பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 135 / 300

காமம் விடு ஒன்றோ

அச்சுப் பக்கம் 294295 · ஸ்கேன் 311312 · அதிகாரம் 125 (நெஞ்சொடு கிளத்தல்) — குறள் 1247

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“என் அன்பே! ஆருயிரே! பத்தே நாட்களில் பறந்தோடி வருவேன் பைங்கிளியே” என்று முத்தமழை பொழிந்து உடல் முழுவதும் நனைத்துவிட்டுச் சென்றீரே - எண்ணிக்கொண்டுதானிருக்கிறேன். நாள்கள் இருபதையும் தாண்டி விட்டன! என்னை மறந்து எப்படித்தான் உங்களால் தனிமையில் இருக்கமுடிகிறதோ? நீங்கள்

என்னைப் பிரிந்தவுடனே கைவளைகள் கழன்றுவிட்டன. மேனியெங்கும் படர்ந்து விட்டது பசலை. விழிகளோ நீங்கள் சென்ற திக்கினை நோக்கியே தவம் கிடக்கின்றன.

பஞ்சணையில் படுக்கிறேன். இமைகளை மூடிப் பார்க்கிறேன்; என் கண் இமைகள் மட்டும் கண்ணாடியால் அமைந்தனவோ என்னவோ; மூடிய இமையின் வழியாக நீங்கள்தான் என் எதிரே நின்று இதழ்களைக் குவிக்கிறீர்கள்! என் இதழ்களும் குவிகின்றன! ‘இச்’ ஒலியும் எழுகிறது! பிறகுதான் தெரிகிறது அத்தான்; நான் தலையணையின் முனையை என் உதடுகளால் அழுத்திக் கொண்டிருப்பது!

படுக்கையில் குப்புறப் படுத்துக்கொண்டால் இதமாக இருக்காதா? இப்படி ஒரு நினைப்பு! அய்யோ! உங்களின் பரந்த மார்பில் என் மார்பகம் அழுந்தும்போது நான் அனுபவிக்கும் சுகத்தில் ஒரு அணுவளவுகூட இல்லை! அனலாகிறது நெற்றி, கழுத்து, இடை எல்லாமே! வலிமை பொருந்திய உங்கள் கரங்களால் வளைத்துப் பிடிப்பீர்களே என் இடையை! அப்போது துள்ளுவேன்; துவள்வேன்; தோளில் ஒட்டிக்கொள்வேன். நினைக்க நினைக்க நெருப்பு மூச்சுத்தான் வெளிப்படுகிறது இப்போது!

நான் படும் காம வேதனையில், ஒரு கடுகளத்தனை வேதனைக்கூட நீங்கள் படுவது கிடையாதா? அதனால்தான் என்னை இத்தனை நாட்கள் மறந்துவிட்டுப் பிரிந்திருக்க மனம் துணிந்ததோ? என் துன்பத்தை இந்த மடலில் வெளிப்படுத்திவிட்டேன். நீங்கள் தொட்டு மகிழ்ந்து சுகமளித்த பட்டுடல், இங்கு பட்டமரம் போல காட்சியளிக்கின்றது! அதில் இன்பத்தளிர்கள் குவுங்க - காதல் மலர்கள் பூக்க - காமக் கனிரசம் பெருக - என் காதலரே; இறக்கைகள் இருந்தால் எடுத்துக் கட்டிக்கொண்டு வான் வழியே ஒரு கணத்தில் வருக! என் தாபம் தணித்திடுக - அன்புள்ள அல்லி.”

எழுதிய மடலை, அந்த ஏந்திழை ஒருமுறைக்கு இருமுறை படித்துப் பார்த்தாள். காதலனுக்கு அனுப்ப உறையில் இட்டாள். பின்னர் உறையிலிருந்து மடலை எடுத்தாள். மீண்டும் படித்தாள். பின்னர் அந்த மடலைக்கண்டு நாணம் கொண்டாள்! வெட்கம், அவள் விழிகளில் ஊசலாடிற்று! திடீரென அந்த மடலைக் கிழித்தெறிந்துவிட்டுப் பஞ்சணையில் போய் விழுந்தாள். அவள் வாய் முணுமுணுத்தது.

“நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு! அல்லது நாணத்தை விட்டுவிடு! இரண்டையும் பொறுத்துக்கொள்ள என்னால் இயலாது. என் உணர்ச்சியைக் கொட்டி மடல் தீட்டினேன். அதை அவருக்கு அனுப்பமுடியாமல் நாணம் தடுத்துவிட்டதே!”

கண் கலங்கியவாறு மஞ்சத்தில் புரண்டாள் அல்லி!

“காமம் விடுவொன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு.”

அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1247

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்