பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 118 / 300

நுனிக்கொம்பர் ஏறினார்

அச்சுப் பக்கம் 259260 · ஸ்கேன் 276277 · அதிகாரம் 48 (வலியறிதல்) — குறள் 476

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நெட்டிலிங்க மரம் என்பது, தேக்கு மரம்போல உயரமாக வளரக்கூடியது. ஆனால், அவ்வளவு உறுதியாகத் திகழக்கூடிய மரமல்ல. நெட்டிலிங்கத்தழை, இலையும் கொப்புமாகத் தளதளவென்று வளமாக இருக்கும். விழாக் காலங்களில் வரவேற்பு வளைவுத் தூண்களில் அந்தத் தழையை அழகுக்காகக் கட்டுவது வழக்கம். இளமைப் பருவத்தில் மாணவர் அணியினைத் திரட்டி, தமிழ்காக்கும் விழாவொன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தேன். நிகழ்ச்சிகளுக்கான எல்லா ஆக்கப் பணிகளிலும் நண்பர்களுடன் நானும் கலந்துகொண்டேன். விழா அறிவிப்புக்களை மக்களிடையே செய்வதிலிருந்து, விழாச் சிறப்புறப் பந்தலை அலங்கரிப்பது வரையில் முன்னின்று காரியங்களைக் கவனித்தேன். அந்த வேலைகளில் ஒன்றாக நெட்டிலிங்கத்தழை வெட்டிவரும் வேலையும் அமைந்தது. நானும் நண்பர்களும் ஆற்றோரமிருந்த நெட்டிலிங்க மரங்களை நாடி இரவு நேரத்தில் சென்றோம்.

மரம் ஏறித் தழைகளை ஒடித்துப்போட ஓர் ஆளையும் கூப்பிட்டுக்கொண்டு சென்றோம். அந்த ஆள் நன்கு குடித்திருந்திருக்கிறான். மளமளவென்று மரத்தில் ஏறித் தழைகளை ஒடித்துப் போட்டுக்கொண்டேயிருந்தான். நாங்கள் கீழேவந்து விழும் தழைகளையெல்லாம் கொப்புகளோடு சேர்த்துப் பொறுக்கி ஓர் இடத்தில் குவித்துக்

கொண்டிருந்தோம். அந்த ஆள், சிறிது சிறிதாக மரத்தின் நுனிவரையிலே சென்று தழைகளை ஒடித்துத் தள்ளிக் கொண்டிருந்தான். எங்களுக்கு ஒரே மகிழ்ச்சி. விழாப்பந்தலைச் சீரோடு அமைக்க வேண்டிய தழைகள் கிடைத்து விட்டன என்பதில் அளவுகடந்த உற்சாகம். அப்போது மரத்தின் உச்சியிலிருந்து அந்த ஆள் குரல் கொடுத்தான். நாங்கள் திடுக்கிட்டு விழிகளை மரத்தின் நுனிப்பக்கம் திருப்பினோம். அவன் சொன்னான்:

“நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்த்தீர்களா? இப்போது இதைவிட உயரத்துக்குப் போகப் போகிறேன்.”

கீழே நின்ற நாங்கள், அவன் பேச்சைக்கேட்டு அலறிவிட்டோம்.

“ஏ! ஏ! நீ மரத்தின் உச்சியில் இருக்கிறாய். அதற்குமேல் போக இடமில்லை. தயைகூர்ந்து இறங்கிவிடு” என்று கெஞ்சினோம். அவனோ குடி வெறியில் இருக்கிறான். எங்கள் வேண்டுகோள் அவன் காதில் விழவில்லை.

“இதோ பாருங்கள்! இதுதான் மரத்தின் நுனி! இதற்குமேலே ஏறப்போகிறேன்!”

இப்படிச் சொல்லிக்கொண்டேயிருக்கிறான். அவன் சொன்னதைச் செய்திருப்பானேயானால் மரத்தின் உச்சிக்கு மேலே போயிருக்கமாட்டான். மண்ணின் அடித்தளத்தில் இடம் தேடிக்கொண்டிருப்பான். எப்படியோ ஒருவகையாக நாங்கள் அவனை மரத்திலிருந்து கீழே இறங்கச் செய்தோம். தழைகளைக் கட்டித்தூக்கிக்கொண்டு விழாப்பந்தலுக்கு வந்து சேர்ந்தோம்.

“நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும்.”

என்ற குறள் எவ்வளவு பொருத்தமாக விளங்குகிறது, அந்த நிகழ்ச்சியை நினைத்திடும்போது! ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர் அதையும் தாண்டி மேலும் ஏற முனைந்தால், அதுவே அவரது உயிருக்கு முடிவாக அமைந்துவிடும்.

மரம் - நுனிக்கொம்பு - அதனையும் கடந்து ஏற நினைத்தல் - ஆகியவற்றை வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் ஒப்பிட்டுப் பார்த்து வலிமையை அறிந்து நடந்திடவேண்டும் என்பதே அக்குறள் மொழியின் கருத்தாகும்.

அதிகாரம் - 48 - வலியறிதல்; பாடல் - 476

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்