பொருளடக்கம் 132 / 300
பல்லார் முனிய
அச்சுப் பக்கம் 288–289 · ஸ்கேன் 305–306 · அதிகாரம் 20 (பயனில சொல்லாமை) — குறள் 191
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கற்பனைத்திறன் காட்டிக் கவிபுனையும் பாவாணன் அவன். எழினியெனும் பெயர் கொண்டோன். அவன் பிறந்து வளர்ந்து பெரும் புகழ் பெற்ற வளநாட்டின் விடுதலைக்காக அமைந்த படையினருக்கு, உணர்ச்சியூட்டும் வீரப்பாடல்களை இயற்றி வழங்கியவன்.
வளநாட்டின் எழுச்சியை எப்படியும் அடக்குவதற்குத் திட்டமிட்ட கொல்லி நாட்டு மன்னன், வளநாட்டுப் படைத் தளபதிகளில் ஒருவரைப் பெருங்கையூட்டின் மூலம் தன்வயப்படுத்திக் கொண்டான்.
எழுச்சிப் பண்கள் இயற்றிய எழினிதான், அதற்கு இடைத்தரகனாகவும் மாறித் தன்னை வாழவைத்த வளநாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயலைச் செய்து வந்தான்.
இந்த உண்மை வளநாட்டில் பரவிடவே, எழினி கொல்லி நாட்டுக்கே, தன் குடும்பத்துடன் போய்ச் சேர்ந்தான்.
எதிரிகளின் நாட்டுப் பாவாணன், தன் கொலுமண்டபம் நுழைந்து தனது கால் வணங்கி நிற்பது கண்டு, கொல்லி மன்னன் பெருங்களிப்படைந்து அரியாசனத்தில் கம்பீரம் மிகுந்திட அமர்ந்திருந்தான். கொல்லி நாட்டு வேந்தனைப்பற்றி எழினி
பாடப் போகிறான் எனக் கேள்வியுற்று, கொலுமண்டபம் நிறைந்திருந்தது. கொல்லி நாட்டுப் படை வீரர்கள், புலவர் பெருமக்கள், மற்றும் பொது மக்கள் குழுமியிருந்தனர்.
எழினி, பாடத் தொடங்கினான். கொல்லி நாட்டானைக் குறித்து ஓரிரு வரிகள் பாடிவிட்டு - அதன் பிறகு வளநாட்டை வசைபாடும் இசையாகப் பொழியத் தொடங்கினான். அவனை வாழவைத்த நாட்டு மக்கள்மீதும் நாட்டின்மீதும் நன்றியுணர்வு காட்டி, அவற்றைக் குறித்து பாடாது இருந்திருக்கலாம். அதற்கு மாறாக, வளநாடு குறித்தும் அந்நாட்டார் குறித்தும் பண்பற்ற முறையில் பயனிலாத சொற்களைத் தனது பாட்டாக அவன் ஆக்கிக் கொண்டதைக் கொல்லி நாட்டுப் புலவர்களும் படை வீரர்களும் ஏனைய மக்களுமே ஏற்றுக் கொள்ளவில்லை.
அவன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் கண்ணை மூடிக்கொண்டு “வசை இசை” முழங்கிக் கொண்டிருந்தான். தன் பாட்டில் மகிழ்ந்து, கொல்லி நாட்டான், மற்ற புலவர்களை ஒதுக்கிவிட்டுத் தனக்கு அந்த அவையில் முதலிடம் கொடுப்பான் என்பது எழினியின் கருத்து! அப்படிப்பட்ட பண்பு வாய்ந்தவன் கொல்லிக் காவலன் என்பது எழினிக்குத் தெரியும்.
கண்ணை மூடிக்கொண்டு கடுஞ்சொற் கவிதைகளை வளநாட்டின் மீது வீசிக் கொண்டிருந்தபோது, அந்தக் கொலுமண்டபமே காலியாகிற்று. கண்ணைத் திறந்து பார்த்தான், இறுதியாக இசைப்பதை நிறுத்திவிட்டு! மண்டபத்தில் யாருமே இல்லை. அரியாசனத்தில் மன்னனுமே இல்லை. அவனும் கடைசியாக எழுந்து போய்விட்டான், பள்ளியறைக்கு!
ஏமாற்றமடைந்த எழினி, கொலு மண்டபத்தை விட்டு வெளியே வந்தான். வெளியே கூட்டம் கூட்டமாகப் புலவர்களும் - படை வீரர்களும் நின்று கொண்டு எழினியின் பாடல் குறித்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்தனர்.
“கொல்லி நாட்டைப் புகழ வந்தானா? வளநாட்டை இகழ வந்தானா?”
“மன்னரின் மனத்தைக் கவர்ந்து உயர்பதவி பெற இப்படியொரு கூத்து!”
“வளநாட்டுக்கும் கொல்லி நாட்டுக்கும் பகை மூளவே காரணமாக இருந்தவன்; இப்போது இங்கு வந்து நன்றாக நடிக்கிறான் - நன்றிகெட்டவன்!”
எழினியின் காதில் விழும்படியாக அவர்கள் இப்படி இகழ்ந்து பேசினர். வளர்ந்த இடத்துக்குத் துரோகம் செய்துவிட்டு வந்த இடத்திலும் நம்மை மதிப்பாரில்லையே என்று பெருமூச்சு விட்டபடி தலைகவிழ்ந்து நடந்தான் எழினி!
கேட்போர் பலரும் விரும்பத்தகாத வெறுப்புக் கலந்த, பயனில்லாத வார்த்தைகளைப் பேசுகின்றவனை, அவன் பகைவர்கள் மட்டுமல்ல; அவன் சேர்ந்துள்ள இடத்தில் உள்ளவர்களேகூட இகழ்ந்துதான் பேசுவார்கள்.
அதற்கு இதோ குறள்:
“பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும்.”
அதிகாரம் - 20 - பயனில சொல்லாமை; பாடல் - 191
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்