பொருளடக்கம் 129 / 300
துஞ்சுங்கால் தோள்மேலர்
அச்சுப் பக்கம் 281–282 · ஸ்கேன் 298–299 · அதிகாரம் 122 (கனவு நிலை உரைத்தல்) — குறள் 1218
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கடலின் அலைகள் ஆரவாரமின்றிக் கரையில் மோதிக் கொண்டிருந்தன. உதய ஞாயிறு தகத்தகாயமாக ஒளி பரப்பி எழுந்தது. கடலில் மிகத்தொலைவு சென்று மீன் பிடிக்க மீனவர்கள், தங்களின் கட்டுமரங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தனர். கரையோரம் ஒதுங்கிக் கிடந்த கட்டுமரங்கள், நீலக் கடலை முத்தமிட்டவாறு அலைகளில் ஆடிக்களித்தன.
“முகிலன் இன்னும் வரவில்லையா?” மீனவர் கூட்டத்தில் கேள்வி எழுந்தது. “முல்லைக்கொடி அவனை விட்டால்தானே அவன் வருவதற்கு” என்ற பதிலும் கேலிச் சிரிப்பினூடே எழுந்தது.
திருமணமாகித் திங்கள் இரண்டுகூட முடியவில்லை. பொழுதெல்லாம் ஒருவருக் கொருவர் தின்பண்டமாகவே இருக்கவேண்டும் என்றுதான் அந்த இளம் உள்ளங்கள் ஏங்கின. எனினும் தொழில் தொடர்ந்தால்தானே குடும்பம் நகர முடியும்.
“விடை கொடு நாளை விடிவதற்குள் வந்துவிடுகிறேன்” என்று தன்னை இழுத்துப் போர்த்தியவாறு அழுதுகொண்டிருந்த முல்லைக்கொடியிடம், முகிலன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.
கொஞ்சி மகிழ்ந்த இராப் பொழுதை உதயம் எனும் கொடியவன் வந்து கெடுத்துவிட்டானே என விம்மியழுதாள் முல்லைக்கொடி.
அந்த விம்மலிலும் அவளுக்குத் தனி அழகு - தன்னைக் கவர்ந்திழுக்கும் அழகு உயர்ந்து நிற்றதை முகிலன் கண்டு பெருமூச்சு விட்டவாறு அவளைத் தழுவிக் கொண்டான். முத்துக்களை மூடி வைத்த சிப்பியெனும் அவள் உதட்டில், தன் உதட்டால் முத்திரை பதித்தான். வழிந்துகொண்டிருந்த அவள் கண்ணீர்த்துளிகள் அவன் உதடுகளை நனைத்தன. கரிக்காமல் இனித்தது, அந்தக் கண்ணீர் அவனுக்கு.
ஒட்டிக் கொண்டிருந்த அவள் உடலை, மிக்க வலிமையைப் பயன்படுத்தித் தன்னிடமிருந்து விலக்கிக்கொண்டு வெளியே வருவதற்குள் முகிலன், படாதபாடு பட்டுவிட்டான்.
மீனவர் கூட்டம், அவனைக் கிண்டல் செய்து வரவேற்றது. அவனுடைய கட்டுமரமும் கடலில் மிதக்கத் தொடங்கியது.
முல்லைக்கொடி, தன் குடிலின் வாசலில் நின்று கண்ணெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். கட்டு மரங்கள் அனைத்தும் கடலில் வெகு தொலைவு சென்று மறைந்துவிட்டன. அவள், அன்று பகல் உணவு பற்றிக் கவலைப்படவில்லை. இரவு உணவும் தேவைப்படவில்லை. அவளுக்குத் தேவையான விருந்து - கடலில்... கட்டு மரத்தில்... மறுநாள் காலைத்தான் அவளை நாடி வரும்.
நீண்ட நேரம் விழித்திருந்த அவள் நீள் இமைகளைக் களைப்பும் காரிருளும் மெதுவாக மூடச் செய்தன. தூங்கி விட்டாள். அந்தத் தூக்கமும் அவளுக்கு இன்பமானதே!
அவள் கவலையைத் தீர்க்க, கனவு வந்து சேர்ந்தது. கனவில் வேறு யார் வருவார்கள்? முகிலன்தான் வந்தான். ‘முல்லைக்கொடி!’ என்றான். அத்தான் என்றாள். முத்தமழை! இன்பம் வெள்ளமாகப் பெருக்கெடுத்தது. இடைவேளை சிறிது நேரம் - அந்த வேளையிலும் அவளின் தோளைப் பற்றிக்கொண்டு அவளது எழில் நிறை முகத்தில் தன் மார்பை அழுத்திக் கொண்டிருந்தான்.
களிப்பிலேற்பட்ட களைப்பால் அவளுக்கு ஒரு புதுக்களிப்பு. திடுமென விழித்துக் கொண்டாள். கனவு கலைந்துவிட்டது. அவள் தனக்குத்தானே கூறிக்கொண்டாள்:
“தூங்கும்போது கனவில் தோன்றி என் தோள்மீது சாய்ந்து இன்பம் தந்தவர், நான் விழித்துக் கொண்டபோது எங்கே போய்விட்டார்? எங்கும் போய்விடவில்லை! கனவு கலைந்ததும் விரைந்து வந்து என் நெஞ்சில் அமர்ந்து கொண்டார்.”
இந்த அழகான வரிகள் அடங்கிய பெட்டகம்தான் இதோ இந்தக் குறள்:-
“துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.”
அதிகாரம் - 122 - கனவு நிலை உரைத்தல்; பாடல் - 1218
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்