பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 137 / 300

பசந்தாள் இவள்

அச்சுப் பக்கம் 298299 · ஸ்கேன் 315316 · அதிகாரம் 119 (பசப்புறு பருவரல்) — குறள் 1188

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பிரிவாற்றாமையால் உடலில் ஏற்படும் நிற வேறுபாட்டைப் ‘பசலை படர்தல்’ என இலக்கியங்கள் குறிப்பிடும். உள்ளம் வாடும்போது உடல் மெலிகிறது. வளைகள் கழன்றுவிழும் அளவுக்கு உடல் இளைத்தால், மாம்பழமேனிகூட நிறங்குன்றித்தான் போய்விடும்.

புன்னகை ஒளி காட்டும் இதழ்களுக்குச் சொந்தக்காரி சேயிழை! குண்டு மல்லிகை போன்ற வெள்ளை விழிகளுக்கு நடுவே, வண்டு நிகர் கருவிழிகள் அசைந்தாடும்

அழகே அழகு! இடமும் வலமும் இரு பிறைகளை இணைத்தாற் போல் இடையுடையாள்! நடன நடையுடையாள்.

அவள்தான், மலர்கள் எல்லாம் உதிர்ந்துவிட்ட மாலையின் நார்போலத் தரையினில் கிடக்கின்றாள். வேறென்ன வேதனை?

அணைத்தும், பிடித்தும், இதழ் நனைத்தும், சுவைத்தும், இன்பமெல்லாம் அளித்தும், களித்தும் மாதவிக்குச் சுகம் தந்த கோவலன்போல் சேயிழைக்குச் சுகம் தந்த சேலவன், பொருளீட்டப் புறப்பட்டுத் திங்கள் இரண்டு தேய்ந்து மாய்ந்தன.

எப்போது அவன் பிரிந்து செல்வான்; நாம் பறந்து சென்று அவனைப் பற்றிக்கொள்ள வேண்டுமென்று துடித்துக்கிடந்த பசலைநிறம், சேயிழையின் உடலைத் தழுவிக் கொண்டது.

தீப்பிடித்த ஆடைபோல அவிழ்த்தெறிய முடியுமோ அந்த நிறத்தை? அவளைப் பிடித்த பசலையெனும் துன்பம் அவிழ்க்கத் துணைவனவன் வந்தன்றோ துகில் அவிழ்க்க வேண்டும், அகில் மணக்கும் மஞ்சத்தில்!

எரிநெருப்பாய், பெருமூச்சு! சுடுகுழலாய்க் குருதியோட்டம்! ஒளியில்லா வெற்றுப் பார்வை! பழமாகிப்போன கிழமொன்று அவள் பாட்டி! பருவத்தில் அவள் சிலநேரம் பட்டபாட்டைத்தான் இன்று பேத்தியும் படுகிறாள் என்றறிவாள்! என்னும் ஆறுதல் கூற அணுகினாள் சேயிழையிடம்!

“என்னடி கண்ணே! இத்தனை துன்பம்? பிரிந்தவன் வராமலா போய் விடுவான்? சே! சே! முட்டாள் பெண்ணாக இருக்கிறாயே! பிரிவை நினைத்து இப்படியா பசலை நிறம் படர்ந்து கிடப்பது?”

பாட்டி, தன் இளமைக்காலத்தை மறந்துவிட்டுப் பேசவில்லையென்பது சேயிழைக்குத் தெரியும். தன்னைத் தேற்றுவதற்காகச் செல்லமாகக் கோபிக்கிறாள் என்பதும் புரியும். இருப்பினும் இளைத்த உடல் - களைத்த நிலை - இத்தனையும் மறந்து சீற்றமுடன் எழுந்தமர்ந்து பதில் சொன்னாள்.

“பாட்டி! பிரிவால் வந்திப் பசலை நிறமடைந்தேன் என்று என்னைப் பழி சொல்வது உன்னைப் போன்றவர்களுக்கு எளிதான செயல்! என்னைப் பழி சொல்வது விடுத்து, என்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலனைக் குறை சொல்லும் எண்ணம் உங்களுக்கெல்லாம் ஏற்படவில்லையே! என் பாட்டி, ஏன்? பழியோரிடம் பாவமோரிடம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கிறீர்களே எதற்காக? அவர் பிரிந்து சென்றது குற்றமா? அவர் பிரிவால் எனக்குப் பசலை படர்ந்தது குற்றமா?”

சினங் கொப்பளிக்கப் பொறிந்து தள்ளினாள் சேயிழையாள்!

அவள் சொல்வதும் நியாயந்தானே என்று தோன்றியது பாட்டிக்கு! ஆமாம்; பாட்டிக்கும் பழைய நினைப்பு!

“பசந்தாள் இவளென்பது அல்லால் இவளைத் துறந்தார் அவரென்பார் இல்.”

அதிகாரம் - 119 - பசப்புறு பருவரல்; பாடல் - 1188

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்