பொருளடக்கம் 123 / 300
நகையுடையார் நல்கார்
அச்சுப் பக்கம் 269–270 · ஸ்கேன் 286–287 · அதிகாரம் 120 (தனிப்படர் மிகுதி) — குறள் 1199
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அவன் மீது உயிரையே வைத்திருந்தேன். அவனையும் என்னையும் யாராலும் எந்த சக்தியாலும் பிரிக்கமுடியாது என்று திடமாக நம்பி, அதன் காரணமாகப் பெருமை கொண்டிருந்தேன். அவன் வாழ வேண்டுமென்பதற்காக நான் நஞ்சு அருந்த வேண்டுமென நிர்ப்பந்தனை விதிக்கப்படுமேயானால், அதற்கும் உளமாரத் தயாராக இருந்தேன்.
அவனும் என்பால் கொண்டிருந்த அன்பு, அளவிட முடியாதது என்று நான் மட்டும் அல்ல; எங்களை அறிந்தவர்கள் அனைவருமே புகழ்ந்துரைத்தனர். பிறந்த மண்ணை
மீட்கும் போரில் அவன் முன்னணியில் நின்றான். நான் கணக்கில் முடியுமென எதிர்நோக்கிய போராட்டம் ஆண்டுக்கணக்கில் நடைபெறுகிறது.
என்னுடையவன் எந்தக் களத்தில் இருக்கிறான் என்ற செய்திகூட எனக்குக் கிட்டவில்லை. ஓரிரு மடல்கள் அவனிடமிருந்து வந்தன. அதன்பிறகு தொடர்பே இல்லை. அவன் பகைவர்களை எதிர்த்து முறியடித்து முன்னேறிக் கொண்டேயிருக்கிறான் என்று, களத்தில் ஊனமுற்றுத் திரும்பிய வீரர்கள் சிலர், எனக்கு அறிவித்தார்கள்.
அந்த வெற்றித் திருமகளின் அணைப்பில் என்னைக்கூட மறந்துவிட்டான் போலும் என்று நினைத்து உருகினேன். ஒரு செய்தி வந்தது; அவன் களத்தில் மார்பில் விழுப்புண் ஏற்று மடிந்துவிட்டான் என்று!
மற்றுமொரு செய்தி வந்தது; அவன் நெஞ்சில் வேல் தாங்கி விழுந்தது உண்மை! ஆனால், இறந்து போகவில்லையாம்! அவனைப் பகைவர்கள் சிறைப்பிடித்து மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்களாம். மறுத்தால் மரண தண்டனையென்று மிரட்டுகிறார்களாம். அந்தச் செய்தியைக்கூட அவன் எனக்கு எழுதவில்லை.
பகைவர்களிடம் அவன் கூறிவிட்டதாகக் கேள்விப்பட்டேன்: “சிறையில் செத்து மடிவேன்! அல்லது நீங்கள் என் சிரமறுத்தாலும் ஏற்றுக் கொள்வேன் புன்னகையுடன்! மண்டியிடுதல் - மன்னிப்பு - என்ற சொற்களுக்கு என் வாழ்க்கையில் இடமே இல்லை.” - இவ்வாறு என் மனம் கவர்ந்தவன், வீர முழக்கம் செய்தானாம்!
அவன் என்மீது அன்பு காட்டி, உயிர் மீண்டு வருகின்ற அளவுக்கு என்னிடம் இரக்கம் கொள்ளாவிட்டாலும் அவன் எதிரிகளிடம் சரணடையத் தயாராக இல்லை என்று ஊரும் உலகும் புகழுகிறபோது - அவன் என்னைப் பிரிந்திருப்பதைக்கூட மறந்துவிட்டு என் செவிகளில் இன்பம் பெருக்கெடுக்கிறது.
விரும்பிய காதலன் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும் அவரைப்பற்றிப் புகழக் கேட்பது என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
காதலனின் பிரிவால் ஏற்படும் துன்பத்தைக்கூட, அவனுக்குக் கிடைக்கும் புகழை எண்ணி அவளால் தாங்கிக்கொள்ள முடிகிறது என்பதை விளக்குகிறது; இதோ - இந்தக் குறள்:
“நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு.”
அதிகாரம் - 120 - தனிப்படர் மிகுதி; பாடல் - 1199
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்