பொருளடக்கம் 127 / 300
கூடிய காமம்
அச்சுப் பக்கம் 277–278 · ஸ்கேன் 294–295 · அதிகாரம் 127 (அவர் வயின் விதும்பல்) — குறள் 1264
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
விறகு வெட்டும் தொழில் அவனுக்கு! அவற்றைத் தலையில் சுமந்து விற்றுவரும் வேலை அவளுக்கு! ஒவ்வொரு நாளும் கோடரி சுமந்து காட்டுக்குச் செல்வான். மரங்களை வீழ்த்தி, கிளைகளை வெட்டி விறகுச் சுமையுடன் வீட்டுக்கு வருவான்.
முதல்நாள் கொணர்ந்த விறகுகளை, மறுநாள் அவள் விற்பனை செய்யக் காலைமுதல் மாலை வரை கடும்வெயிலில் அலைவாள்.
காலையில் பிரிந்திடும் அந்தக் காதல் பறவைகள், இரவுதான் கூட்டுக்குத் திரும்புவது என்பது வாடிக்கையாகிவிட்ட வாழ்க்கை!
கொளுத்தும் கோடையில் அலைந்து விறகு விற்றுத் திரும்பியவளின் மேனி கறுத்திருப்பதைச் சுட்டிக்காட்டிக் கவலை கொள்வான் காதலன்.
ஏற்கனவே என் நிறம் கறுப்புத்தானே எனக் கேட்டு, அவன் மடியில் சாய்வாள் அவள். கறுப்புத் திராட்சைக்கு இனிப்பு அதிகமென்று, அவளைச் சுவைத்து மகிழ்வான் அவன்.
தன்னைத் தழுவிடும் அவன் கரங்கள், கோடரி பிடித்து, விறகு வெட்டி வெட்டிக் காய்ப்பேறிக் கிடப்பதை வேதனையுடன் தடவிப்பார்த்து, அந்த உள்ளங்கைகளில் தன் உதடுகளை அழுத்தி ஒத்தடம் கொடுப்பாள்.
“என் கைகள் முரடாக இருப்பது உனக்குத் தொல்லையாக இருக்கிறதா?” எனத் தோகையிடம் அவன் கேட்க, “இல்லை; இல்லை! உன் முரட்டுத்தனத்திலேதான் காலைமுதல் நான் வேலைசெய்த களைப்பெல்லாம் நீங்குகிறது” என்று அவள் பதில் சொல்ல - இருவருமே தாங்கொணாத மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொள்வர்.
ஒருநாள் முழு நிலவு! அந்த நிலவொளியில் இன்பங்காண இருவருமே விழைந்தனர். அந்தச் சிறிய வீட்டுக்கெதிரே மாமரம் ஒன்று! அதன் நிழல் மறைவிலே பாய்போட்டுப் படுத்துக்கொண்டு நிலவின் அழகொளியைப் பருகினர். ‘அந்த நிலவுகூடத் தன்னை மறைக்கும் முகிலை விலக்குகிறது பார்’ என்று அவள் மார்பகத்துத் துகிலை விலக்கினான் அவன். மாமரத்தின் கீழே காதல் மாகாவியம் இயற்றினர்.
அந்த இன்ப நாளுக்கு அடுத்தநாள் அவன், அவளை விடுத்து வெளியூர் சென்றான். ஒருநாள் பிரிவுதான். அவளோ அந்த மாமரத்தடியில் உட்கார்ந்தவாறு அவன் வருகைக்காகக் காத்திருந்தாள். உண்ணவில்லை, உறக்கமும் வரவில்லை; பொழுதும் தொலைந்தது!
இரவோ, அன்று அவளுக்கு ஒரு பகல்போல வந்தது. அப்போதும் மரத்தடியில்தான் அமர்ந்திருந்தாள். நிலவொன்று தோன்றி, முதல்நாள் அந்த மரத்தடியில் அவர்கள் எழுதிய இன்ப இலக்கிய ஏட்டினைத் திரும்பத் திரும்பப் படித்துக் காட்டியபடி இருந்தது.
அவள் அசைவற்றுப் போனாள். அவளையறியாமலே அடிமரத்தில் சாய்ந்தாள். விழிகள் என்னவோ அப்படியே குத்திட்டு நின்றன. இப்படியே நேரம் கழிந்தது.
நீண்ட நேரத்துக்குப் பிறகு அவன் திரும்பி வந்தான். வந்தவன் எதிரே வராமல் பின்புறமாக வந்து, தோளில் தலையை வைத்து அவள் கழுத்தை இதழ்களால் பற்றினான். திடுக்கிட்டுத் துள்ளி எழுந்தாள் அவள்.
“இத்தனை நாழிகை, நெஞ்சத்தை எங்கே பறி கொடுத்திருந்தாய்? நிலவின் அழகிலா?”
எனக் கேட்டான்.
“இல்லை! இல்லை! உன்னைக் காணாமற் கலங்கிய என் நெஞ்சம், நீ வருகிறாயா என்று தொலைதூரம் பார்ப்பதற்காக இந்த மரக்கிளையிலே ஏறிக் கொண்டிருந்தது. இப்போதுதான் கிளையைவிட்டுக் கீழே இறங்கியது.”
என்று பதில் சொல்லி, அவனை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள் அவள்.
“கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு”
அதிகாரம் - 127 - அவர் வயின் விதும்பல்; பாடல் - 1264
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்