பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 124 / 300

அ. பற்றி விடாஅது / ஆ. பற்றுக பற்றற்றான்

அச்சுப் பக்கம் 271272 · ஸ்கேன் 288289 · அதிகாரம் 35 (துறவு) — குறள் 347, 350

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“துறவற வாழ்வு மேற்கொள்ள முடிவு செய்துவிட்டேன். அதற்குத் தாங்கள் எனக்கு வழங்கும் அறிவுரை என்னவோ?”

நடுத்தரமான வயதும் - நல்ல உடற்கட்டும் - விழிகளில் மங்காத ஒளியும் கொண்ட ஒருவன், வள்ளுவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டவாறு தலை வணங்கி நின்றான்.

“முற்றும் துறந்தவரே உயர்ந்த நிலைக்கு உரியவர். துறந்தவரைப் போல நடிப்போரை நான் துறவி என அழைக்கமாட்டேன். நடை, உடை, பாவனைகளால் தங்களைத் துறவியெனக் காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றுவோர் பெருகிவருகிறார்கள். அவர்களை நான் வெறுக்கிறேன். அவர்களிடம் அறிவைப் பகிர்ந்துகொடுக்கும் மக்களைக் கண்டு இரக்கம் கொள்கிறேன். துறவு என்பது வேடத்தில் இல்லை. முதலில் அதற்கு உள்ளம், பக்குவப்பட வேண்டும்.”

வள்ளுவர், துறவுபற்றித் தான் கொண்டுள்ள கருத்தைக் கோடிட்டுக் காட்டினார்.

“அதனால்தான் தங்களை நாடி வந்தேன். என் உள்ளம் பக்குவமடைய உற்றது கூறுவீராக.”

வள்ளுவர், மென்சிரிப்பொன்றைத் தவழவிட்டவாறு அவனைப் பார்த்துச் சொன்னார்.

“பற்றுக்களைப் பற்றிக்கொண்டு விடாதே! அப்படிப் பற்றிக்கொண்டால் துன்பங்களும் உன்னை விடாமல் பற்றிக் கொள்ளும்.”

இதைக் கூறிவிட்டு, இந்தக் கருத்துச் செழித்துக் குலுங்கும் குறளையும் பாடிக் காட்டினார்:

“பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு.”

குறளைக் கேட்டதும் வந்தவன், வள்ளுவப் பெருமகனாரை வணங்கி;

“பெரியீர்! இந்தக் குறள்மொழி போதும் என் துறவு நெறி காப்பதற்கு! விடையருள்க!” என்றான். “பற்றுக்களை அறவே விட்டு விடுவேன்” எனச் சூளுரைத்துக் கிளம்பிய அந்தப் புதுத் துறவியின் செவியில் வள்ளுவர் குரல் விழுந்தது. என்ன குரல் அது?

“பற்றுக!”

என்பதுதான் அந்தக் குரல்! அவன் திடுக்கிட்டுத் திரும்பினான். “இப்போதுதானே ‘பற்றினை விடுக’ என்றுரைத்தார்! அதற்குள் ‘பற்றுக’ என்கிறாரே. இரண்டென்ன முரண்பாடு?” என்று திகைத்து நின்றான்.

“பற்றுக்களை விட்டொழிப்பதற்கு ஒரு பற்றைப் பற்றவேண்டும். அதுவே துறவுக்குரிய இலக்கணம்.”

வள்ளுவர் விளக்கினார். வந்தவனுக்குப் புரியவில்லை! எந்தப் பற்றும் கூடாது என்கிறபோது, ஒரு பற்று மட்டும் எங்கிருந்து வந்தது? அவனே வினாக்குறியானான்.

“எதிலும் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ளவேண்டும். உன் பற்றுக்களை விட்டொழிப்பதற்கு அத்தகையோரிடம் நீ கொள்ளும் பற்றுத்தான் துணை நிற்கும்.”

குறளையும் பாடிக் காட்டினார் வள்ளுவப் பெருந்தகை:

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு.”

பற்று விடுதல் - பற்றினைக் கொள்ளுதல் - இரண்டுக்கும் கிடைத்த விளக்கமென்னும் ஒளி கொண்டு, துறவற வாழ்க்கையில் சிறந்து விளங்கினான் வள்ளுவரைக் காண வந்தவன்.

அதிகாரம் - 35 - துறவு; பாடல் - 347, 350

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்