பொருளடக்கம் 130 / 300
மடியுளாள் மாமுகடி
அச்சுப் பக்கம் 283–285 · ஸ்கேன் 300–302 · அதிகாரம் 62 (ஆள்வினை உடைமை) — குறள் 617
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நண்பன் ஒருநாள் கலகல எனச் சிரித்துக்கொண்டே என் வீட்டுக்குள் நுழைந்தான்.
அவசரமாக வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்த நான், “என்னப்பா, என்றுமில்லாத கும்மாளச் சிரிப்பு” என்று கேட்டேன்.
அவன் சிரித்தவாறே கேட்டான்: “திருமகளுக்கு மூதேவி அக்காளா? தங்கையா?” என்று!
நான் சொன்னேன், “இதுகூடத் தெரியாதா உனக்கு? அக்காள்தான்!” என்று!
நண்பன், உரக்கச் சிரித்துக்கொண்டு, “மூதேவியும் இல்லை - திருமகளும் இல்லை என்பது என் வாதம்! ஆனால் என் நண்பர்கள், ‘அந்த இருவருமே உண்டு! அதில் அக்காள் யார்? தங்கை யார்? என்பதுதான் வாதத்திற்கு உரியது’ என்றனர். அதனால் விளைந்த சிரிப்பை அடக்க முடியாமல்தான் உன்னிடம் வந்தேன். ஆனால் நீயோ, திருமகள் தங்கை - மூதேவி அக்காள் என்று கூறி, எனது பகுத்தறிவுக்கே அறைகூவல் விடுகிறாய்” என்றான்.
நான், என் நண்பனின் முதுகில் தட்டிக்கொடுத்து, “வா என்னோடு! திருமகளும் மூதேவியும் எப்படியிருப்பார்கள்? எங்கே வாழ்கிறார்கள்? என்பதைக் காட்டுகிறேன்” என அழைத்தேன்.
நண்பன் வியப்பு மேவிட வினவினான்: “அவர்கள் எங்கே வாழ்கிறார்கள்? முகவரிகூட உனக்குத் தெரியுமா? தேரோடும் வீதியிலா? அல்லது கப்பலோடும் கடலோரத்துக் குப்பங்களிலா?”
இந்தக் கேள்விக்கு நான் நண்பனுக்கு உறுதியுடன் அளித்த பதில், “வா என்னுடன்! அவர்கள் வாழுமிடத்தைக் காட்டுகிறேன்” என்பதுதான்!
இருவரும் பல தெருக்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம்.
உலைக்கூடம் ஒன்றில் பழுக்கக் காய்ச்சிய இரும்பை, சம்மட்டியால் ஓங்கி அடித்துக்கொண்டிருந்தான் ஒருவன். இன்னொருவன், நெருப்பு உலைக்குத் தேவையான காற்றை வழங்கிடத் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தான். மூன்றாமவன், இரும்புத் துண்டை இப்படியும் அப்படியும் அசைத்துக் கொண்டிருந்தான். மூவர் மேனியிலும் வியர்வை மழை கொட்டிக் கொண்டிருந்தது. நண்பனை அங்கேயே நிறுத்தி, “இந்த உலைக்கூடக் காட்சியைப் பார்!” என்றேன். அவனும் உருக்கத்துடன் அந்தக் காட்சியில் ஒன்றிப்போய் நின்றான்.
பிறகு, நண்பன் என்னை நோக்கி, “சரி! சரி! வந்த வேலையை விட்டுவிட்டு இந்த வேலையைப் பார்ப்பானேன்? வா! போகலாம்!” என்றான். நானும் அவனுடன் நகர்ந்தேன்.
அடுத்து எங்கள் வழியில் ஓர் அழகான மண்டபம் தென்பட்டது. அங்கே நின்றோம். பளிங்குக் கற்களால் ஆன அந்த மண்டபத்தின் எழிலை நான் முழுதும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம். ஆனால் ஒன்று! அந்த மண்டபத்தின் அழகைச் சிதைப்பது போல் சிலந்திகள் வலை பின்னிக் கொண்டிருந்தன! குளவிகள் கூடு கட்டிக் கொண்டிருந்தன! வெளவால்கள் தங்கள் புழுக்கைகளை எள் பரப்பியதுபோல மண்டபத்துத் தரையில் பரப்பியிருந்தன. குப்பைக் கூளங்களுக்கும் குறைவில்லை. மண்டபத்து உள் திண்ணையொன்றில் சதைப் பிடிப்பான ஓர் அழகான வாலிபன், அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தான்.
“நண்பா! இந்த மண்டபத்தையும் அந்த மனிதனையும் நன்றாகக் கவனி” என்றேன்.
“விபரங் கூறுக” என்றான் நண்பன். “இந்த மண்டபம், மறைந்த பெரியவர் ஒருவருக்காக எழுப்பப்பெற்ற நினைவுச் சின்னம். இதனைப் பாதுகாக்கும் பொறுப்பேற்றுள்ளவன் அந்த வாலிபன்” என்று விளக்கினேன் நான்.
நண்பன் வேதனையுடன் சிரித்து, “மிக ஒழுங்காகப் பாதுகாக்கிறானே சோம்பேறி!” என்றான்.
மீண்டும் நடந்தோம்!
“வீட்டுக்குத் திரும்பலாமா?” என்றேன். நண்பன் திகைத்துப்போய், “என்னப்பா, விளையாட்டு! திருமகளும் மூதேவியும் வாழுமிடத்தைக் காட்டுவதாகச் சொல்லி ஏமாற்றி விட்டாயே!” என்றான்.
“அவர்கள் இருவர் வாழும் இடங்களையும் உனக்குக் காட்டிவிட்டேன்!” என்றேன்.
“எப்போது” என்றான்.
“இப்போதுதான்!” என்றேன்.
“எங்கே?” என்றான்.
அவனுக்கு விளக்கமளித்தேன். “உலைக்கூடத்தில் அயர்வை எண்ணியும் பாராமல் வியர்வை வடித்து உழைத்தார்களே; அவர்களின் உள்ளத்தை மாளிகையாக்கிக் கொண்டு ‘திருமகள்’ வாழ்கிறாள். அழகான மண்டபத்தை அழுக்கு மண்டபமாக்கியவாறு சோம்பிக் கிடக்கிறானே காவல் காப்போன், அவன் உள்ளத்தை வீட்டாக்கிக் கொண்டு அந்த இருண்ட இல்லத்தில் வாழ்கிறாள் மூதேவி!”
“ஆகா! அருமையான கருத்து!” என்றான் நண்பன். “இது என் கருத்தோ கற்பனையோ அல்ல; வள்ளுவரின் குறளப்பா” என்றேன்.
அந்தக் குறளையும் சொன்னேன்.
அதுதான் இது:-
“மடியுளான் மாமுகடி என்ப மடியிலான் தாளுளாள் தாமரை யினாள்”
அதிகாரம் - 62 - ஆள்வினை உடைமை; பாடல் - 617
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்