பொருளடக்கம் 119 / 300
உய்த்தல் அறிந்து
அச்சுப் பக்கம் 261–262 · ஸ்கேன் 278–279 · அதிகாரம் 129 (புணர்ச்சி விதும்பல்) — குறள் 1287
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“ஊடல் ஊடல் என்று மிகவும் சிறப்பித்துப் பேசுகிறார்களே; ஊடலுக்குப் பின் ஏற்படும் கூடலுக்கு இணையான் இன்பம் எதுவுமே இல்லையென்று பெருமையாகக் கூறுகிறார்களே; அதையும் என் மனைவியிடம் அனுபவித்துப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசை எழுந்தது எனக்கு!”
என்றான் கிள்ளி என்பவன், தன் நண்பன் நல்லி என்பவனைப் பார்த்து! நல்லி, சிரித்துக்கொண்டே கேட்டான் - “முயற்சி செய்தாயா? அதில் வெற்றி கண்டாயா” என்று! “நான் நினைத்தது ஒன்று! நடந்தது ஒன்றாக முடிந்துவிட்டதப்பா!” என்றான் கிள்ளி, சோகத்துடன்!
“விபரமாகச் சொல்! உன் கதையைச் சிறிது சுவைக்கிறேன்.”
“வீட்டுக்குள் நுழையும்போதே முகத்தை வெறுப்பாக வைத்துக்கொண்டு நுழைந்தேன். ‘ஏன் இப்படி வாட்டமாக இருக்கிறீர்கள் கண்ணாளா?’ என்று என் மனைவி கேட்டாள் என்று எதிர்பார்த்தேன். அதை அவள் பொருட்படுத்த வேயில்லை. உணவருந்துவதற்கான தட்டினை எடுத்துவந்து கூடத்தில் பொத்தெனப் போட்டாள்! நான் எப்போதும் கலகலவென்று பேசிக்கொண்டே சாப்பிடுகிறவன், அன்று ஊமைபோல உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தேன்.”
“சாப்பிட்ட பிறகு படுக்கையறைக்குப் போயிருப்பாய். உன் மனைவி வந்திருப்பாள். படுக்கையில் வேறுபக்கமாகத் திரும்பிக்கொண்டு படுத்திருப்பாய்! அவள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு உன் தோளைத் தொட்டு இழுத்திருப்பாள்! பிறகு இருவரும் மாறிமாறி ஊடல் புரிந்திருப்பீர்கள். அதன் பின்னர்...”
“ஏய் நல்லி! சும்மா இரு! ஊடலாவது மண்ணாங்கட்டியாவது. நான் சொல்லி முடிப்பதற்குள் அவசரப்படுகிறாயே! அவள் என்னைத் தொடுவாள்! தூக்கத்தில் புரள்வதைப்போல என்மீது கையைப் போடுவாள்! நான் மேலும் ஊடல் விளையாட்டு நடத்தலாம்; பிறகு கூடலில் எல்லையற்ற இன்பம் பொங்கும் என்று நினைத்துத் தூங்குவதுபோலத் திரும்பிப் படுத்திருந்தேன். அவளிடமிருந்து எந்தவிதமான குறிப்பும் கிடையாது. பிறகு யோசித்தேன். அறையிலிருந்து வெளியேபோய்த் தாழ்வாரத்தில் குளிரில் படுத்துக் கொள்வோம்; அப்போது துடித்துப்போய் வந்து என்னை அழைத்துக்கொண்டு போவாள் என்று நம்பி, என் முடிவை - நடைமுறைப்படுத்தினேன்.”
“ஓ! சரியான ஆளடா நீ கிள்ளி! நீ தாழ்வாரத்தில் படுத்து, குளிரில் நடுங்குவதைக்கண்டு உன் மனைவி ஓடோடி வந்து உன்னைத் தழுவிக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றாராக்கும்!”
“ஓடோடி வந்தது உண்மை! வந்து என்ன செய்தாள் தெரியுமா? படுக்கையறைக் கதவைத் தாழிட்டுக்கொண்டு போய்ப் படுத்துவிட்டாள்!”
“அய்யய்யோ! உன் கதி? உன் ஊடல் என்ன ஆயிற்று?”
“என்ன ஆயிற்று! ஊதும் காற்றில் கையது கொண்டு மெய்யது போர்த்தி இரவு முழுதும் தாழ்வாரத்தில் தவித்தேன் - நன்றாகச் சளி பிடித்துக் கொண்டது!”
நல்லி, ஒலியெழுப்பிச் சிரித்தான். கிள்ளியின் முகத்தில் அசடு வழிந்தது. இருவரும் பேசிக்கொண்டே ஆற்றங்கரைக்கு நடந்து கொண்டிருந்தனர்! ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்போது ஒருவன் “இந்த வெள்ளத்தில் நீச்சல் அடிக்கப் போகிறேன்” என்று அறைகூவல் விடுத்தவாறு ஆற்றில் குதித்து நீந்தினான். சில நொடிகளில் அவனை வெள்ளம் இழுத்துச் சென்றுவிட்டதைக் கிள்ளியும் நல்லியும் கண்டனர்.
“என்னப்பா இது? இவ்வளவு முட்டாளாக ஆகிவிட்டான்! வெள்ளத்தின் வேகம் தெரிந்திருந்தும் நீச்சலடிக்கச் சென்று சிக்கிக்கொண்டானே; பாவம்!” என்றான் கிள்ளி!
“நீ ஊடல் நடத்திய கதைதான் இதுவும்! நண்பா! ஆற்று வெள்ளம் அடித்துச் செல்லும் என்று தெரிந்தும் அதில் நீச்சல் அடிக்கப் பாய்பவனைப் போலத்தான், தன் ஊடல் பயன்தராது எனத் தெரிந்தும், ஊடல் செய்ய முனைகிறானே; அவன் நிலையும் இப்படித்தான் ஆகிவிடும் என்று வள்ளுவர் எழுதிய குறளை நீ படித்ததில்லையா?” என்று கேட்டான் நல்லி!
“உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து.”
அதிகாரம் - 129 - புணர்ச்சி விதும்பல்; பாடல் - 1287
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்