பொருளடக்கம் 134 / 300
அ. ஆக்கம் அதர்வினாய் / ஆ. மடுத்தவா யெல்லாம்
அச்சுப் பக்கம் 292–293 · ஸ்கேன் 309–310 · அதிகாரம் 60 (ஊக்கம் உடைமை) — குறள் 594; அதிகாரம் 63 (இடுக்கண் அழியாமை) — குறள் 624
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
1982 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 15ஆம் நாள் காலை மதுரையிலிருந்து திருச்செந்தூர் வரையில் 120 கல் தொலைவு (200 கிலோமீட்டர்) நெடிய பயணம் ஒன்று புறப்பட்டது. நீதியைப் புறக்கணித்துவிட்ட அரசின் செயலைக் கண்டித்துக் கழகத்தினர் நடத்திய அந்தப் பயணத்திற்கு நான் தலைமை தாங்கினேன். தொடக்கத்தில் ஐம்பதினாயிரம் பேராகக் கிளம்பிய அந்தப் பேரணி, எட்டு நாட்களில் இரண்டு லட்சம் பேரைக் கொண்ட மிகப்பெரும் பேரணியாக நடந்தே சென்று திருச்செந்தூரை அடைந்தது. அத்தனை தொலைவு - எட்டு நாட்கள் - இலட்சக்கணக்கானோர் - நடந்தே சென்று ‘நீதி கேட்கும் நெடிய பயணத்தை’ நிறைவு செய்திட முடியுமா? இந்தத் தயக்கம் பலரது ஐயப்பாடாக வெளிவந்தது! அரசு அலுவலர் ஒருவர் - அறநெறி வாய்ந்தவர் - அவரை, ஆளுந்தரப்பினரான சில கொடியோர் கொன்று குவித்துக் கள்வர் என்றும் கதை கட்டிவிட்டனர். அவர் கள்வர்
அல்ல என்றும் கள்வர் என்று கழறியோரே அவரைக் கொன்றுவிட்டனர் என்றும் நீதிபதியும் முடிவு அறிவித்துவிட்டார். அந்த முடிவையும் மீறி, அரசினர் நீதியை வளைத்தனர். வளைந்த செங்கோல் கண்டு தனது வாழ்வை முடித்துக்கொண்டு, நிமிர்ந்த செங்கோலுடன் வீழ்ந்துவிட்ட நெடுஞ்செழிய பாண்டியன் ஆண்டிருந்த மதுரையிலிருந்து தொடங்கப்பெற்ற நெடிய பயணம், மக்களின் குரலை மண்ணாள்பவருக்கு எதிரொலித்துக் காட்டியது.
ஐயம் - அச்சம் - இயலுமா என்ற வியப்பு - இத்தனைக்குமிடையே நெடிய பயணத்தில் ஈடுபட்டோர் உள்ளத்தில் வள்ளுவரின் குறள் வரிகள் செம்மாந்து எழுந்து நின்றன.
“ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை.”
“சோர்வு இல்லாத ஊக்கமுடையவனிடத்தில், ஆக்கமானது தானே அவனிடத்துக்கு மிடம் தேடி வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேர்ந்திடும்.”
இந்தக் குறளின் கருத்துப் போதாதா, அந்தப் பேரணியினர் தங்களின் வரலாற்றுப் புகழ்மிக்க நடைப்பயணத்தை மேற்கொண்டிட!
வழியில் எத்தனையோ இடையூறுகள்! இன்னல்கள்! நோய் நொடிகள்!
வானத்துச் சூரியனோ நெருப்புமழை பொழிந்து கொண்டேயிருந்தான்! கால் மிதிக்கும் தார்போட்ட சாலையோ கருஞ்சாந்து என உருகியோடித் தகித்துக் கொண்டிருந்தது.
எதையும் தாங்கும் இதயங்கொண்ட அந்தப் படையினர், நெருப்பு வெயிலையும் நிலா மிதந்து நீந்தும் ஏரிக்கரையோரமென எண்ணிக்கொண்டு நெஞ்சு நிமிர்த்தி நடந்தனர்.
எண்ணியவாறு எண்ணற்ற தொல்லைகளைக் கடந்து தங்களின் நெடிய பயணத்தை நிறைவுசெய்து என் நெஞ்சில் குடியேறிக் கொண்டனர்! அப்போது என் நினைவில் ஒளிவிட்ட குறளின் கருத்தோவியம் என்ன தெரியுமா?
“மேடு பள்ளம் குண்டுகுழி போன்ற தடைப்பட்ட இடங்களில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் எருதுபோல, விடா முயற்சியுடைய ஒருவனுக்கு ஏற்படும் துன்பங்களுக்குத் துன்பம் வருமே அல்லாமல், அவனுக்கு அந்தத் துன்பத்தால் தயக்கம் நேராது.”
“மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.”
அதிகாரம் - 60 - ஊக்கம் உடைமை; பாடல் - 594
அதிகாரம் - 63 - இடுக்கண் அழியாமை; பாடல் - 624
அதர்வினாய் = வழிகேட்டு; உழை = இடம்
பகடு = எருது ; மடுத்தவாய் = தடைப்பட்ட இடம்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்