பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 122 / 300

இடிப்பாரை இல்லாத

அச்சுப் பக்கம் 267268 · ஸ்கேன் 284285 · அதிகாரம் 45 (பெரியாரைத் துணைக்கோடல்) — குறள் 448

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இருவேறு நாடுகளைச் சேர்ந்த புலவர் பெருமக்கள் இருவர், தமிழ் விழா ஒன்றில் சந்தித்துக்கொண்டனர். அவர்களின் சந்திப்பு, விழாமேடைச் சந்திப்பாக மட்டும் அமையவில்லை. அவ்வாறு இருந்திருக்குமேயானால், நலம் விசாரிப்பதோடு அவர்தம் உரையாடல் முற்றுப் பெற்றிருக்கக்கூடும். விழாவில் இருவருமே விரிவுரையாற்றினர். வல்லினத்தில் உள்ள ‘த்’ என்ற எழுத்தும் மெல்லினத்தில் உள்ள ‘ம்’ என்ற எழுத்தும் இடையினத்தில் உள்ள ‘ழ்’ என்ற எழுத்தும் இணைந்தே ‘தமிழ்’ எனும் மொழிப்பெயர் உருவாயிற்று என்பதை ஒரு புலவர் விளக்கினார். முக்கனியில் ‘பலா’ வல்லினம் என்றும் ‘வாழை’ மெல்லினம் என்றும் ‘மா’ இடையினம் என்றும் மற்றொரு புலவர்

எடுத்துக் கூறினார். மூன்று கனிகளின் தோலையும் உள்ளேயிருக்கும் சுவை அல்லது பழத்தின் தன்மையையும் எடுத்துக்காட்டாகக் கொண்டு இனவகையை அவர் பிரித்துரைத்தார். விழா முடிந்த பிறகு, புலவர்களுக்கு விருந்தளிக்கப்பட்டது. அப்போது அவர்களிடையே நடைபெற்ற கருத்துரையாடல் வருமாறு:

“தங்கள் நாட்டு வளப்பமெல்லாம் எப்படி?”

“காலத்தில் மழை பொழிகிறது. வறுமைக்கு எங்கள் நாட்டில் வறுமை! மொழியினாலும், கலையினாலும் சிறந்தோங்கி நிற்கிறது. உழவும் வாணிபமும் உயர்ந்து விளங்குகின்றன. தங்கள் நாட்டு நிலை யாதோ?”

“தாங்கள் மொழிந்ததற்கு முற்றிலும் மாறுபட்ட நிலை. நாட்டு மக்கள் நடைப்பிணங்களாகத் திரிகிறார்கள். நீண்ட நாட்களுக்குப்பிறகு இன்றுதான் உங்கள் நாட்டைக் கண்டு மகிழ்ச்சியில் சற்று ஆறுதலடைகிறேன்.”

“மன்னர் எப்படியிருக்கிறார்?”

“எங்கள் நாட்டு மன்னனா? அவரை யாரும் அசைத்திட இயலாது. மிக்க வலிமை கொண்டவர். அவர் போக்கில் குறுக்கிடும் துணிவு யாருக்கும் கிடையாது.”

“அப்படியா! எங்கள் மன்னர், ஒரு சாதாரணக் குடிமகனின் கருத்தைக் கூடக் காது கொடுத்துக் கேட்பவராயிற்றே! உங்கள் மன்னர் முற்றிலும் மாறாக அல்லவோ இருக்கிறார்!”

“ஆமாம்! அவரை இடித்துப் பேசவோ அறிவுரை கூறவோ எங்கள் நாட்டில் யாருமே முன்வர மாட்டார்கள். உங்கள் நாட்டில் மிகச் சிறியவருக்கு இருக்கிற உரிமை, எங்கள் மண்ணில் மிகப் பெரியவருக்குக்கூடக் கிடையாது.”

“அய்யகோ! அயல் நாட்டொன்றில் இப்படியோர் அரசு நடைபெறுவது கண்டு வருந்துகிறேன். ஆனால், ஒன்று புலவரே! உமது மன்னன் எவ்வளவு வலிவுள்ளவனாக இருந்தாலும் அவனை அழித்திட யாரும் முன்வரத் தேவையில்லாமல் அவனே, தன் அழிவைத் தேடிக்கொள்வான்.”

“அஃதெப்படி? அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர்கள்?”

“வள்ளுவர் உரைத்திருப்பதை மறந்துவிட்டீரா? இடித்துச் சொல்லித் திருத்துகிற பெரியவர்களின் காவலைப் பெற்றிராத மன்னவன், தன்னைக் கெடுப்பவர் யாருமின்றித் தானே கெட்டழிந்து விடுவான் - என்று அழுத்தந் திருத்தமாக எழுதியிருக்கிறாரே!”

புலவர்களின் உரையாடல் முடிந்தது. இருவர் உள்ளத்திலும் அந்தக் குறள் அழியாத ஓவியமாக ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.

“இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்.”

அதிகாரம் - 45 - பெரியாரைத் துணைக்கோடல்; பாடல் - 448

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்