பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 125 / 300

ஒருநாள் எழுநாள்போல்

அச்சுப் பக்கம் 273274 · ஸ்கேன் 290291 · அதிகாரம் 127 (அவர் வயின் விதும்பல்) — குறள் 1269

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பொன்னி, வான் நோக்கியவாறு பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். “என்னடி, முகிற்கூட்டத்தின் அணிவகுப்பைக் கண்டு மயங்கிப் போய்விட்டாயா?” எனக் கேட்டவாறு தாமரை, அவளருகே வந்தாள். பொன்னி மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டு முகத்தில் தேக்கிய புன்னகை, நீடிக்காமல் மின்வெட்டுப்போல் மறைந்துவிட்டது. தாமரை, அவளை நோக்கிக் கேட்டாள்:

“ஒரு நாளைக்கு எத்தனை நாழிகை?” என்று! தயக்கம் சிறிதுமின்றிப் பொன்னி பதில் அளித்தாள்: “ஒரு நாளைக்கு நானூற்றி இருபது நாழிகை” என்று! தாமரைக்கு வியப்பு மேலிட்டது.

“என்ன பொன்னி, புதிர் போடுகிறாய்? எனக்கும் அல்லிக்கும் இதுபற்றித்தான் சற்று நேரத்துக்கு முன் தகராறு! அல்லி சொன்னாள், ஒரு நாளைக்கு ஐம்பது நாழிகையென்று! நான் சொன்னேன், அறுபது நாழிகையென்று! நான் சொன்னதுதான் சரியானது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இருந்தாலும் உன்னையும் கேட்டுப் பார்க்கலாம் என்று ஒரு பேச்சுக்குக் கேட்டால், நீ ஒரேயடியாக நானூற்றி இருபது நாழிகை என்கிறாயே!”

பொன்னி, வேதனை கலந்த ஒரு சிரிப்பை உதிர்த்தாள்!

“உனக்கு ஒரு நாள் என்பது அறுபது நாழிகைக் கணக்கு! ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் சொன்ன கணக்கே பொருந்தும்.”

தாமரைக்குப் புரியவில்லை. பொன்னியிடம் விளக்கம் பெற விரும்பினாள்.

“யாரும் சொல்லாத ஒரு கணக்கையல்லவா நீ சொல்லுகிறாய்! ஒரு நாளைக்கு நானூற்றி இருபது நாழிகை என்றால்; அப்படிச் சொல்பவர்க்கு மூளைக் குழப்பமோ என்றுதான் எல்லோரும் கேட்பர்!”

அதைக் கேட்ட பொன்னி, தாமரையின் தோளில் கையைப் போட்டவாறு மீண்டும் ஒரு பெருமூச்சுடன் பேசத் தொடங்கினாள்.

“தாமரை! நீ குறளில் படித்ததில்லையா? வெளிநாட்டுக்குச் சென்ற காதலன் திரும்பி வரும் நாளை எண்ணி எண்ணி ஏங்கும் காதலிக்கு, ஒருநாள் என்பது எழுநாளைப் போலத் தோன்றும் என்று வள்ளுவர் எழுதியிருக்கிறாரே! அதே நிலைதானே எனக்கு! தொலைவில் உள்ள வெளிநாடு சென்றுள்ள என்னுடையவருக்காக ஏங்கித் தவிக்கும் எனக்கு, ஒருநாள் பொழுது என்பது நானூற்றி இருபது நாழிகைதானே! அதாவது எழு நாள்தானே.”

இப்போது பொன்னியின் கண்களில் நீர்த்துளிகள் வழிந்தன; தாமரை அவளுக்கு ஆறுதல் கூறினாள்.

“ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேட்சென்றார் வருநாள் வைத்தேங்கு பவர்க்கு.”

அதிகாரம் - 127 - அவர் வயின் விதும்பல்; பாடல் - 1269

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்