பொருளடக்கம் 131 / 300
அ. செற்றவர் பின்சேறல் / ஆ. நினைந்தயில் இட்டன்ன / இ. நாணென ஒன்றோ
அச்சுப் பக்கம் 286–287 · ஸ்கேன் 303–304 · அதிகாரம் 126 (நிறையழிதல்) — குறள் 1256, 1260, 1257
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
திங்களுக்கும் செவ்வாய்க்கும் இடையே நடந்த சந்திப்பு இது!
நாட்களின் பெயர்கள் அல்ல! அழகின் வார்ப்படங்களான இரு வனிதா மணிகளின் பெயர்கள்!
குளிர் கொட்டும் தளிர் முகவதியைத் திங்கள் என அழைத்தனர், அவளைப் பெற்றோர். மாங்கனி பிளந்ததே போன்ற சிவப்புநிற இதழ்கள் உடையவளைச் செவ்வாய் என்றே அழைத்தனர், அவளை ஈன்றெடுத்தோர்.
திங்களுக்கும் செவ்வாய்க்கும் பிரச்சினை எதுவாக இருக்கமுடியும்?
“என்னடி திங்கள்! யாரையோ சபிப்பதுபோல் முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறாய்?” எனக் கேட்டவாறு செவ்வாய் அருகே வந்தாள்.
“யாரையும் சபிக்கவில்லை! என்னைத் தொத்திக்கொண்ட நோயைத்தான் சபிக்கிறேன்; இதோ பாரடி செவ்வாய்! என் காதலனால் என் மேனியெங்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காமநோய் - என்னையே விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டு, என்னைப் பிரிந்து சென்றுள்ள காதலனைப் பின்தொடர்ந்து என்னையும் செல்லுமாறு தூண்டுகிற அளவுக்குக் கொடுமையானதாகி விட்டதடி!”
இதைக் சொல்லிவிட்டுத் திங்கள் கண்ணீர் முத்துக்களை உதிர்த்தாள்.
செவ்வாயின் இதழ்கள் அவளை அறியாமல்,
“செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்.”
என்ற குறளை முணுமுணுத்தன.
“அடி என் தோழியே! திங்களே! காதலன் உனக்குக் காமநோயைத் தந்துவிட்டுப் பிரிந்திருக்கிறான் அல்லவா? அவன் இன்றிரவு திரும்பி வரும்போது அதற்காக அவனுக்குத் தண்டனை கொடு! ‘இனிமேல் பிரிந்தே செல்லமாட்டேன், என்னை மன்னித்துவிடு’ என்று அவன் கெஞ்சுகிறவரையில் ஊடலை நடத்து! அப்போதுதான் அவன் வழிக்கு வருவான். பிரிவுத் துயரமும் காம நோயும் உன்னை வாட்டாமல் இருப்பதற்கு நான் சொன்னதைத் தவறாமல் செய்! என்ன சரிதானா? இன்றிரவு ஊடல் நடக்குமா?”
செவ்வாயின் தோளைப் பிடித்துக்கொண்டு திங்கள், தலை குனிந்தவாறு பதில் சொன்னாள்.
“நானும் ஊடல் நடத்தி நீண்டநேரம் அவரைத் தவிக்கவிட வேண்டுமென்று எத்தனையோ முறை நினைத்திருக்கிறேனடி; ஆனால், அவரைக் கண்டதும் தீயில் இடப்பட்ட கொழுப்புப்போல என் நெஞ்சம் உருகிவிடுகிறது. என்னைப் போன்ற இதயமுடைய யாருக்கும் ஊடல் புரியும் சக்தி இருக்கவே முடியாதடி!”
திங்களின் மொழி கேட்டுச் செவ்வாய் சிரிப்பைச் சிந்தினாள். அஃது முல்லை விரிப்பாயிருந்தது. செவ்வாய்க்கு மற்றொரு குறள் நினைவுக்கு வந்தது.
“நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்”
திங்களும் செவ்வாயும் பிரிந்து சென்றனர். வானில் வந்தது வட்டத் திங்கள்!
வாட்டத் திங்களோ வழிமேல் விழிவைத்து வாயிலில் காத்திருந்தாள்.
நெடுநேரம் கழிந்த பின்னர், அவனும் பறந்து வந்தான். பச்சைக்கிளியை இச்சையுடன் தூக்கிக் கொண்டான். வாயிற் கதவுக்கு அவனே தாழிட்டான். தோளில் போட்டவாறே துகிலவிழ்த்தான் கோதைக்கு! ஆளுக்கொரு நீதியோ எனக் கேட்டாள்! அந்த அநீதியை நீயே கண்டிக்கலாம் - நடவடிக்கை எடுக்கலாம் என்றான். ஆடையகற்றிய பால், ஆவின் பால் - கட்டிலோரம் காத்திருந்தது. ஆண்பாலும் பெண்பாலும் கட்டிலிலே ஒரே மலராய்ப் பூத்திருந்தது.
மென்மையிருந்த அவள் மேனியெங்கும் அவன் விரல்கள் வீணை மீட்டின. நரம்புகள் அதிர்ந்தன. நான்கு இதழ்கள் நாலாயிரம் வகையான ஒலிகளை எழுப்பின. அவள், அவனுக்குள் கலந்துவிட்டாள். செவ்வாய் உபதேசித்தாளே அந்த ஊடல்; அது தலையைக்கூட நீட்டி அவன் தழுவுவதைத் தடுக்கவில்லை.
“காதலன் காம உணர்வுடன் நமக்கு விருப்பமான செயல்களைப் புரியும் போது, நாணம் என்று கூறப்படும் அந்தப் பண்பையே மறந்து விடுகிறோம்” என்று அவளது பெண்மை பேசிற்று!
அந்தப் பெண்மையின் தன்மையைத்தான் இதோ இந்தக் குறள் சுட்டிக் காட்டுகிறது.
“நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்”
அதிகாரம் - 126 - நிறையழிதல்; பாடல்கள் - 1256, 1260, 1257
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்