பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 120 / 300

கழாஅக்கால் பள்ளியுள்

அச்சுப் பக்கம் 263264 · ஸ்கேன் 280281 · அதிகாரம் 84 (பேதைமை) — குறள் 840

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அது ஓர் எளிய குடும்பம்; எனினும் எல்லாவற்றிலுமே ஏற்றம் தவழும் குடும்பம்.

இல்லக்கிழத்தியோ தங்கச்சிலை; மங்கல விளக்கு! தன்னைப்போலவே தன் குடும்பமும் மங்கலம் நிறைந்ததாக - மற்றவர் வியந்து போற்றிடும் மலர்த் தோட்டமாக விளங்கிட வேண்டுமென்று நினைப்பவள்; அதற்காக உழைப்பவள்.

வாழும் வீடு சிறியதுதான். எனினும் அவளது விழிகளுக்கு ஒரு தூசும் பட்டுவிடக்கூடாது. அடிக்கடி குப்பைக் கூளங்களைப் பெருக்கித்தள்ளி வீட்டின் பொலிவைப் பெருக்கியவண்ணம் இருப்பாள்.

உடையாயினும், உறங்கிட உதவும் படுக்கையாயினும் கலையழகோடு அவளுக்குக் காட்சியளிக்க வேண்டும். அவற்றில் கறை ஏதும் இருந்திடக்கூடாது என்பதில் அவள் கருத்தாக இருப்பாள்.

ஆனால், அவளுடைய பிள்ளைகளில் ஒருவனோ தான்தோன்றியாக - தறுதலையாக - நடக்கக்கூடியவன். தாய்மைக்கும் அவனுக்கும் வெகுதொலைவு.

துப்புரவுக்கும் அவனுக்கும் ஒப்புரவு கிடையாது. என்றாலும், பிறர் குறையைப் பற்றிப் பேசவென்றால் அவனுக்குப் பொல்லாத ஆசை! பொழுதுபோக்கு!

தன் உடையிலும் உடலிலும் மலையளவு அழுக்கினைச் சுமந்துகொண்டு, அடுத்தவரிடம் உள்ள கடுகளவு கரும்புள்ளியைக் கடல் அளவாகப் பெருக்கிக் கூறுவது அவனுக்கு வாடிக்கை.

ஒருமுறை ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பிய அவன், நேரே படுக்கையறைக்குச் சென்றான். அங்கே சுவரை ஒட்டியுள்ள ஒரு தட்டிலிருந்து, ஏதோ ஒரு பொருளை எடுப்பதற்காகப் படுக்கைமீது ஏறினான்.

அரவம் கேட்ட அன்னை, அடுக்களையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவன் படுக்கையில் ஏறி நிற்பதைப் பார்த்ததும் பதறிப் போனாள். வேலையை அப்படியே போட்டுவிட்டு அடித்துக்கொண்டே ஓடி வந்தாள். அதற்குள் அவன் கீழே இறங்கிவிட்டான்.

ஆயினும் மல்லிகை விரிப்பைப்போலத் தூய்மையாக விளங்கிய அந்தப் படுக்கையோ, அவனது அழுக்கேறிய அடிச்சுவடுகளால் ஆங்காங்கு கறுப்புற்றம் பூசிக்கொண்டு கிடந்தது.

“ஏண்டா, உனக்கு எள்ளுமுனையளாவது பொறுப்பு வேண்டாமா? இப்படித் தான் அழகான படுக்கையை அலங்கோலமாக்குவதா? உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன், வெளியில் சென்று வந்தவுடன் கால்களைக் கழுவ வேண்டும் என்று. நாள்தோறும் கூறுகிறேனே; ஏன் இப்படித் திருந்தவே மறுக்கிறாய்?”

வருந்தி வசைபாடினாள் அந்தத் தாய்.

“நீ எவ்வளவுதான் அறிவுறுத்தி என்ன? அடித்துக்கொண்டு என்ன? தான்போன போக்கிலேயேதானே அவன் போய்க்கொண்டிருக்கிறான்! ஆனால், இத்தகைய இயல்பு கொண்டவனைப் பற்றியும் வள்ளுவர் சொல்லாமல் விடவில்லை. வெளியே சேறு போன்றவற்றை மிதித்துவிட்டு வந்த ஒருவன், தன் கால்களைக் கழுவாமலே படுக்கையை மிதித்துக் கறைப்படுத்துவது எதைப் போன்றதாம் தெரியுமா? சான்றோர்கள் குழுமியுள்ள ஒரு கூட்டத்தில் அறிவிலி ஒருவன், தனக்கு எல்லாம் தெரிந்திருப்பதைப்போலப் புகுவதைப் போன்றதாம்! அதைவிடப் பேதைமையே இல்லை என்கிறது குறள்! இனியாவது நம் பிள்ளை, அந்தப் பேதைமையிலிருந்து விடுதலை பெறுகிறானா என்று பார்ப்போம்.”

இவ்வாறு கூறிக்கொண்டே அவள் கணவன் உள்ளே நுழைந்தான்.

அந்தக் காட்சியை விளக்கும் ஓவியம்தான் இந்தக் குறள்:

“கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல்.”

அதிகாரம் - 84 - பேதைமை; பாடல் - 840

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்