பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 121 / 300

தம்மில் இருந்து

அச்சுப் பக்கம் 265266 · ஸ்கேன் 282283 · அதிகாரம் 111 (புணர்ச்சி மகிழ்தல்) — குறள் 1107

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அம்மா அரிவை அவள்! ஆம்; அழகிய மாமை நிறத்தையுடையவள் என்று வள்ளுவர் அந்த நிறத்துக்குச் சிறப்புக் கூறுகிறார். மாம்பழ நிறத்துக்கும் மரகதக் கல்லின் நிறத்துக்கும் இடைப்பட்ட நிறம் போலும் அந்த நிறம். அந்தப் புது நிறப் பேரழகுப் பெட்டகத்தைத் தன் இல்லத்தரசியாகப் பெறுகிறான் கொடுத்துவைத்த குடுமிக்காளையொருவன். இல்வாழ்வின் இன்ப ஊற்று - உழைத்தலுக்குக் களைப்பினைப் போக்கும் கொம்புத்தேன் - ‘புணர்ச்சி மகிழ்தல்’ எனும் கட்டமன்றோ! இரண்டு உள்ளங்கள் பாலும் கற்கண்டுமாகி, ஈருடல்கள் பின்னலிட்டக் கூந்தல் போலாகி, கடவுளே ஒருவேளை எதிரே வந்து நின்று

“வேண்டுகிற வரம் தருகிறேன்” என்று அழைத்தாலும் விழித்திருந்து பார்க்காத நேரமன்றோ அந்த நேரம்!

புணர்ந்து மகிழ்ந்தனர் - அதனால் மகிழ்ந்து புணர்ந்தனர். மஞ்சத்தில் பரப்பிய மல்லிகை முல்லைகளுக்குச் சத்தம் போட்டு அழச் சக்தியில்லை. பாவம், நசுங்கியும் கசங்கியும் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டன. வாழ்வின் சுவையைத் தெவிட்டாது அனுபவித்து, அந்தக் காதலர் இரவை வாழ்த்திக் கொண்டிருந்தனர். கற்பகம் சேர்ந்த கணவனின் மார்பில் கனதனம் இரண்டும் வைத்து அப்புறம் உருவிற்றோ என்று அவன் முகத்தினை அவள் தடவிப் பார்த்தாள். அவனோ அவளது இதழ்க் கனிகளைப் பறிப்பதற்குத் தன் உதடுகளைப் பயன்படுத்தி அவற்றை மீட்க முடியாமல் தவித்தான். வீணைகளின் நரம்புகள் மீட்டப்பட்டன. இதயங்களின் துடிப்புகள் தாளங்களாக ஒலித்தன. இரண்டறக் கலந்த மூச்சு, இசையாகி ஒலித்துக்கொண்டிருந்தது.

மிகக் குறுகிய ஓய்வு! அந்த இடைவேளையிலும் அவன் கைகள், அவள் இடையைத் தழுவிக்கொண்டுதானிருந்தன.

அவள், அவனைப் பார்த்துப் புல்லாங்குழல் குரலில் கேட்டாள்.

“அத்தான்! இந்த இன்பம் எப்படியிருக்கிறது? இதற்கு ஏதாவது உவமை கூறமுடியுமா?”

அவன், அவளை இறுக அணைத்துக்கொண்டு விடையளித்தான்:

“கண்ணே! இதற்கு நிகராக வள்ளுவர், ஓர் இன்பத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.”

“என்னத்தான் வேடிக்கை! இதற்கு நிகரான இன்பமும் உள்ளதோ? அப்படியொன்றை வள்ளுவர் கூறியிருக்கிறாரா?”

“ஆமாம், தங்கம்! சொல்கிறேன் கேள்! ஒருவன், தன்னுடைய உழைப்பாலேயே ஒரு வீட்டைக் கட்டி, அதில் தானே பாடுபட்டுப் பொருளை ஈட்டிக்குவித்து, அப்படிக் குவித்த பொருளை மற்றவர்களுக்கும் பகுத்துக் கொடுத்து, தானும் உண்ணும் போது ஏற்படுகிற இன்பத்தை இந்த இன்பத்துடன் வள்ளுவர் ஒப்பிடுகிறார்.”

“அத்தான்! தன்னம்பிக்கையுடன் உழைத்தல், பயனை விளைத்தல், விளைத்த பயனைப் பிறர்க்கும் பகிர்ந்தளித்தல், எவ்வளவு சிறந்த இன்பம் என்பதை வள்ளுவர் எவ்வளவு அழகாகச் சித்திரித்திருக்கிறார்.”

“ஆமாம் என் உயிரே! புணர்ச்சி மகிழ்தலோடு இப்படியொரு புதுமைக் கருத்தை ஒப்பிட்டுக்காட்டிய புலவனை உலகில் வேறெங்கும் காண்பது அரிது!”

இப்படிக் குறளைப் புகழ்ந்தவாறு இருவரும் கூடிக்கலித்தனர். அந்தக் குறள்தான் இது:

“தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு.”

அதிகாரம் - 111 - புணர்ச்சி மகிழ்தல்; பாடல் - 1107

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்