைந்தன. அந்த ஊருக்கு வெளியே சற்றுத் தொலைவில் ஒரு செங்குத்தான மலைப்பாறை உண்டு. அந்தப் பாறையின் உச்சிக்குச் செல்லப் பலபேர் முயன்று பாதி வழியிலே சறுக்கி விழுந்தனர். “என் பலத்தைப் பாருங்கள். அந்தப் பாறையின் மீது ஏறிக் காட்டுகிறேன்” என்று அவன் ஒருநாள் ஊர் மக்களுக்கிடையே சூளுரைத்தான். உரைத்த மொழியை நிறைவேற்ற, ஒரு நாளும் குறிக்கப்பட்டது. செங்குத்துப் பாறையைச் சுற்றி ஊரார் குழுமினர். அவனும் அங்கே வந்து சேர்ந்தான். “ஊர்மக்களே! ஒன்று சொல்வேன் கேளீர்! பாறையின் உச்சிக்குச் செல்வேன் என்றுதான் உங்களிடம் கூறினேன். எப்படிச் செல்வேன் என்பதை அப்போது விளக்கிடவில்லை. எனது குறிக்கோள் பாறையின் உச்சிக்குச் செல்வதுதான்! அதற்கு வீரத்தை மட்டுமல்ல; சிறிது விவேகத்தையும் பயன்படுத்த வேண்டும். இங்குள்ள நான்கு பேர் ஒருவர் தோள்மீது ஏறி ஒருவர் நின்றிடுக! பயப்படத் தேவையில்லை; பாறையில் சாய்ந்தவாறு நின்றிடுக!”

என்று உரத்த குரலெடுத்துக் கூறினான். அவ்வாறே நான்கு பேர் ஒருவர் தோள்மீது ஒருவர் ஏறி அந்தச் செங்குத்துப் பாறையில் அணைந்தவாறு நின்றனர். அவன் அவர்கள் மீது கால்வைத்து ஏறிச்சென்று நான்காமவன் தோளில் தொத்தி, பாறையின் உச்சிக்குப் போய்ச் சேர்ந்தான் இலகுவாக!

ஊரார், தங்கள் மகிழ்ச்சி ஆரவாரத்தை எழுப்பி அவனை வாழ்த்திப் பாராட்டினர். “நாங்கள் நால்வரும் இல்லையெனில் பாறை உச்சிக்குச் சென்றிருக்க இயலுமோ?” என்று கேட்டனர் தோள் கொடுத்த வாலிபர்கள்!

அவன், அவர்களைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்தான்: “உங்கள் ஒத்துழைப்பு இல்லாமல் என்னால் இதைச் செய்திருக்க முடியும்” என்று மார்தட்டிக் கூறினான்.

நால்வருக்கும் சினம் பிறந்தது. “உன் வலிமையின் அளவு தெரியாமல் எங்களைப் பகைத்துக் கொள்கிறாய்” என்று எச்சரித்தனர் அவர்கள்!

“யார் துணையும் எனக்குத் தேவையில்லை. என் வலிமை உலகம் உணர்ந்த ஒன்று. நானிருக்குமிடம் தெரிகிறதா? நான் ஏற முடியாது என்று சொன்ன செங்குத்துப் பாறையில் இப்போது ஏறியிருக்கிறேன். பாறையிலிருந்தவாறு உங்களை யெல்லாம் கீழ்நோக்கிப் பார்க்கிறேன். நான் உயரத்தில்! நீங்கள் பள்ளத்தில்!”

இப்படி ஆணவப்பட்ட மொழி பேசத் தொடங்கினான் அவன்! ஆரவாரத்தோடு அவனைக் சூழ்ந்து வாழ்த்திய ஊரார், அந்த இடத்தை விட்டு அகன்று சென்றனர்; அகந்தை தலைக்கேறிவிட்டது என்று முணுமுணுத்தவாறு!

“எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசாதே! ஆணவத்தைக் குறைத்துக் கொள்! அடக்கத்தைக் கடைப்பிடித்திடு!” என்று அவனுக்கு வேண்டியவர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்தனர்.

“எனக்கு அறிவுரை கூறுவோர் யாருமில்லை. நானே எல்லாம்! என் வலிமை எனக்குத் தெரியும்! பேசாது செல்க!” என விரட்டியடித்தான் அவர்களை!

அனைவரும் தொலைவில் சென்று, அவனையே உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். அவன் அவர்களைப் பார்த்து ஓங்கிய தொனியில் உரை நிகழ்த்தினான்:

“உங்களால்தான் மேலே ஏறினேன் என்று சொன்னீர்கள்; இதோ என் மன வலிமைக்கும் உடல் வலிமைக்கும் சான்று காட்டுகிறேன் பாரீர்! இந்தச் செங்குத்தான பாறையிலிருந்து கீழே குதிக்கிறேன் காணீர்! அப்போது புரியும் என் வீரமும் தீரமும் உங்களுக்கு!”

எனக் கூறிக்கொண்டே பாறையிலிருந்து கீழே குதித்தான். தரையில் குதிப்பது போல் குதிக்காமல், தண்ணீரில் தலைகீழாகக் குதிப்பதுபோல் குதித்த காரணத்தால், தரையில் மோதிய தலை சிதறுண்டது. குருதி வெள்ளத்தில் அவன் உடல் நனைந்து துடித்து இறுதியாக அசைவற்று கிடந்தது. பாவம்; தன்னைப் பற்றிப் பெரிதாக எண்ணிக்கொண்டு மற்றவர்களோடு ஒத்துப் போகவும் இசையாமல், அவர்களையும் மதிக்காமல், தன் வலிமையையும் உணராமல் வீணாக நொறுங்கிப் போனான், தன்னைத்தானே வீரனென்று பிதற்றித் திரிந்த அந்த வீரன்.

இப்படிப்பட்டவர்களுக்காக வள்ளுவர் தீட்டிய குறள்தான் இது:-

“அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.”

அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல் - 474

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்