பொருளடக்கம் 128 / 300
உலைவிடத்து ஊறஞ்சா
அச்சுப் பக்கம் 279–280 · ஸ்கேன் 296–297 · அதிகாரம் 77 (படைமாட்சி) — குறள் 762
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நடைபெற்ற பெரும் போரில் தோல்வி ஏற்பட்டுவிடுகிறது. படையின் வலிவு குன்றிவிடுகிறது. வெற்றி பெற்றவன், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, தோல்வி அடைந்த படையினர்மீது இடையூறுகளைத் தொடர்ந்து பொழிந்துகொண்டேயிருக்கிறான்.
பழிவாங்கும் படலம்!
வஞ்சம் தீர்க்கும் முயற்சி!
எதிரியை, இல்லாமலே அழித்துவிட வேண்டும் என்பதற்கான திட்டங்கள்!
அதற்கென எத்தனை சூழ்ச்சிகள் வலைகளாகப் பின்னப்பட வேண்டுமோ அத்தனையும் நடைபெறுகின்றன.
போரில் சிறைப்பட்ட வீரர்களை நையப்புடைக்கச் செய்கிறான். அவர்களைப் பட்டினி போட்டே கொன்றுவிட வேண்டுமென்று ஆணை பிறப்பிக்கிறான்.
தோற்றுவிட்ட பகை மன்னன் போர்க்களத்தில் காட்டிய வீரத்தையும் தீரத்தையும் புலவர்கள் பலர் பாராட்டிக் கவிதைகள் இயற்றினர்.
வெற்றி பெற்ற தன்னைப் பற்றிப் பாடிய பாடல்கள் மட்டுமே நாட்டில் கேட்க வருமென்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, அதே நேரத்தில் எதிரியின் போர்த்திறனைப் புகழ்ந்து பாடிய கவிஞர்களையெல்லாம் சிறைப் பறவைகளாக ஆக்கிவிடுகிறான்.
தோற்றுவிட்ட மன்னவனின் போர்த்திறமோ புகழோ யாராலும் எடுத்துச் சொல்லப்படக் கூடாதென்று கடுமையான அறிவிப்பை வெளியிட்டுவிடுகிறான்.
கையூட்டு வழங்கிச் சில புலவர்களைத் தன்வயப்படுத்திக்கொண்டு, தன் பெருமைகளைப் பாடச் செய்திட்டான்.
பகை மன்னனின் ஆருயிர்த் தளபதிகள் சிலர் படுகொலைக்கும் ஆளாக்கப்பட்டனர்.
பகை நாட்டின்மீது போர் தொடுத்து, பிணங்களைக் குவித்து, களத்திலே வெற்றிக் கொடி நாட்டியதைப் பிறநாட்டினர் ஏற்றுக் கொள்ளாதது கண்டு, பழிச்சொற்கள் பலவற்றைப் பகை நாடு வேந்தன் மீது சுமத்திடவும் அவன் தவறவில்லை.
தோற்றுவிட்ட பகைநாட்டு மன்னன், படை வீரர்களுடன் தங்கியிருக்கும் பாசறைகளை நோக்கி, காட்டு விலங்குகளைத் துரத்திவிட்டான், அந்த வெற்றி வேந்தன்.
இத்தனை இன்னல்களையும் தோற்ற அந்த மன்னனும் அவன் படைவீரர்களும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டனர்.
போரில் ஏற்பட்ட தோல்வியாலோ அல்லது படைவீரர்கள் பலர் மாண்டு மடிந்து ஏற்பட்ட வலிமைக்குறைவாலோ அந்த மன்னனும் அவனது படையினரும் அஞ்சி நடுங்கி, வெற்றி கண்டவனின் கால்களில் விழுந்து விடவில்லை.
வெற்றியும் வெறியும் ஒருங்கிணைந்த காரணத்தால், வேதனைக்கணைகளை வீசிக் கொண்டேயிருந்தான்; தோற்றவர்களும் இதனைத் தாங்கிடும் மனப்பக்குவமும் உறுதியும் அஞ்சாநெஞ்சும் பெற்றிருந்தனர்.
காரணம் என்ன?
தோற்றுவிட்ட மன்னவனின் படை, தொன்று தொட்டுப் பெருமையுடைய படையாகும்! அதனால் அது தோல்வியாலோ வலிமைக் குறைவாலோ கலங்கிவிடவில்லை.
அப்படிக் கலங்காமல் இருப்பது, தொன்று தொட்டுப் பெருமையுடைய படைக்கல்லாமல் வேறு எப்படைக்கும் இயலாது என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
தோல்வியிலும் இது அந்தப் படைக்குரிய பெருமையன்றோ?
இதோ அந்தக் குறள்:
“உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது.”
அதிகாரம் - 77 - படைமாட்சி; பாடல் - 762
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்