பொருளடக்கம் 126 / 300
பற்றற்ற கண்ணும்
அச்சுப் பக்கம் 275–276 · ஸ்கேன் 292–293 · அதிகாரம் 53 (சுற்றந் தழால்) — குறள் 521
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
என்னுடைய நண்பன் ஒருவன் இருக்கிறான். மிகவும் குறும்புக்காரன். மனிதர்களுடைய வாழ்க்கையில், இன்பமும் துன்பமும் மாறிமாறி வருவது இயற்கைதான். இன்பத்தை எத்துணை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறோமோ அத்துணை மகிழ்ச்சியுடன் துன்பத்தையும் ஏற்றுக்கொள்வதுதான் உறுதி படைத்த உள்ளத்துக்கு அழகு என்பதை உணராதவனல்ல நான்.
அந்த வகையில் என்னை நன்குணர்ந்தவன்தான் என் நண்பன். எனக்குத் தொல்லைகள் வந்த நேரத்திலும் என்னுடன் இருந்தவன்; இருப்பவன். எனினும் நான் குறிப்பிட்டபடி குறும்புக்காரன். ஒருநாள் குறட்பாடல் ஒன்றை முணுமுணுத்தவாறு என்னருகே வந்து உட்கார்ந்தான்.
என்ன குறள் என்று உற்றுக் கவனித்தேன்.
“பற்றற்ற கண்ணும் பகைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணேயுள”
என்று, குறளை மாற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
“என்னப்பா! நீ, புதுக் குறள் எழுதுகிறாயா?” என்று கேட்டேன்.
“ஆமாம்! உன்னையும் உன்னைச் சுற்றியிருந்தார்களே சிலர், அவர்களையும் நினைத்துப் பார்த்தேன். குறளில் ஒரே ஓர் எழுத்தை மட்டும் மாற்றினேன். உன் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது” என்று பதில் அளித்தவன், தான் மாற்றியமைத்த குறளுக்குப் பொருளுங் கூறித் தொடங்கிவிட்டான்.
“பற்றற்ற கண்ணும் = ஒருவன் தாழ்வுற்றிருக்கும் காலத்திலும் -
பகைமை பாராட்டுதல் = விரோத உணர்ச்சியுடன் செயல்படுதல் -
சுற்றத்தார் கண்ணேயுள = அவனது சுற்றத்தார் எனக் கூறிக் கொண்டும் அண்ணன், தம்பி என அழைத்துக் கொண்டும் சுற்றியிருந்தார்களே அவர்கள் மத்தியிலே காணப்படும் சிறப்பாகும்.”
குறும்புக்கார நண்பனின் குறள் விளக்கம் கேட்டு நான் சிரித்தேன்; “என்னைச் சூழ்ந்திருந்தோர் எல்லோருமா அப்படி ஆகிவிட்டார்கள்? உன்னைப் போன்றவர்கள் இல்லாமலா போய்விட்டார்கள்?” என்று கண்களில் நீர் துளிர்த்தவாறு அவனைத் தழுவிக் கொண்டேன். அவன் விழிகளும் அருவிகளாயின.
“எனக்கொன்றும் தாழ்வு வந்துவிடவில்லை. துன்பங்களை எதிர்த்து நிற்பது தாழ்வாகி விடாது. அதை எதிர்ப்பதற்கும் ஒரு செல்வம் வேண்டும். அந்தச் செல்வத்தை நான் நிறையப் பெற்றிருக்கிறேன். அதுதான் நெஞ்சுறுதி எனும் செல்வம்” என்று நான் அவனுக்கு விளக்கினேன். “என்னமோ, உன்னைச் சுற்றிக்கொண்டிருந்த சிலர், அவர்களேதான் உன் சுற்றத்தாரைப்போலத் தோற்றமளித்துக் கொண்டிருந்தார்கள். உனக்கொரு தீங்கு என்றதும் அவர்கள் விலகியோடிவிட்டது மட்டுமல்ல ‘பகைமை’ பாராட்டவும் தவறிவிடவில்லை என்பதை எண்ணித்தான் குறளைச் சற்று மாற்றி எழுதினேன்” என்றான் நண்பன்.
‘பழைமை’ என்ற சொல் இருக்கவேண்டிய இடத்தில், ‘பகைமை’ என்ற சொல்லை நீ பதித்ததால் எத்துணை விபரீதவிளக்கம் தோன்றிவிட்டது பார்த்தாயா நண்பா! நீ ஏன் அந்தச் சிலருக்காகக் குறளை மாற்றுகிறாய்? இருக்கின்ற குறள், உன்னைப் போன்ற உண்மையான நண்பர்களுக்காகத்தானே ஒலிக்கின்றது! உன் போன்ற நண்பர்களே எனக்குச் சுற்றத்தார்! ஒருவனுக்குத் தாழ்வு வந்த போதும் அவனுக்கும் தனக்கு மிகுந்த பழைய உறவுகளைப் பாராட்டிப் பேசுவதே சுற்றத்தாரின் பண்பு என்ற நிலையை விளக்கவே, வள்ளுவர் குறள் எழுதியுள்ளார். எனவே தயவு செய்து, நீ திருத்திப் பாடிய குறளை மறந்துவிட்டு - அதாவது உன் திருத்தக் குறளை விட்டுவிட்டுத் திருக்குறளைப் பாடு” என்றேன் நான். அவனும் திருக்குறளைப் பாடினான்.
அது, இது:
“பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார் கண்ணே யுள.”
அதிகாரம் - 53 - சுற்றந் தழால்; பாடல் - 521
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்