பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 136 / 300

இலமென்று அசைஇ

அச்சுப் பக்கம் 296297 · ஸ்கேன் 313314 · அதிகாரம் 104 (உழவு) — குறள் 1040

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

கழனியோரத்தில், தலையில் முண்டாசு கட்டியவாறு கார்மேகம் உட்கார்ந்திருந்தான். கட்டுக்கோப்பான உடல் அமைப்புக்கொண்டவன் அவன். அவனருகே சிறிய வாய்க்கால் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அந்த வாய்க்கால், நீரால் நிரம்பி வழிந்தவாறும் இருந்தது. எனினும் கார்மேகத்தின் எதிரேயிருந்த அவனது கழனி, வெடித்துக் காய்ந்து கிடந்தது. அவன் கழனியை அடுத்துள்ள மற்றவர் கழனிகளில், வாய்க்காலில் மடைகோலித் தங்கள் பயிர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தனர். கார்மேகம் தனியாக உட்கார்ந்திருப்பதைக் கண்ட அந்த ஊர்ப்பெரியவர், அவனிடம் வந்தார். கழனியில் வேலை செய்த அவரது மேனியெங்கும் சேறு, சந்தனம் போல் பூசப்பட்டிருந்தது. பெரியவர், கார்மேகத்தைப் பார்த்துக் கேட்டார்: “என்ன தம்பி! வாட்டமுடன் இருக்கிறாய்? உனக்குத் திருமணம் என்றார்களே; எப்போது?” என்று! கார்மேகம், பெரியவரிடம் சலித்துக் கொண்டு பதில் சொன்னான்: “மணமாவது மண்ணாங்கட்டியாவது! அதற்கெல்லாம் செலவுக்குப் பொருள் வேண்டாமா? என்னிடம் என்ன இருக்கிறது?” இந்தப் பதிலைக் கேட்ட

பெரியவர், “அய்யோ பாவம்! இல்வாழ்வில் ஈடுபடவேண்டிய இளமைப் பருவம் - இன்பங்கள் துய்க்க வேண்டிய வசந்த காலம் - அந்த வாய்ப்பைப் பெற முடியாமல் உன்னை வறுமை தடுத்துவிட்டதே!” என்று கவலையைத் தெரிவித்தார். அப்போது யாரோ கலகலவென்று சிரிக்கும் ஒலி கேட்டது. பெரியவரும் இளைஞனும் திரும்பிப் பார்த்தனர். சுற்றுமுற்றும் நோக்கினர். யாரையும் காண முடியவில்லை. ஆனாலும் சிரிப்பொலி அடங்கவில்லை. அது ஒரு பெண்ணின் சிரிப்புத்தான். ஆனால், யார் அந்தப் பெண்? இருவரும் திகைத்துப் போயினர். பெரியவர், துணிவை வரவழைத்துக்கொண்டு, “யாரது? யார் சிரிப்பது?” என்று உரக்கக் கேட்டார். பதில் பிறந்தது.

“நான்தான் நிலமகள் சிரிக்கிறேன். நான் எனக்குள்ளாகவே சிரித்துக் கொள்கிறேன். ஏன் தெரியுமா? பெரியவரே! நான் சிரித்த காரணத்தைச் சொல்லட்டுமா? இந்த முதிர்ந்த வயதிலும் உழைப்பால் உயர்கிறீர் நீர். உமது வியர்வைத் துளிகள், நெல்மணிகளாகக் குலுங்கிக் காற்றில் அசைகின்றன. உமது கரம்பட்டு உமது கழனியின் கரைகள் உயர்ந்தன. அயராத உழைப்பால் வளமான விளைவைக் காணுகிறீர். குறைவின்றி வாழ்கிறது உமது குடும்பம். இதோ; இந்த இளைஞன், இரும்பினையொத்த உடலமைப்புக் கொண்டவன். இருப்பினும் சோம்பல் இவனை அடிமையாக்கிக் கொண்டது. அதனால்தான் இவன் எதிரே காய்ந்து கிடக்கும் கழனி! அருகே, பெருக்கெடுத்தோடும் வாய்க்கால்! வாய்க்கால் நீரை வகைப்படுத்திக் கழனிக்குப் பாய்ச்சவோ, கழனியில் கதிர் கண்டு களிக்கவோ, அது தரும் பொருள்கொண்டு வாழ்வைச் செப்பனிட்டுக் கொள்ளவோ இவன் தயாராக இல்லை - புரிகிறதா முதியவரே! நிலமகளான நான், எல்லா வளமும் தரத்தயாராக இருக்கிறேன். இவன் அதனைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பாமல் சோம்பேறியாகத் திரிகிறான். ‘கையில் பொருள் இல்லை; அதனால் குடிமணம் நிறைவேறவில்லை’ என்கிறான். இந்த விந்தையான இளைஞனை நினைத்துக்கொண்டுதான், நான் எனக்குள்ளாகவே சிரித்துக் கொள்கிறேன்.”

இந்த விளக்கத்திற்குப் பிறகு நிலமகளின் குரல் கேட்கவில்லை. சிரிப்பு முழக்கமும் இல்லை. பெரியவர், கார்மேகத்தையே உற்று நோக்கிக் கொண்டிருந்தார். கார்மேகம், தோளைக் குலுக்கிக்கொண்டு எழுந்தான். ஒரு மூலையில் கிடந்த மண்வெட்டியைக் கையில் எடுத்தான். “பெரியவரே! என்னைப் பார்த்து இந்தப் பூமியே கேலி பேசிவிட்ட பிறகு, இனியும் நான் சோம்பல் புழுவாகச் சுருண்டு கிடக்கமாட்டேன் - இதோ! உழைக்கப் புறப்பட்டு விட்டேன்” எனக் கூறியவாறு, வாய்க்காலை வெட்டித் தன் வயலின் பக்கம் திருப்பினான். பெரியவர், புன்னகை புரிந்தவாறு அவனைத் தட்டிக் கொடுத்து, “தம்பி! என் பெண்ணையே உனக்குத் துணைவியாக்குகிறேன்” என்று கூறினார்.

இந்தக் கற்பனை ஓவியத்திற்கு அடிப்படையான குறளோவியம் இதோ:-

“இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்.”

அதிகாரம் - 104 - உழவு; பாடல் - 1040

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்