பொருளடக்கம் 133 / 300
தஞ்சம் தமரல்லர்
அச்சுப் பக்கம் 290–291 · ஸ்கேன் 307–308 · அதிகாரம் 130 (நெஞ்சொடு புலத்தல்) — குறள் 1300
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
வஞ்சிக்கொடி, வாடிக் கிடந்தாள். வயலோரக் களத்துமேட்டு நிழற்சிகள், அசையும் நிழற்படங்களாக அடுக்கடுக்காகப் புரண்டுகொண்டிருந்தன. முற்றிய மணிக்கதிர்களைச் சுமக்க முடியாமல் தங்கநிறப் பயிர்கள் மணமகளைப் போல் தலைகுனிந்து நின்றன. அவற்றை அறுவடை செய்து, கட்டுக் கட்டாகக் களம் கொண்டுசென்று குவித்து வைத்தனர்.
அந்தப் பணியில் ஈடுபட்ட இளம் புறாக்களில் ஒருத்திதான் காளி! பெயர்தான் அப்படி! கட்டழகுப் பெட்டகம். அவளைத் தொட்டணைத்துச் சுகம் காணும் கடம்பனுக்கு இன்பப் பேழை!
நிலவுதனைத் துண்டுதுண்டாக்கி, அவற்றைக் கோர்த்து வைத்ததுபோல் இதழ்களிடையே ஒளிவிடும் பல் வரிசை!
வீரம் எதுவும் என் முன்னே செல்லுபடியாகாதென விழுங்கிவிடும் ஆற்றல் வாய்ந்த விழியழகி!
நிறம் சற்றுக் கருப்புத்தான் என்றாலும் கரும்புபோல் கடம்பனுக்குச் சுவை கூட்டும் பெண்ணரசி! அறுவடை நடக்கும்போதே இருவரின் கண்களும் இரும்பும் காந்தமும் ஆயின.
சூரியன் வழங்கும் சூடு போதாதென்று, அன்றிரவு சுவைக்கப்போகும் விருந்தையெண்ணி இருவர் உடலும் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தன.
மாலையும் வந்தது; அறுவடை வேலையும் முடிந்தது; அவரவர் வீடு திரும்பினர். களத்துமேட்டுக்குக் கடம்பன் அன்று காவல் இருக்க வேண்டும். இருட்டியபின் காளியை அங்கே வரச் சொல்லியிருந்தான்.
அவளா வராமல் இருப்பாள்?
இருட்டு ஏன் இன்னும் வரவில்லையென்று திட்டிக்கொண்டிருந்தாள்.
அவளுக்குப் பயந்ததுபோல், பாய்ந்து வந்தது இருட்டு! திருட்டுப் பூனை போலப் பதுங்கிச் சென்றாள் காளி - அறுவடை நெற்குவியலுக்கும் கதிரடித்துப் போட்டிருந்த வைக்கோற் போருக்குமிடையே - பூனையாக வந்தவள், பூவாக மாறி நின்றாள்.
கடம்பனோ வண்டாகித் தேன் பருகினான். களத்துமேட்டுப் புழுதி மண்ணோ, வைக்கோலின் மீது உடல் அழுந்துவதால் ஏற்படும் அரிப்பு உணர்வோ - அவர் தம் இன்பக் களியாட்டத்துக்கு இடையூறாகத் தெரியவில்லை. அவர்கள்தான் இந்த உலகத்திலேயே இல்லையே! இவள் மடியில் அவன்! அவன் தோளில் இவள்! ‘இச்’ என்று கேட்கின்ற இன்ப நாதம்!
இரவெல்லாம் பலாச்சுளையைத் தேனில் கலந்து மாங்கனியும் வாழைக் கனியும் மென முக்கனியின் முழுச் சுவையில் மயங்கிக் கிடந்தனர். பொழுது விடியாமலே இருந்திருந்தால், அவர்களின் இன்பம் முடியாமலே தொடர்ந்திருக்கும்.
மறுநாள், நிலக்கிழார் ஆணைகேட்டுக் கடம்பன் அவசர வேலையாக அயலூர் சென்றுவிட்டான். அவன் திரும்ப, ஆறு ஏழு நாட்களாகுமெனச் சொன்னார்கள்.
வஞ்சிக்கொடி, வாடிக் கிடக்கும் காரணம் இப்போது புரிகிறதல்லவா? பிரிந்து சென்ற காதலன்மீது பெண்களுக்குத் தேவையில்லாத ஒரு கோபம் வரும். அது இயல்பு! விரகதாபத்தின் விளைவு போலும்! காளிக்கும் அப்படித்தான் கோபம் வந்துவிட்டது! அவள் நெஞ்சம் அவளைப் பார்த்துச் சொன்னது:
“காளி! உன்னைத் தவிக்கவிட்டுப் பிரிந்துசென்ற கடம்பன்; அதோ வந்து கொண்டிருக்கிறான். அவன் வந்தால் அவனோடு எந்த உறவும் உனக்கு இல்லை என்று திட்டவட்டமாகக் கூறிவிடு!” என்பதாக!
காளி, சிரித்தாள்! அந்தச் சிரிப்பில் கோபமும் கலந்திருந்தது! அவள் பேசினாள்:
“என் நெஞ்சே! எனக்கு உரிமையுடைய நீயே; அவர் என்னைப் பிரிந்து சென்றதும் என்னை விட்டு அவரோடு போய்விட்டு இப்போதுதான் திரும்பி வருகிறாய்! நீயே என் உறவை மறந்துவிட்டாய் என்றால்; அவர் என் உறவை மறந்து பிரிந்து சென்றதில் பெரிய பிழையொன்றுமில்லை.”
இப்படிக் காளி, தன் நெஞ்சை நொந்துகொண்டு, பிரிந்துசென்ற காதலனையும் ‘அயலார்’ என்று சினந்து குறிப்பிட்டாள்.
அதற்குள் கடம்பன் ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டான். ‘அயல்’ என்ற வார்த்தை அடிபட்டுப்போயிற்று! கயல், அவன் அன்பு வலையில் சிக்கிக் கொண்டது.
“தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி.”
அதிகாரம் - 130 - நெஞ்சொடு புலத்தல்; பாடல் - 1300
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்